2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இன்று இறுதி தீர்ப்பு!

Thipaan   / 2015 ஜனவரி 08 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து நாட்கள் நீண்டு செல்லும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியொன்று இறுதி நாளின் இறுதிப்பந்து வீசப்படும் வரையில் பரபரப்போடும், சுவாரஸ்யத்தோடும் நகர்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான், இலங்கையின் 7ஆவது ஜனாதிபதித் தேர்தல்களமும் இருக்கின்றது.

வடக்கு-கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப்பகுதி மக்களும் புதிய எதிர்பார்ப்போடு இன்று (ஜனவரி 08,2015) நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நவம்பர் 20, 2014 முதல் என்று எடுத்துக்கொண்டாலும் சுமார் 50 நாட்களாக நீண்டு வந்த கட்சி தாவல்கள், தேர்தல் பிரசாரக்கூட்டங்கள், அத்துமீறல்கள், ஊடகங்களில் பெருமெடுப்பில் வெடித்த அரசியல் விவாதங்கள் என்ற தேர்தல் கால பரபரப்புக்களுக்குப் பின் மக்களின் கைகளில் இறுதித்தீர்ப்பு எழுதும் வாக்குச்சீட்டு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அவர்களின் மனங்களை வென்றவர் யார்? 'தெரியாத தேவதையா, தெரிந்த பிசாசா?' நாளை மதியமளவில் தெரிந்துவிடும்.

அரச ஊடகங்கள் மாத்திரம் செல்லும் தென்னிலங்கைக் கிராமங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான அபிமானம் என்பது 'எமக்கு வாழ்க்கை நடத்துவதில் சிக்கல் இருந்தாலும், நாட்டைக்காப்பாற்றியவர்' என்கிற அளவில் இன்னமும் தொடர்கின்றது. மறுபுறுத்தில், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மாற்றத்தைக்கோரும் மக்களின் பெருமெடுப்பிலான ஆதரவும் இருக்கின்றது.

இனவாத உணர்வூட்டல்களை இந்த ஜனாதிபதித் தேர்தலும் கொண்டிருந்தது. ஆனால், அது அவ்வளவுக்கு இறுதி வெற்றியை ஈட்டித்தரும் காரணியாக இம்முறை இருக்கவில்லையோ என்று தோன்றுகின்றது.

குறிப்பாக, இளைஞர்களிடம் இனவாத சிந்தனைகள் அவ்வளவுக்கு எடுபடவில்லை என்பது இனவாத அடிப்படைகளில் மாத்திரம் தேர்தலை எதிர்கொண்டவர்கள் சந்தித்த பெரும்பின்னடைவு. சமூக ஊடகங்களில் இனவாத சிந்தனைகளுக்கு எதிராக சிங்கள இளைஞர்களின் எதிர்வினை பெருமெடுப்பில் இருந்தது. இது, சரியான அரசியல் போக்கின் அடுத்த கட்டம் நோக்கிய பாய்ச்சல் என்று கொள்ளமுடியும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கியஸ்தரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன, நவம்பர் 21, 2014 பிற்பகலில் பொது எதிரணியோடு இணைந்து கொண்டமை பொது எதிரணிக்கான முதல் சுற்று வெற்றியைப் பதிவு செய்தது. அது, இரண்டாவது கட்ட வெற்றியை நோக்கியும் உந்தித்தள்ளியது.

இரண்டாது சுற்று மோதல் காலம் என்பது பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டங்கள் முடிவுற்ற கடந்த 05ஆம் திகதி நள்ளிரவு வரை என்று கொள்ள முடியும்.

இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் 26 பேர் எதிரணியோடு இணைந்திருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷவினால் இரண்டு பேரை மாத்திரமே எதிரணியிலிருந்து தன்னோடு இணைத்துக் கொள்ளமுடிந்திருக்கின்றது. மாகாண சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் அரசாங்கத்திலிருந்து 400க்கும் அதிகமானோர் வெளியேறியிருக்கிறார்கள்.

கட்சி தாவல்களுக்கு அடுத்து முக்கிய விடயமாக மாறியது தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள். பொது எதிரணி எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் அவர்களின் கூட்டங்களில் அணி வகுத்தார்கள். அது, தென்னிலங்கையிலும் அதிகமென்பதுதான் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

தனிப்பட்ட ரீதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மைத்திரிபால சிறிசேன பலமான எதிராளி அல்ல. மஹிந்த ராஜபக்ஷவின் கம்பீரமான தோற்றம் மற்றும் ஆளுமை மிக்க குரலின் முன்னால் மைத்திரிபால சிறிசேனவினால் ஒன்றுமே செய்து கொள்ளமுடியாது என்பது வெளிப்படை. ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் கரங்களில் ஊழல் கறைகள் பெருமளவு இல்லையென்பது அவரை ஓரளவுக்கு முன்னிறுத்தியது.

அத்தோடு, பொது எதிரணி என்ற ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க, அத்துரலிய ரத்ன தேரர், சோபித தேரர், சரத் பொன்சேகா, சஜித் பிரேமதாஸ என்ற முக்கியஸ்தர்களின் பக்க பலம் அவரை மஹிந்தவுக்கு சரியான போட்டியாளராக மாற்றியது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின் மஹிந்த ராஜபக்ஷ அரசியலரங்கில் எதிர்கொள்ளும் பலமான எதிராளி 'பொது எதிரணி'யின் மைத்திரிபால சிறிசேன. எதிர்காலத்தில் அவருக்கு அப்படியான வாய்ப்பொன்று இல்லாமற்கூடப் போகலாம்.

போர் வெற்றி மற்றும் அபிவிருத்திக் கோஷத்தினை முன்மொழிந்து மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்கள் என்று தொடர்ச்சியாக பல தேர்தல்களை மிக இலகுவாக வெற்றி கொண்டு வந்தார்.

அது அதிக தருணங்களில் எதிராளியே இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றியீட்டும் தேர்தல் போன்ற அளவுக்கு இருந்தது. ஆனால், அந்த விடயத்தை மாற்றியமைத்த தேர்தல்கள் என்று வடக்கு மாகாண சபைத் தேர்தலையும், ஊவா மாகாண சபைத் தேர்தலையும் கொள்ள முடியும்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வெற்றி கொள்ள முடியாது என்று தெரிந்தாலும், தோல்வியின் காயம் மிகமிக பெரிதாகும் என்பது அவ்வளவுக்கு எதிர்பார்க்காதது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சி பீடமேற்றிய வடக்கு (கிழக்கு) தமிழ் மக்கள், வடக்கு மாகாண சபைத் தேர்தலினூடு அவரின் எதிர்காலம் பற்றிய செய்தியைச் சொன்னார்களோ என்று கொள்ள வேண்டியிருக்கின்றது.

ஏனெனில், அதற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கொண்ட ஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்பார்க்காத அளவிலான இடையூறுகளை கொண்டதாக அமைந்தது.

ஊவா மாகாண சபையை வெற்றி கொண்டாலும் அங்கு கண்ட பின்னடைவு எதிரணியின் பெரும் எழுச்சிக்கு காரணமானது. அதுதான், ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளலாம் என்று எதிரணிக் கட்சிகளுக்கு நம்பிக்கையைக் கொடுத்து பொது எதிரணியின் உருவாக்கத்திற்கும் அதிகம் காரணமானது. அதுவே, இன்று, மிகவும் தீர்க்கமான ஜனாதிபதித் தேர்தலில் பெரும் சிக்கலை எதிர்கொள்ள வைத்திருக்கின்றது.

இலங்கையின் தேர்தலில்களில் இனவாதமும், மதவாதமும் எப்போதுமே  கோலொச்சி வரும் கருவிகள். ஆனால், போர் வெற்றிக் கோஷம் என்பது பல்லாண்டுகள் தாண்டி வெற்றிகளைப் பெற்றுத்தரும் கருவி அல்ல. ஏனெனில், மக்களுக்கு வாழ்க்கையைக் கொண்டு செல்லும் அடிப்படைப் பிரச்சினை மேலோங்கியுள்ளது.

அது, இந்தத் தேர்தலில் இனவாத உணர்வூட்டல்களே குறிப்பிட்டளவில் வீழ்ச்சியடைய வைத்திருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அணி திரளும் மக்களை அப்படியே வசீகரித்து தக்க வைக்கும் பேச்சாளர்களும் இம்முறை குறைந்த அளவிலேயே இருந்தார்கள். திரும்பத்திருப்ப பேசப்படும் போர் வெற்றி வாதத்தினையும், அபிவிருத்திக் கோஷத்தினையும் தவிர்த்து மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசுபவர்கள் இல்லை.

இலங்கை அரசியலரங்கில் பெரும் பேச்சாளராக வலம் வந்த விமல் வீரவங்ச இன்றைக்கு மதிப்பிழந்து காணப்படுகின்றார். அவரின் பேச்சின் பின்னால் அணி திரள்வதற்கு மக்கள் அவ்வளவுக்கு தயாராக இல்லை. ஊடகங்களில் தொடர்ச்சியாக மல்லுக்கட்டி வந்த கெஹலிய ரம்புக்வெல, டளஸ் அழகப்பெருமா போன்றவர்களினால் மக்களை கவரும் அளவுக்கு பேச முடியவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தன்னுடைய பிரச்சாரங்களின் அதிக பங்கையும் எடுத்துக் கொண்டு பேச வேண்டியிருந்தது. அது அவரை ஒரு கட்டத்தில் ரொம்பவே களைத்துப் போகச் செய்துவிட்டது. சில முக்கிய பரப்புரைக் கூட்டங்களில் அவரின் பழைய ஆளுமை மிக்க உரையைக் காண முடியவில்லை. 'தங்களின் ஜனாதிபதி' என்ற விடயத்துக்காகவே அங்கு திரண்டிருந்த சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் அவருக்காக கைகளை உயர்த்தினர்.

தொலைக்காட்சி விவாதங்களை எடுத்துக் கொண்டால் அங்கும் பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் கோலொச்சிக் கொண்டிருந்தார்கள். சுஜீவ சேனசிங்க, பட்டாலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்கள் அதிக விவாதங்களில் வெற்றியாளர்கள் போல வலம் வந்தார்கள். அவர்களோடு விவாதிப்பதற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களினால் முடியவில்லை. அதிகமாக இறுதிய முகத்தோடு உட்கார்த்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் 2010 ஜனாதிபதித் தேர்தலின் போது பெரும் ஆர்ப்பரிப்போடு இருந்தவர்கள்.

இன்னொரு பக்கம் பொது எதிரணியோடு இணைந்து கொள்ளாவிட்டாலும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற விடயத்தை முன்வைத்து தேர்தல் களமாடும் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கின்றது.

குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க 'ராஜபக்ஷக்களின் ஆட்டம்' என்ற விடயத்தைப் பற்றியே பாராளுமன்றம், தொலைக்காட்சி விவாதங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். இந்தத் தேர்தலில் அனுரகுமார திஸ்ஸநாயக்கவின் பேச்சைக் கேட்பதற்காக பெரும் கூட்டம் கூடியது. மக்கள் விடுதலை முன்னணி இழந்திருந்த மக்கள் அபிமானம் மீண்டும் மெல்ல அதிகரிப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களுக்கான வெளியிடங்களில் இருந்து அதிகளவானோர் பேரூந்துகளில் அழைத்து வரப்பட்டார்கள் என்கிற விடயம் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்திற்காக 1200க்கும் அதிகமான பேரூந்துகளில் வெளியிடங்களிலிருந்து மக்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிக் கொண்டிருந்தன.

ஆனால், ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்த பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் அவ்வளவு ஆர்ப்பரிப்போடு கலந்து கொண்டிருக்கவில்லை என்பது உண்மை. அதுவும், இறுதி நாட்களில் மக்களின் வருகை பெருமளவு குறைந்திருந்தது.

பொது எதிரணியின் பிரச்சாரக் கூட்டங்களில் அதிகளவான மக்கள் தானாகவே சேர்ந்தார்கள். அங்கு, பேரூந்துகளுக்கு அதிகம் வேலையிருக்கவில்லை. ஆனாலும், அந்த மக்கள் வெள்ளம் வாக்குகளாக மாறுமா என்பது மெல்லிதான கேள்வியாகவே இருக்கின்றது.

ஏனெனில், மைத்திரிபால சிறிசேனவின் வருகை பற்றிய புதினங்களை அறிந்து கொள்வதற்காக அதில் குறிப்பிட்டளவானவர்கள் கலந்து கொண்டிருக்கலாம். மைத்திரிபால சிறிசேனவின் இறுதி நாட் பிரச்சாரக் கூட்டங்களில் காலியில் இடம்பெற்ற கூட்டம் கவனம் பெற்றது. காலியில் இவ்வளவு மக்கள் கூட்டத்தை பொது எதிரணியினால் சேர்க்க முடிந்தது மைத்திரிக்கான நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கலாம்.

தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களிடையேயும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டங்கள், விவாதங்கள் என்பனவும் குறிப்பிட்டளவில் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, கிழக்கில் முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதியில் ஆர்ப்பரிப்போடு பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. தமிழ்ப் பகுதிகளில் அவ்வளவு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. வடக்கில் மஹிந்த ராஜபக்ஷவும், மைத்திரிபால சிறிசேனவும் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டிருந்தனர். மலையகத்தைப் பொறுத்தளவில் இரண்டு அணிகளும் தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தன.

வடக்கு- கிழக்கிலுள்ள பெரும்பான்மை வாக்குகள் யாருக்கென்று வெளிப்படையாகத் தெரிந்த பின், மலையகத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைக் கைப்பற்றுவதில் இரண்டு அணிகளுக்கிடையிலும் பெரும் போட்டி இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு இருக்கின்ற சிறுபான்மையினரின் ஒரேயோரு பெரும் கட்சி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ். அந்த விடயம் மலையகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டங்களில் ஓரளவுக்கு பிரதிபலித்தது. அதனை உடைத்து எதிரணிப் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதில் பொது எதிரணியில் உள்ள தலைவர்கள் பெரும் பிரயத்தனங்களை எடுத்தனர். கொழும்பிலுள்ள தமிழ் பேசும் சமூகத்தில் வாக்குகளும் யாருக்கானது என்பது வெளிப்படையாக தெரிந்ததால் அது பெரியளவில் பேசும் விடயமாக மாறவில்லை.

ஆனால், இவ்வளவு கட்டங்களையும் தாண்டி அரச ஊடகங்கள் (தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை என்று அனைத்தும்) தேர்தல் நாளான இன்று வரையில் செலுத்தும் தாக்கம் தென்னிலங்கையில் அதிகம். தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடுகளில் அரச ஊடகங்கள் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும், அதனைத் தாண்டியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பரப்புரைகளை கனகச்சிதமான முன்னெடுத்தன. அது, தேர்தல் நாளான இன்றும் வேறு வடிவங்களில் தொடர்கின்றன.

இரண்டாவது சுற்று மோதலிலும் ஒப்பீட்டளவில் பொது எதிரணி சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், முதல் இரண்டு சுற்றில் வெற்றி பெற்றாலும் இறுதிச் சுற்று வெற்றியே ஜனாதிபதித் தேர்தலில் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்கிற ரீதியில் பெருமளவிலான எதிர்வு கூறல்களைச் செய்ய முடியாது. ஏனெனில், இறுதி வெற்றியை மக்களின் வாக்குகள் மட்டுமே பல நேரங்களில் தீர்மானிப்பதில்லை என்ற விடயமும் துருத்திக் கொண்டிருக்கின்றது. இன்று நடைபெறும் தேர்தல் நீதியாகவும், நியாயமானதுமாக இருக்க வேண்டும். அதில், மக்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். அதுதான், அடிப்படை எதிர்பார்ப்பு. அதுவே, ஜனநாயகத்தினை தொடர்ந்தும் தக்க வைக்க உதவும்!

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X