Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 ஜனவரி 28 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25ஆம் திகதி மொழிப்போர் தியாகிகள் தினம் தமிழகத்தின் அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிடக் கட்சிகள் அனுசரிக்கும் மரபு விழாவாகி வருகிறது. 1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி தமிழ் மொழி காக்க தன் உடம்பினை தானே தீ வைத்துக் கொண்டு இறந்தான் 27 வயது மிக்க திருச்சி சின்னச்சாமி. ஹிந்தி திணிப்பை எதிர்த்து, தமிழைக் காப்பாற்ற நிகழ்ந்த முதல் தீக்குளிப்புச் சம்பவம் இது என்றாலும் அடுத்தடுத்து நடைபெற்ற தீக்குளிப்புச் சம்பவங்கள் தமிழக அரசியலை புரட்டிப் போட்டு காங்கிரஸ் கட்சியை 1967இல் தமிழக ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றியது.
சென்னையில் 1937ஆம் ஆண்டளவில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பலமான வரலாற்றுப் பின்னணி உண்டு. திருச்சி சின்னச்சாமிக்கு முன்பு, ஹிந்தி திணிப்பை கண்டித்து உயிர்நீத்தவர்கள் நடராஜன் மற்றும் தாலமுத்து ஆகிய இருவரும் ஆவார்கள். 1938இல் சென்னை மாகாண பிரதமராக (அப்போதெல்லாம் முதலமைச்சரை பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்) இருந்த ராஜாஜி, சென்னை மாகாணப் பள்ளிகளில் ஹிந்தி மொழியை கட்டாய பாடமாக அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்தார். அவ்வளவுதான், பற்றிக் கொண்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகித்தான் நடராஜனும் தாலமுத்துவும் சிறையில் மாண்டார்கள். அவர்கள் பெயரில் சென்னைக்கு அருகில் நினைவிடங்கள். அது தவிர அவர்கள் பெயரில் உள்ள மாளிகையில்தான் சென்னை எக்மோரில் இன்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் இயங்கி வருகிறது.
இதன்பின்னர், 1946இல் மீண்டும் பள்ளிக்கூடங்களில் ஹிந்திப் பாடம் கட்டாயம் என்று அப்போது இருந்த காங்கிரஸ் அரசு அறிவித்தது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் இந்த அறிவிப்பைச் செய்தார். இதே முயற்சியை பின்னர், முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி முதலியார் மேற்கொண்டார். இந்நிலையில் 1950இல் இந்தியா குடியரசானது. அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தது. அந்த அரசியல் சட்டத்தில், பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் அரசு நிர்வாகத்தில் ஹிந்திதான் ஒரே மொழியாகப் பயன்படுத்தப்படும் என்ற பிரச்சினைக்குரிய எட்டாவது அட்டவணை அரசியல் சட்டத்துடன் சேர்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெரும்போராட்டம் வெடித்தது. முதலில் ஹிந்தியை பெரியார் எதிர்த்தார் என்றால் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆயுதமாக 'ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்' மாறியது. அதுவே தமிழகத்தில், காங்கிரஸ் அரசுக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவித்தது. இன்றுவரை அக்கட்சியால் தமிழகத்தில் எழும்பமுடியவில்லை.
இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட எட்டாவது அட்டவணை பற்றிய சர்ச்சைக்கு தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள், அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவை யோசிக்க வைத்தது. அதனால் 1959இல், 'ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அதிகார பூர்வமான மொழியாக தொடரும்' என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர் நேரு. இந்த உறுதிமொழியைப் பெறுவதற்காக தமிழர்கள் சிந்திய இரத்தம் அளவிட முடியாது. அதிலும் இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், ஓர் அரசியல் சட்டத்தில் உள்ள ஒரு சரத்தை நிறைவேற்றுவது குறித்து, பிரதமரொருவரின் உறுதிமொழியே இந்தியாவில் மதிக்கப்பட்டது என்பதுதான். ஜனநாயகத்தில் சட்டம் இயற்றும் மன்றம் நாடாளுமன்றம். அந்த நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு நாட்டின் பிரதமர் ஒருவர் கொடுக்கும் உறுதிமொழி அரசியல் சட்டத்துக்கு நிகரானது என்பது தமிழ் மொழி விடயத்தில் இன்றளவும் நீடித்து வருகிறது. 'ஹிந்தி திணிப்பு' 'தி.மு.க.வின் போராட்டம்' 'நேருவின் உறுதிமொழி' ஆகிய மூன்றையும் தனித் தனியாக பிரித்துப் பார்க்க முடியாது.
1950இல் சேர்க்கப்பட்ட எட்டாவது அட்டவணையின் படி கூறப்பட்ட 15 ஆண்டுகாலக் கெடு,1965இல் முடிவுக்கு வரும் தருவாயில் 'நாடு முழுவதும் ஹிந்தியே ஆட்சி மொழி. ஆங்கிலம் நீடிக்கக் கூடாது' என்று வட நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உரக்கக் குரல் கொடுத்தார்கள். அதற்கு போட்டியாக 'ஆங்கிலம் நீடிக்க வேண்டும்' என்று ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த (தமிழகம் உள்பட) எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். முதலில் தமிழுக்காக தொடங்கிய போராட்டம் பிறகு 'ஹிந்தி பேசும் மாநிலங்கள்' 'ஹிந்திய பேசாத மாநிலங்கள்' என்று போராட்டம் பரந்து விரிந்து நின்றது.
இந்த சூழ்நிலையில் நேரு மறைந்து பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றிருந்தார். ஆனால், அவரே நேருவின் உறுதிமொழிக்கு மாறாக செயற்படத் தொடங்கினார். வட நாட்டு எம்.பி.க்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவரே நாடாளுமன்றத்தில் ஹிந்தியில் பேசினார். அது மட்டுமின்றி, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜரிலால் நந்தா, 'அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் உள்ளபடி ஹிந்தி மொழி மட்டுமே அரசாங்க மொழியாக இருக்கும்' என்ற பகீர் அறிவிப்பை செய்தார். நாடாளுமன்றத்திலேயே எம்.பி.க்கள் மோதல் வெடித்தது. அதனால் தமிழகம் கொந்தளித்தது. இப்படியொரு அறிவிப்பு இந்தியாவின் 15ஆவது குடியரசு தினத்தன்று வெளிவந்தது.
அது மீண்டும் 1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டமாக தமிழகத்தில் உருவெடுத்து தீக்குளிப்புச் சம்பவங்களும் பல்வேறு போராட்டங்களும் விஸ்வரூபம் எடுத்தன. தமிழகத்தில் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. எதிர்க்;கட்சி வரிசையில் இருந்த தி.மு.க., சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள அனைத்து முயற்சிகளிலும் இறங்கியது. கட்சியின் செயற்குழுவைக் கூட்டி, '1965ஆம் வருட குடியரசு தினத்தை துக்க தினமாக அனுசரிப்போம்' என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் குடியரசு தினத்துக்கு முன்பே நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் போராட்டத்தின் உத்வேகத்தைப் பார்த்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் அவருக்குப் பிறகு வந்த பிரதமர் இந்திரா காந்தியும் கூட 'நேரு உறுதிமொழி காப்பாற்றப்படும்' என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இதைத்தான் சமீபத்தில் சுட்டிக்காட்டியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'மூன்று பிரதமர்கள் கொடுத்த உறுதிமொழியை பிரதமர் நரேந்திரமோடி காப்பாற்ற வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப்படி வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு காரணம் உண்டு. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு சமஸ்கிருத வாரம் கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் பிரதிபலிப்பு ஹிந்தி மொழி திணிப்பு என்று இங்குள்ள கட்சிகள் போர்க்குரல் எழுப்பி வருகின்றன. முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே சொந்தமாக இருந்த ஹிந்தி எதிர்ப்பு, காலப்போக்கில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்கும் சொந்தமாக மாறினாலும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் மொழிப் போர் தியாகிகளுக்கு ஜனவரி 25ஆம் திகதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தி வந்தன. ஆனால், இந்த வருடம் அ.தி.மு.க. இந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை வெறும் அமைதி ஊர்வலமாக நடத்தி முடித்திருக்கிறது. தி.மு.க. மட்டும்தான் வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்தை நடத்தி மொழிப் போர் தியாகிகள் பற்றிப் பேசியிருக்கிறது.
1965களில் காங்கிரஸ் கட்சியை தமிழக ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க எப்படி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உதவியதோ, அதே மாதிரி இப்போது பா.ஜ.க.வுக்கு எதிராக ஹிந்தி எதிர்ப்பு பிரசாரம் பயன்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் பா.ஜ.க. அரசு ஹிந்தி மொழி வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி மொழிக்கு புதிய உத்வேகம் கொடுக்கப்படுகிறது. இந்திய பிரதமரின் உரைகள் கூட பெரும்பாலும் மத்திய அரசின் செய்தி தொடர்பு துறையால் இந்தியிலேயே வெளியிடப்படுகின்றன.
'ஹிந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள இம்முயற்சி' என்று மற்றவர்கள் பிரசாரம் செய்தாலும் தமிழகத்திலே கூட ஹிந்தி மொழி கற்றுக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் யாருக்கும் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் 'திணிப்பு' இருக்கக் கூடாது என்றே அனைவரும் கருதுகிறார்கள். இதனால் பா.ஜ.க.வுக்கு எதிராக முன்னெடுத்துச் செல்லப்படும் ஹிந்தி மொழி எதிர்ப்பு அக்கட்சிக்கு தமிழகத்தில் பெரிய சோதனையை ஏற்படுத்துமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், முன்பு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அதனால் அக்கட்சிக்கு எதிராக தமிழ், தமிழுணர்வு போன்ற விடயங்களை முன்னிறுத்திப் போராடி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. குறிப்பாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் 'ஹிந்தி எதிர்ப்பை' பெரிய ஆயுதமாகப் பயன்படுத்தி தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். அதே ஹிந்தி எதிர்ப்பு இன்று மொழிப் போராட்டம் பொன்விழா காணும் நேரத்தில் மீண்டும் துவங்கியிருக்கிறது. இந்த முறை காங்கிரஸ§க்கு எதிராக இருந்த மன நிலை போல், பா.ஜ.க. வுக்;கு எதிராக வருமா என்பது கேள்விக்குறி. என்றாலும் தமிழ் மொழி, தமிழணர்வு போன்ற விஷயங்கள் அடிப்படையிலும் மதவாதம் என்ற ரீதியிலும் பா.ஜ.க.வுடன் மோத நினைக்கின்றன திராவிடக் கட்சிகள். அதில் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் முன் நிற்கிறது. அ.தி.மு.க.வுக்கும் அதில் உடன்பாடு என்றாலும் அக்கட்சியின் தலைமை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கலில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு பொதுக்கூட்டமே இந்த முறை நடத்தாமல் ஒதுங்கிக் கொள்ள நேரிட்டு விட்டது.
அதேவேளை, ஹிந்தி மொழி திணிப்பு விவகாரத்தில் 'நேருவின் உறுதி மொழி' இன்னும் எவ்வளவு நாளைக்கு வெறும் உறுதிமொழியாகவே இருக்கும் என்பது மொழிப்போரின் பொன்விழா ஆண்டில் கூட தெளிவாகவில்லை. நேரு கண்ட 'திட்டக் கமிஷன்' இப்போது மாற்றப்பட்டு விட்டது. இதனால் அவர் கண்ட தேசிய வளர்ச்சி குழு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இப்போது மாற்றி அமைக்கப்பட்டு விட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேருவின் உறுதிமொழியும் பறி போய் விடுமோ என்ற அச்சம் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. இந்த முறை தி.மு.க. மொழிப் போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தியதற்கு இதுவும் ஒரு காரணம்.
1937இல் ஆரம்பித்த 'ஹிந்தி மொழிப் பிரச்சினை' இன்று 78 வருடங்களுக்குப் பிறகும் தீர்வு காணப்படவில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது மத்திய அரசு. அது சென்ற முறை இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தையே கூட சென்னையில் அமைத்தது.
இப்போது இருக்கின்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் திருவள்ளுவர் தினத்தை மத்திய அரசே கொண்டாடும் என்று அறிவித்திருக்கிறது. அக்கட்சியின் வட நாட்டு எம்.பி. தருண் விஜய் திருவள்ளுவர் யாத்திரையே தமிழகத்தில் நடத்தி முடித்திருக்கிறார். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் அது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாக இருந்தாலும் சரி 'ஹிந்தி மொழி வளர்ச்சி' என்ற பெயரில் ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை முழு வீச்சில் அமல்படுத்தும் நோக்கில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
என்று தீரும் ஹிந்தி திணிப்புப் பிரச்சினை? என்று தீரும் தமிழ் தாகம் என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் காத்திருக்கிறது. மாநிலத்தில் புதிய வேகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.விடமிருந்து 'ஹிந்தி திணிப்பை' விட 'தமிழ் மொழி வளர்ச்சிகான' திட்டங்கள் பெருமளவில் கிடைக்கும் என்று மக்களும் எதிர்பார்க்கிறார்கள். பொன்விழா காணும் மொழிப் போர் தியாகிகளின் போராட்டத்தின் இன்றைய எதிர்பார்ப்பும் அதுதான்!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
21 minute ago