Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது 'இனப்படுகொலையே' என்று வலியுறுத்தும் தீர்மானம் செவ்வாய்க்கிழமை (பெப் 10, 2015) வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தினை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி) ஆதரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். கடந்த வருடம் முழுவதும் பலமுறை குறித்த தீர்மானத்தை வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைக்க முனைந்தார். ஆனாலும், தீர்மானத்தின் சரத்துக்கள் தீர்க்கமானதாக இல்லை, ஆதாரங்கள் போதுமானதாக இல்லை மற்றும் பொருத்தமான அரசியல் சூழல் இல்லை என்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்டு வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்ற மைத்திரி அரசாங்கம் பதவியேற்று ஒரு மாதம் மட்டுமே கடந்த நிலையில், வடக்கு மாகாண சபையில், இனப்படுகொலை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முக்கியம் பெறுகின்றது. அதுவும், மிகவிரைவில் நாடாளுமன்றத் தேர்தலொன்று நடைபெற இருக்கின்ற நிலையில் குறித்த தீர்மானம் தென்னிலங்கை அரசியல் களத்தில் மிகுந்த கவனம் பெறும். ஏற்கெனவே, பொது எதிரணியாக ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்ட மைத்திரிபால சிறிசேன மீது சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளும், அப்போதைய மஹிந்த அரசாங்கமும் பிரிவினைக்கு துணைபோகும் 'எதிரணி கூட்டு' எனும் கருத்துக்களை பெரும் பிரசாரமாக முன்வைத்தது.
இறுதி மோதல்களில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்று வலியுறுத்தும் தீர்மானத்தை வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சில மணித்தியாலங்களுக்குள்ளேயே இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது. புதிய தேசிய அரசாங்கத்தின் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, 'ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதி மோதல்களின் போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள். அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது.' என்றிருக்கின்றார்.
அத்தோடு, 'இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடக்கு மாகாண முதலமைச்சரும், உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும். கடந்த முறை இதே தீர்மானம் மாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாத அவர், இப்போது எப்படி அதை ஏற்றார்? இறுதி மோதல்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது. விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் பொதுமக்களை போரின்போது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதுதான், இறுதி மோதல்களின் போது ஏற்பட்ட பெருமளவு உயிரழப்புகளுக்கு காரணம்.' என்றிருக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் என்கிற வகையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடமிருந்து இப்படியான பதில் வெளிப்படுவது இயல்பானது. ஏனெனில், ஜனாதிபதித் தேர்தல் காலத்திலேயே பொது எதிரணி இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை வலியுறுத்தும் தீர்மானங்களையோ, சர்வதேச விசாரணைகளையோ அனுமதிக்காது என்று அறிவித்திருந்தது. அப்படியிருக்க ராஜித சேனாரத்னவின் பதில் புதிதான ஒன்றல்ல.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்று வலியுறுத்தும் தீர்மானத்தை வட மாகாண சபையில் முன்வைத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய நீண்ட உரை மிகுந்த கவனம் பெறுகின்றது. அதுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமும், கருத்தொருமையில்லாத நிலையும் மேலெழுந்துள்ள நிலையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
'இலங்கைத் தமிழ் மக்களின் உரித்துக்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்புக்கள், அவர்களின் அபிலாசைகள், அவர்களின் தேவைகள், அவர்களின் வருங்காலம் ஆகியன யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன. எமது நிலை, விளையாட்டுத்திடல் பந்து போன்று உலக அரங்கில் பலரின் உதைக்கும் எதிர் உதைக்கும், எறிவுக்கும் எதிர் எறிவுக்கும் ஆளாகி வருகின்றது.' என்ற ஆதங்கத்துடனேயே அந்த உரை ஆரம்பமானது.
1.இறுதி மோதல்களில் திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
2.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
3.ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலவில்லை.
4.அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தை கைவிட எத்தனிக்கின்றன.
இந்த நான்கு விடயங்களையும் முன்னிறுத்தியதாகவே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை அமைந்திருந்து.
இறுதி மோதல்களின் போது தமிழ் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள், ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகளுக்கு அமைய சட்டவாளர்களின் உறுதுணையோடு பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களுடன் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தீர்மானம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தியாவது நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றிகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வஞ்சக முகத்தைக் காட்ட ஆரம்பித்திருப்பதாக மிகவும் காட்டமான முறையில் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். 'நாங்கள் மஹாநாயக தேரர்களிடம் வடக்கு மாகாணத்தில் இராணுவ முகாங்கள் எதனையும் அப்புறப்படுத்தப் போவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்கவுள்ளோம்.' என்று ரணில் விக்ரமசிங்க அண்மைய சந்திப்பொன்றின் போது தன்னிடம் குறிப்பிட்டதாகக் சீறிய சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை அப்படியே கிடப்பில் போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயல்கின்றது. இது, தீர்வுக்கான வழியில்லை. மாறாக, பிரச்சினைகளை அதிகரிப்பதற்கான வழி என்று தொனிப்பட பேசியிருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடனான நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காக என்று கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இலங்கையின் 67ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயம் தமிழ் அரசியல் சூழலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், 'இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் அல்ல. அது, கட்சி முடிவுகளுக்கு எதிரானது. அவர்களின் தனிப்பட்ட முடிவு.' என்று அறிவித்திருந்தார்.
இப்படியான முரண்பட்ட சூழலுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற நிலையில், சி.வி.விக்னேஸ்வரனின் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான காட்டமான விமர்சனம் பல செய்திகளைச் சொல்வதாக அமைகின்றது. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளேயே அந்த அரசாங்கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதுவே அது. ஏனெனில், சி.வி.விக்னேஸ்வரனை வடக்கிற்கும்- தெற்கிற்கும் இடையிலான இணைப்பாக அல்லது மிதவாத தமிழ்த் தலைமையாக தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகள் கருதுகின்றன. அவரையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்களும், நடவடிக்கைகளும் எரிச்சலடைய வைத்திருக்கின்றது.
குறிப்பாக, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான அண்மைய சந்திப்பின் போது பல இணக்கப்பாடுகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டிருந்தார். அதில், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்து அங்கு மீண்டும் பொது மக்களை குடியமர்த்துதல் என்பது முக்கியமானது. ஆனால், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அண்மையில் மேற்கொண்ட வடக்கு விஜயத்தின் போது, 'வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது' என்ற கருத்தை வெளியிட்டு வைத்தார். இது, காலம் காலமாக சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் வடிவமாக கொள்ளப்படுகின்றது. வாக்குறுதிகளை வழங்குவதும், அரசியல் நிலைத்தலுக்காக வாக்குறுதிகளை மீறுவதுமான வரலாற்றையே இலங்கையின் இரு பிரதான கட்சிகளும் கொண்டிருக்கின்றன. இப்போதும், ரணில் விக்ரமசிங்கவும் அதையே பிரதிபலித்திருக்கின்றார்.
இன்னொரு விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. அது, என்னவெனில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இலங்கையின் புதிய அரசாங்கத்தை தக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதனால், இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை கைவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இலங்கைக்கான விஜயத்தை அண்மையில் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இதனை பெரும் அழுத்தமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது வைத்திருக்கின்றார். அந்த விடயத்தையும் சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய உரையின் போது கோடிட்டார். தங்களுக்கு சார்பான அரசாங்கமொன்று இலங்கையில் அமைக்கப்பட்டு விட்டது. ஆகவே, இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளோ, தீர்மானமோ அவசியமில்லை என்பது. அதுதான், உரையின் ஆரம்பத்திலேயே தமிழர்களாகிய நாம் உதைபடும் பந்தாக இருக்கின்றோம் என்கிற ஆதங்கத்தினை முன்வைத்திருந்தார்.
இலங்கையின் சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கான தீர்வினைப் தருவதில் என்றைக்கும் இணக்கத்தோடு செயற்படப் போவதில்லை என்பதையும், சர்வதேச சமூகம் தன்னுடைய தேவைகளுக்காகவே, தமிழ் மக்களை கருவியாக கையாண்டு வந்திருக்கிறார்கள் என்கிற 'பழைய' ஆனால், தொடரும் உண்மையையும் மீண்டும் சி.வி.விக்னேஸ்வரனும் பேசியிருக்கின்றார். இதனையே, முன்னாள் தமிழ்த் தலைவர்களும், ஆயுதமேந்திப் போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றோரும் உரைத்து வந்திருக்கின்றார்கள். காலம் கடந்தாலும் கோலங்கள் மாறவில்லை. அதனால், சி.வி.விக்னேஸ்வரனும் மீண்டும் அதனையே பேச வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.
'இறுதி மோதல்களில் இடம்பெற்றது இனப்படுகொலையே' என்பதை தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை முழுவதுமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டுமே வரலாற்றில் பதிவுகளாக இருக்கும். அதையே, குறித்த தீர்மானம் இறுதியாக சாதித்தாக இருக்கும். ஏனெனில், சர்வதேசமும், இலங்கை அரசாங்கமும் இனப்படுகொலை தொடர்பிலான தீர்மானத்தினை கவனத்தில் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இப்போது கிஞ்சித்தும் இல்லை. ஆக, எமக்கு எப்போதும் போல, இப்போதும் ஏமாற்றமே மிஞ்சும்!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
26 minute ago