2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தோல்வி கக்கும் இனவாதம்!

Gavitha   / 2015 ஜனவரி 14 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்

இலங்கையில் ஆட்சி மாற்றமொன்று நிகழ்ந்திருக்கிறது. சர்வ வல்லமையும் பொருந்திய நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் வரை, இவ்வாறான ஆட்சி மாற்றமொன்று நாட்டில் நிகழும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன், புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரத்துடன் என்றைக்குமே தோற்கடிக்கப்பட முடியாதவர் என்கிற தோரணையில் வலம் வந்த மஹிந்த ராஜபக்ஷ இன்றைக்கு முன்னாள் ஜனாதிபதியாகியிருக்கின்றார். அவர், 'எல்லாம் இழந்தவர்' என்ற நிலையை அண்மித்துக் கொண்டிருக்கின்றார். இறுதியாக அவரிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே பகுதியளவில் மிஞ்சியிருக்கின்றது. அதுவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளுக்கு முழுமையாக சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான வேலைத்திட்டங்களில் சந்திரிகா குமாரதுங்க முன்முனைப்போடு ஈடுபட்டிருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த கடந்த வெள்ளிக்கிழமை (09) அதிகாலை மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டு அலரி மாளிகையிலிருந்து வெளியேறியிருந்தார். அவர், தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு முன் இராணுவச் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை தக்கவைப்பதற்கு முயற்சித்தார் என்று பதவியேற்றுள்ள தேசிய அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனாலும், இராணுவச் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைத் தக்கவைக்க தான் முயற்சிக்கவில்லை என்றும், ஜனநாயக தீர்ப்புக்கு தான் தலைசாய்த்து வெளியேறியதாகவும் குற்றச்சாட்டுக்களை மஹிந்த ராஜபக்ஷ மறுத்துரைத்துள்ளார்.  எது எவ்வாறாக இருந்தாலும் மக்களின் தீர்ப்பின் பிரகாரம் இரத்தம் சிந்தப்படாத ஆட்சி மாற்றமொன்று நிகழ்ந்திருக்கிறது என்பது பெரும் நிம்மதியான விடயம்.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய சொந்தக் கிராமமான ஹம்பாந்தோட்டையின் மெதமுலனவில் மக்களின் முன் பேசும் போது, தன்னை வடக்கு, கிழக்கு, மலையகத்திலுள்ள மக்களே தோற்கடித்திருப்பதாகவும், சிங்கள மக்களின் வெற்றியாளன் இன்னமும் தானே என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இலங்கையின் தேசியத் தலைவராக இரண்டு முறை ஜனநாயக ரீதியான (!) தேர்தல்களினூடாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதியொருவர் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்வதிலுள்ள மனத்தடை காரணமாக இனவாதம் தொனிக்கும் இவ்வாறான கருத்துக்களை தென்னிலங்கைச் சிங்கள மக்களை நோக்கி முன்வைத்திருக்கின்றார். அதையே, அவரின் ஆதரவாளர்களில் குறிப்பிட்டளவானவர்களும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர்.

தர்க்க ரீதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மேற்கண்ட கூற்றை ஆராய்ந்தால், சிங்கள பௌத்த மக்களில் 51 சதவீதமானவர்கள் அவருக்கே ஆதரவளித்திருக்கின்றார்கள் என்பது உண்மை. ஆனால், 49 சதவீதமான சிங்கள பௌத்த மக்கள் அவரின் ஆட்சியை மாற்ற வேண்டும் என்று வாக்களித்திருக்கின்றார்கள்.

போர் வெற்றிகளுக்குப் பின் இடம்பெற்ற 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போர் வெற்றி நாயகர்களான மஹிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் போட்டியிட்டிருந்தார்கள். அதன்போது, சுமார் 18 இலட்சம் மேலதிக வாக்குகளினால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தார். (அந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் பேசும் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே வாக்களித்தனர்.) அந்த தேர்தலில் சிங்கள மக்களின் மொத்த வாக்குகளில் 62 சதவீதமானவற்றை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.

ஆனால், அந்த தேர்தல் நடைபெற்று 5 வருடங்களுக்குள்ளேயே அவர் மீது சிங்கள மக்கள் கொண்டிருந்த அபிமானத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அது, சுமார் 11 சத106510வீதமான அளவுக்கு இருந்தது என்பது வெளிப்படையானது. சிங்கள பௌத்த வாக்குகளில் 11 வீதமானவை எதிரணிக்கு செல்கின்றது என்றால் அது, மஹிந்த ராஜபக்ஷவின் பெரும் தோல்வியாக கொள்ள முடியும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி ஆரம்பித்தது சிங்கள மக்களிடம் இருந்துதான். அதனை சுமார் 12 இலட்சம் தமிழ் பேசும் சிறுபான்மை வாக்காளர்கள் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்ததன் மூலம் உறுதி செய்தனர். அதனைத் தவிர்த்துவிட்டு ஒட்டுமொத்தமாக தன்னுடைய தோல்வி தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் வாக்குகளினால் நிகழ்ந்திருக்கின்றது என்ற தோரணையிலான பேச்சினை மஹிந்த ராஜபக்ஷ முன்வைப்பது மிகவும் பிழையானவாதம்.

'சிறுபான்மை என்ற விடயம் இலங்கையில் இல்லை. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் கிடையாது. நாம் எல்லோரும் இலங்கையர்; ஒரே தாய் மக்கள்' என்று தொடர்ந்து மக்கள் முன்னிலையில் முன்மொழிந்து வந்த மஹிந்த ராஜபக்ஷதான் தன்னுடைய இனவாத முகத்தை இப்போது பலமாக காண்பிக்க ஆரம்பித்திருக்கின்றார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய தோல்வி உறுதியாவதை உணர்ந்த அவர், இறுதி நேர தேர்தல் பிரசாரப் பணிகளின் போதும் சிங்கள பௌத்த தேசியவாதத்தையே பலமாக முன்னிறுத்தினார். தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தனக்கு அவசியமில்லை. தான் சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே மைத்திரிபால சிறிசேனவை 20 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்றெல்லாம் கூறி வந்தார்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ பல விடயங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். அவரின் ஆட்சிக்காலமான கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்கள் தமது வாழ்க்கையை கொண்டுசெல்வதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருந்தனர். போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மக்கள் மீது சுமை தொடர்ந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், போர் முடிந்த பின்னும் மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழ்நோக்கியே சென்றுகொண்டிருந்தது. நாட்டில் சுயாதீனமான நீதித்துறை, சட்ட ஆட்சி எல்லாம் காணாமற்போய், ஊழலும் மோசடிகளும் கோலொச்சின.

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவோம் என்று கூறி வந்த மஹிந்த ராஜபக்ஷ, அதிகமாக செய்த அபிவிருத்தி என்றால், சீனாவிடம் பெற்ற கடன் உதவியோடு அமைத்த காப்பெற் வீதிகளும், வணிக வளாகங்களும், துறைமுகமும், விமான நிலையமும் என்று கொள்ள முடியும்.  ஆனால், இவற்றை அமைப்பதற்காக பெற்ற கடன் நாட்டு மக்களின் அடுத்த தலைமுறையையும் அடகு வைத்தே பெறப்பட்டிருக்கின்றது. இவற்றினால், நாட்டு மக்களுக்கு பெரிய தொழில் வாய்ப்புக்கள் கூட கிடைக்கவில்லை. சீன உதவியோடு நடைபெற்ற இந்த அபிவிருத்தி (?) திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டன. அத்தோடு, உள்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறி வரும் போது, வெளிநாட்டு ஊழியர்கள் (சீனர்கள்) அபிவிருத்தித் திட்டப் பணிகளில் முழுமையாக அனுமதிக்கப்பட்டனர்.

இதனைவிட, ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட துறைமுகத்தினாலும், சர்வதேச விமான நிலையத்தினாலும் இன்னமும் வருமானம் வர ஆரம்பிக்கவில்லை. சர்வதேச பயணப் பாதைகளும் கொழும்பையே தொடர்ந்தும் பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் நிலையில், அவசர அவசரமாக அமைக்கப்பட்ட இவற்றினால் எந்தவிதமான பயன்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக, கடன் சுமை பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. ராஜபக்ஷ என்ற குடும்ப ஆதிக்கத்தின் விளைவினால் கொண்டுவரப்பட்ட திட்டங்களாகவே இவற்றைக் கொள்ள முடியும்.

இன்னொரு பக்கம் இளைஞர்களை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மிகவும் மோசமாக சீண்டிக் கொண்டிருந்தது. பல்கலைக்கழகங்களை தன்னுடைய எதேச்சதிகாரத்தினால் கட்டுப்படுத்தி காட்டு மிரண்டித்தனம் செய்தது. மாணவர்களை மிகவும் கடுமையாக அடக்கியது. சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக திரும்பியதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது.
வடக்கு, கிழக்கினைப் பொறுத்தளவில் யாழ்தேவியின் மீள் வருகை, மின்சாரம் வழங்கல், வீதி அபிவிருத்தி என்கிற விடயங்கள் சுட்டிக்காட்டப்படும் அளவுக்கு இருந்தன. ஆனால், இவற்றையெல்லாம் விட தமிழ் பேசும் மக்கள் தாம் எதிர்பார்க்கும் அதிகாரங்களின் பங்கீடு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கொஞ்சமும் சிந்திக்காது சர்வாதிகார போக்கை கொண்டிருந்தனர். அத்தோடு, பௌத்த அடிப்படை மதவாத சக்திகள் சிறுபான்மை மதங்களுக்கு எதிராக பெருமெடுப்பில் வன்முறைகளையும், அத்துமீறல்களையும் செய்ய ஆரம்பித்தன. அதனை, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அடக்காது மௌனியாக இருந்து ஊக்குவித்தது. இது, ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது வெறுப்பில் இருந்தவர்களை பெருமெடுப்பில் எழுச்சி கொள்ள வைத்தது.

அடிப்படையில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு குறைந்த பட்ச விட்டுக் கொடுப்புக்களைக் கூட செய்யத் தயாராக இருக்காத மஹிந்த ராஜபக்ஷவை, அந்த மக்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும். அதுதான், ஏற்கனவே வெறுப்பின் உச்சத்திலிருந்தவர்கள் மைத்திரிபால சிறிசேன வடிவில் சந்தர்ப்பம் வாய்க்கும் போது பயன்படுத்திக்கொண்டு விட்டார்கள். ஆனால், மஹிந்த வெறுப்பு மட்டுமே தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை  இவ்வளவு எழுச்சியாக வாக்களிக்க வைத்தது என்றும் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், புதிதாக வருகின்றவர்களும் சிங்கள பௌத்த தேசியவாதிகள் என்று தெரிந்தாலும், சிறிய ஜனநாயக இடைவெளியொன்றை குறிப்பிட்ட காலத்துக்காவது வழங்குவார்கள் என்றும் நம்பினார்கள். அந்த மாற்றத்துக்காகவும் வாக்களித்தார்கள்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் நிறைவு பெற்றதும் நாடாளுமன்றத் தேர்தலொன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தத் தேர்தலை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது பற்றி சிந்தித்தே தேசிய அரசாங்கமும், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தினரும் களமாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் பெருமளவு இனவாதத்தை மஹிந்த ராஜபக்ஷ கக்குவார் என்று இப்போதிருந்தே எதிர்பார்க்க முடிகின்றது. ஏனெனில், தன்னுடைய தோல்விக்கான காரணங்களை உண்மையாக ஆராய்ந்து பார்க்காமல் கைகளில் இனவாதத் தீயை ஏந்தியிருக்கின்றார். இனி வெற்றி நோக்கி நகர்வதற்கும் அந்தத் தீயை பெருமளவில் பரவ வைப்பார். அதற்கு சிங்கள மக்கள் இணங்குவார்கள் என்றால், நாடு மீண்டும் படு பாதாளத்துக்கு செல்லும். அப்போது, இனநல்லிணக்கம், நாம் இலங்கையர்கள் என்ற விடயங்கள் காணாமற்போய், குரோதங்களினாலும் வன்முறைகளிலும் இலங்கை நிறைந்திருக்கும்!

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X