2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அ.தி.மு.க.வை திணற வைக்கும் பா.ஜ.க. வியூகம்?

Thipaan   / 2015 ஜனவரி 13 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் பிரதான கட்சியாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் (அ.தி.மு.க.) பாரதிய ஜனதா கட்சிக்கும் (பா.ஜ.க.) இனம்புரியாத பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியிலிருந்துதான் நாம் பிரித்து எடுக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் விருப்பம் போல் தெரிகிறது. அந்த வகையில் இரு தரப்பிற்கும் நடைபெறும் போட்டி தமிழக அரசியல் களத்தில் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு 'அம்மா சீமெந்து' என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. வெளி மார்க்கெட்டில் சீமெந்து விலை அதிகமாகி விட்டதைத் தொடர்ந்து மலிவு விலையில் மக்களுக்கு சீமெந்து கிடைக்க ஏற்பாடு செய்வதே இத்திட்டத்தின் சிறப்பம்சம். முதலில் நான்கு, ஐந்து இடங்களில் தொடங்கிய இத்திட்டம் தொடங்கிய ஒரு வாரத்துக்குள் தமிழகம் முழுவதும் 385 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

வெளி சந்தையில் சீமெந்து மூட்டை ஒன்றுக்கு 380 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் போது தமிழக அரசுக்குச் சொந்தமான 'அரசு சீமெந்து நிறுவனம்' மூலம் சீமெந்து மூட்டை ஒன்று 190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இத்திட்டத்தை தொடங்கி, அதை ஜெட் வேகத்தில் விரைவுபடுத்திய சந்தரகாந்த் காம்ப்ளே என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திடீரென்று மாற்றப்பட்டுவிட்டாலும், இத்திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் என்பதே அனைவரின் கருத்து.

ஆனால், இத்திட்டத்தை 'தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு வந்துள்ள திட்டம்' என்று பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர்களில் முக்கியமானவரான இல.கணேசன் கருத்து தெரிவித்திருந்தார். இதுவரை இது போன்ற தாக்குதல்களுக்கு அந்தத் தலைவர்களுக்கு மட்டுமே பதிலடி கொடுத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க. இப்போது பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் நேரடியாக வம்புக்கு இழுத்திருக்கிறது.

அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடு 'நமது எம்.ஜி.ஆரின், கறுப்பு பணத்தை மீட்டு வந்து வீட்டுக்கு வீடு 15 இலட்சம் ரூபாய் பரிமாறப்போறோம் என்று தாமரை (பா.ஜ.க.வின் சின்னம்) மாநாட்டில் ராஜ்நாத் சிங் பிரகடனம் செய்தாரே அது எதற்காக? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. அத்துடன் விடவில்லை.

 'நாடெல்லாம் நமோ டீ கடை திறந்ததும்' 'நமோ மீன் கடை போட்டதும்' 'மோடி முகத்தை பொறித்து புடவைகளை புழக்கத்தில் விட்டிருப்பதும் எதற்காகவோ?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. அதை விட கூர்மையான ஒரு கண்டனத்தையும் அ.தி.மு.க., பா.ஜ.க. மீது வைத்துள்ளது. அதாவது 'இராமர் கோயில் பிரச்சினை தீர்ந்தால் அக்கட்சியால் அரசியல் நடத்த முடியாது' என்பதுதான் அது. 'இராமர் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது' என்று இராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக குரல் எழுப்பிய முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துக்கு மாறாக இப்போது அவரது கட்சி பத்திரிக்கையிலேயே 'இராமர் கோயிலை வைத்து பா.ஜ.க. அரசியல் நடத்துகிறது' என்று தாக்குதல் தொடுத்திருப்பது அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான யுத்தத்தின் உச்சகட்டம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க., 'மிஸன்-122' என்ற தாரகமந்திரத்தை முன் வைத்து களத்தில் இறங்குகிறது. தமிழக சட்டமன்றத்துக்கு உள்ள 234 தொகுதிகளில் செல்வாக்குள்ள 122 தொகுதிகளைத் தேர்வு செய்து, ஆட்சியமைக்கத் தேவையான 114 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது பா.ஜ.க.வின் வியூகம். ஆனால் இந்த 122 தொகுதிக்குள் அதிக செல்வாக்குள்ள தொகுதிகளைக் கண்டறிந்து அவற்றில் 50 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்து தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி என்பது அக்கட்சி மேலிடத்தின் செயற்றிட்டம்.

இந்த செயற்றிட்டம் தெரிந்ததால்தான் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. மீது கடுங்கோபம் உருவாகியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேன்முறையீடு செய்துள்ள நிலையில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிக்கும் குறிவைத்து பா.ஜ.க. தமிழகத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள், வியூகங்கள் எல்லாம் அக்கட்சியை எரிச்சலடைய வைத்துள்ளது.

இதன் வெளிப்பாடுதான் சமீப காலமாக அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடி மோதல் தமிழக அரசியலில் துவங்கியிருக்கிறது. இதுவரை கட்சி ரீதியான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தவர்கள், இப்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தங்கள் தாக்குதலை விரிவுபடுத்துகிறார்கள்.

இத்தனைக்கும் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 'அபராதம்' செலுத்தி, அதை வருமான வரித்துறையும் ஏற்றுக்கொண்டு, அது தொடர்பாக சென்னை எக்மோர் நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்த கிரிமினல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு இப்படி பா.ஜ.க. தலைவர்கள் மீதான தாக்குதலை அ.தி.மு.க. அதிகப்படுத்தியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க.வினரை திகைக்க வைத்துள்ளது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் அ.தி.மு.க. பல்வேறு ஏவுகணைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பது முதல் பிரச்சினை. அடுத்து தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான தி.மு.க.வின் அரசியலை சமாளிக்க வேண்டியது. தன் வாக்கு வங்கியுடனேயே இணைந்திருக்கும் பா.ஜ.க.வின் அரசியலை சமாளிக்க வேண்டியது திடீரென்று அ.தி.மு.க. தலைமைக்கு உருவாகியுள்ள நிலைமை. இந்த மூன்று வியூகங்களையும் எப்படி உடைத்துக்கொண்டு அ.தி.மு.க. வெளியே வரப் போகிறது? அடுத்த 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறது? என்பதுதான் இனி வரும் காலங்களில் அக்கட்சியின் முன் உள்ள முக்கிய சவால்கள்.

இந்த மூன்று சவால்களில் பெங்களூர் வழக்கை சந்திப்பது சட்ட ரீதியானது. தி.மு.க.வை சந்திப்பது அரசியல் ரீதியாக அக்கட்சி ஏறக்குறைய 1977 சட்டமன்றத் தேர்தலில் இருந்து கடைப்பிடித்து வரும் வியூகம். தி.மு.க.வுக்கு 'நாங்கள்தான் மாற்று' என்பதை தி.மு.க. ஆட்சியிலிருந்த நேரங்களில் எல்லாம் தவறாமல் நிரூபித்து வந்திருக்கிறது அ.தி.மு.க. டான்சி வழக்கில் சிறை தண்டனை பெற்று தேர்தலை சந்தித்த நேரத்தில் கூட இது போன்ற வியூகத்தினால்தான் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடாமலேயே 2001 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா.

ஆனால,; பா.ஜ.க.வின் அரசியலை எதிர்கொள்வதில்தான் இடியாப்பச் சிக்கல். அக்கட்சியினரின் தமிழக வாக்கு வங்கி அ.தி.மு.க. மீது பாசமாக உள்ள வாக்கு வங்கி. தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடுகின்ற நேரங்களில் கூட அந்த வாக்காளர்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று கருதி அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களித்து வந்தார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட அ.தி.மு.க. 37 எம்.பி.க்களைப் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது.

அப்படிப்பட்ட வாக்கு வங்கியைப் பகைத்துக்கொண்டு பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதில்தான் அ.தி.மு.க.வுக்கு சிக்கல் முளைத்திருக்கிறது. அ.தி.மு.க. மீது பா.ஜ.க. வாக்கு வங்கிக்கு எப்படி பாசமிருக்கிறதோ அதேபோல் அ.தி.மு.க. வாக்கு வங்கிக்கும் பா.ஜ.க. மீது ஓரளவு பாசம் இருக்கிறது. அதை உடைத்து அ.தி.மு.க. வாக்கு வங்கியை பா.ஜ.க.வுக்கு முற்றிலும் பகை வாக்கு வங்கியாக மாற்றுவது அ.தி.மு.க.வுக்கு மிக முக்கியமான அதே சமயத்தில் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அப்படி சிக்கியிருக்கும் அ.தி.மு.க. இப்போது நேரடியாக பா.ஜ.க. தலைவர்களை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக அகில இந்தியத் தலைவர்களை விமர்சிக்கிறது.

அடுத்து வரப்போகும் வாரங்களில் இந்த விமர்சனம் இன்னும் எவ்வளவு தூரம் வீரியம் பெறப் போகிறது? வாக்காளரைப் பொறுத்தமட்டில் இதுவரே ஒரே துருவம் என்று கருதிய அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும். அதில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு அப்பீல் எவ்வளவு அ.தி.மு.க.வுக்கு முக்கியமானதோ, அதே மாதிரி ராஜ்ய சபையில் இருக்கும் அ.தி.மு.க. எம்.பி.க்களின் எண்ணிக்கையும் பா.ஜ.க.வுக்கு மிக முக்கியம். முன்னது 'மாநில அரசியலுக்கு' அவசியம் என்றால், பின்னது 'புதுடெல்லி அரசியலுக்கு' அவசியம். ஏனென்றால் முக்கிய மசோதாக்கள் ராஜ்ய சபையில் நிறைவேற்ற அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் ஆதரவு பிரதமர் நரேந்திர மோடி அரசுக்குத் தேவை என்ற யதார்த்தம் 'அவசரச் சட்டங்களுக்கு' மற்ற கட்சிகளிடமிருந்து கிளம்பியுள்ள எதிர்ப்பு உறுதி செய்கிறது.

இரு கட்சிகளுக்கும் 'கண்ணாமூச்சி' ஆட்டத்தில் இருந்து இப்போது நேரடி மோதல் துவங்கி விட்டது. அதன் 'விஸ்வரூபம்' எப்படியிருக்கப் போகிறது என்பது இனி வரும் காலங்களில் பிரகடனமாகும்!

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X