Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் 'தி ஒஸ்ரேலியன்' நாளிதழுக்கு வெளியிட்ட காட்டமான கருத்துக்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தன. ஏனென்றால், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எல்லா நாடுகளுடனும் சுமுகமான உறவை பேணிக்கொள்ள முனைகின்ற, யாரையும் விமர்சிக்காமல் பக்குவமாக நடந்துகொள்கின்ற சூழலில் அவுஸ்திரேலியா தொடர்பான கடுமையான கருத்துகளாக அவை அமைந்திருந்தன.
புதிய அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தையும் நேரடியாக தாக்கி கருத்து வெளியிடாதுபோனாலும், அவுஸ்திரேலியா விடயத்தில் அத்தகைய மௌனத்தை கடைப்பிடிக்கவில்லை. முன்னைய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்ட விடயத்தில், அவுஸ்திரேலியாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்திருந்தார்.
முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் நெருக்கமாக செயற்பட்டன. இந்த நாடுகளுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பாதுகாப்பு ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைத்து செயற்பட்டிருந்தது. ஆனாலும், மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி அரசாங்கம், அந்த நாடுகள் எதனையும் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒத்துழைத்து செயற்பட்டதாக விமர்சனங்களை முன்வைக்கவில்லை. ஆனாலும், அவுஸ்திரேலியா விடயத்தில் அவ்வாறு நாவை அடக்காமல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளமைக்கு காரணம் இருக்கவே செய்கிறது.
முன்னர், அவுஸ்திரேலியா ஒருபோதும் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நின்றதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவே கருத்து வெளியிட்டுவந்தது.
ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னர், சில ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவின் இலங்கை தொடர்பான கொள்கை மாற்றமடைந்தது. எந்தளவுக்கு இலங்கையின் மனித உரிமை மீறல்களை அவுஸ்திரேலியா எதிர்த்ததோ, பின்னர் அதைப்பற்றி பேசாமல் அடங்கிக்கொண்டது.
மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி 2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால், அப்போது பொதுநலவாய அமைப்புக்கு தலைமை வகித்த அவுஸ்திரேலியா, இலங்கைக்கு சார்பாகவே நடந்துகொண்டது. கொழும்பில் பொதுநலவாய உச்சி மாநாடு நடத்தப்படவேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் பிடிவாதம் கடைசியில் வெற்றி பெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் மட்டுமன்றி, அதற்கு பின்னர் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிரான மேற்குலகின் நகர்வுகள் எதிலுமே தொடர்புபடாமல் அவுஸ்திரேலியா ஒதுங்கி இருந்தது.
குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளால், இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது, மேற்குலக அணியில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலியா அதில் பங்களிக்கவில்லை.
கடைசியாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் கூட, அந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணையாளராக கையெழுத்திட அவுஸ்திரேலியா மறுத்துவிட்டது. இதற்கு பிரதான காரணம், இலங்கையின் முன்னைய ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பாதுகாக்கவேண்டும் என்ற ஒரே நோக்கம்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில் அரசியல் செல்வாக்கில் தூதுவர்களாகவும் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்ட 50க்கும் அதிகமானோரை, எதிர்வரும் 10ஆம் திகதியுடன் கொழும்பு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சினால் பணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருப்பி அழைக்கப்படுவோர் முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களேயாவர். திருப்பி அழைக்கப்படும் 50க்கும் அதிகமானோரில், ஏழு பேர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றுவோர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்மிரல் திசார சமரசிங்க, லக்ஸ்மன் ஹுலுகல்ல உள்ளிட்ட ஏழு பேர் இவ்வாறு திருப்பி அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து, முன்னைய அரசாங்கம் அவுஸ்திரேலியாவுடன் எந்தளவுக்கு நெருக்கத்தை கொண்டிருந்தது என்பதை உணரலாம்.
ஜனவரி 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், முன்னைய ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை தழுவியபோது, பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. சீனா அதில் முதலாவது நாடு. அதற்கடுத்தது அவுஸ்திரேலியாவே கூடுதல் அதிர்ச்சியடைந்த நாடு.
சீனாவுக்கு இலங்கையில் தான் முதலிட்ட திட்டங்களின் எதிர்காலம் குறித்து அதிக கவலை இருந்தது. ஆனால், அவுஸ்திரேலியாவுக்கோ, முன்னைய அரசாங்கத்துடன் ஏற்படுத்தியிருந்த அகதிகள் படகுகளை கட்டுப்படுத்தும் உடன்பாடு என்னவாகுமோ என்ற கவலை ஏற்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால், அவுஸ்திரேலியாவின் ரொனி அபோட் அரசாங்கம், அதிகமாகவே கலங்கிப்போனது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபோட் அரசாங்கமும் கடற்படைக்கான ரோந்துப்படகுகளை கொடுத்து, இலங்கை கடற்படையை பலப்படுத்தும் அளவுக்கு நெருக்கமாக இருந்தன. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் எல்லாவற்றையுமே நிராகரிக்கும் அளவுக்கு அவுஸ்திரேலியாவின் மனிதாபிமானம் கேள்விக்குறியாக மாறி நின்றது.
இலங்கைக்கு வந்திருந்தபோது, அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்க மறுக்கும் அளவுக்கு, தமிழர்கள் மீது அவுஸ்திரேலியா வெறுப்பை காண்பித்தது. இதுவொரு இராஜதந்திர நெறிமுறைகைளை மீறிய செயல் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன், அவுஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் நெருக்கமாக இருந்தமைக்கு ஒரே காரணம், அகதிகள் படகுகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் தயவு தேவைப்பட்டது மட்டுமே. அவுஸ்திரேலியாவை பொறிக்குள் சிக்கவைத்து, அதனை தமது வழிக்கு கொண்டுவருவதற்கு, அகதிகள் படகுகளை முன்னைய அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டதான சந்தேகம் வலுவாகவே இருக்கிறது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி அகதிகள் படகுகள் தொடர்ச்சியாக படையெடுத்து சென்றன. ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் எதுவும் செய்யமுடியாத நிலையேற்பட்டது. அகதிகளை கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறியது.
இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து அகதிகள் புறப்பட்டுவருவதை விடவும், இலங்கை அகதிகள் நேரடியாக அங்கு செல்ல தொடங்கியதே அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்தானதாக மாறியது. அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் நடுவே உள்ள கொகோஸ் தீவை அடைந்துவிட்டாலே, அவுஸ்திரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகிவிடும். அதற்கு பின்னர், அவுஸ்திரேலியாவே அகதிகளை பொறுப்பேற்கவேண்டிய நிலையிருந்தது.
இலங்கையிலிருந்து நேரடியாக படகுகளில் அகதிகள் புறப்பட்டுவரத் தொடங்கியபோது, அவுஸ்திரேலியா திணறிப்போனது.
இந்தளவுக்கும், இலங்கை வலிமையானதொரு கடற்படையை கொண்டிருக்கும் நாடு என்பதை அவுஸ்திரேலியா நன்கறியும்.
வலிமையான கடற்புலிகளையே தோற்கடித்த இலங்கை கடற்படையின் பாதுகாப்பு வேலியை கடந்து அகதிகள் படகுகள் எவ்வாறு வெளியேறுகின்றன என்று ஆராயத்தொடங்கியது அந்த நாடு. அகதிகள் படகுகள், தென்பகுதி கரையோரங்களிலிருந்தே பெரும்பாலும் புறப்படுவதையும் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களவர்கள் கூட அவற்றில் வருவதையும் அவுஸ்திரேலியா அவதானித்தது. பெரும்பாலான படகுகளை, சிங்களவர்களாக படகோட்டிகளே ஓட்டி வந்திருந்தனர். இதையும் அவுஸ்திரேலியா கவனத்திற்;கொண்டு, அகதிகளாக வந்தவர்களிடம் துருவித்துருவி விசாரித்தது.
அப்போது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.
அகதிகள் படகுகள் அவுஸ்திரேலியாவுக்கு திட்டமிட்டே அனுப்பப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருந்தது அந்த விசாரணை.
இலங்கை கடற்படையினரின் உதவியுடனேயே பல படகுகள், அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்தன என்று தெரியவந்தது. கடற்படை அதிகாரிகள் சிலரே அகதிகள் படகுகளை ஒழுங்கமைத்து அனுப்பியதாகவும் தெரியவந்தது. அரசாங்க உயர்மட்டத்தில், இதற்கு முழு ஒத்துழைப்பு இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
கரையிலிருந்து புறப்படும் அகதிகள் படகுகள், கடற்படை படகுகளின் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு சர்வதேச கடற்பரப்பில் விடப்பட்டமையும் தெரியவந்தது. இலங்கை அரசாங்கத்திடம் அது குறித்து விசாரித்தும் எந்தப்பயனும் கிட்டவில்லை. அவுஸ்திரேலியாவில் வந்து குவிந்துகொண்டிருந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை, அந்த நாட்டு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலை நீடித்தால், அகதிகளை கட்டுப்படுத்த தவறினால், தலைக்கு மேல் வெள்ளம் போய்விடும் என்று அந்த நாட்டு அரசாங்கம் உணர்ந்தது.
அவுஸ்திரேலியாவில் வந்து குவியத்தொடங்கிய அகதிகளால், அந்த நாட்டு அரசாங்கத்துக்கு உள்நாட்டில் நெருக்கடிகள் அதிகரித்தன. அதனால், கடல் கடந்த முகாம்களை அமைத்தும் விசாரணையை பிற்போட்டும் அகதிகளுக்கு நிரந்தர வதிவிட உரிமை கொடுக்காமலும் இழுத்தடித்துப்பார்த்தது. எதுவுமே பலனளிக்கவில்லை.
அகன்று பரந்து கிடந்த இந்திய பெருங்கடல் முழுவதையும் கண்காணிக்க முடியாமல் திணறிய அவுஸ்திரேலியாவுக்கு, இலங்கை அரசாங்கத்துடன் இணங்கிப்போவது ஒன்றே ஒரேவழியாக இருந்தது. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில், அகதிகள் படகுகளை கட்டுப்படுத்த இணக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக அவுஸ்திரேலியா, சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படவேண்டும் என்ற உறுதிமொழி கொடுத்தது. அது மட்டுமன்றி, இலங்கை கடற்படையை பலப்படுத்துவதற்கு மூன்று ரோந்துப்படகுகளை வழங்கவும் முன்வந்தது அவுஸ்திரேலியா.
இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஆதரவளிப்பதாக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, இலங்கையில் நடந்த எதையுமே கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக ஆதரித்தது அவுஸ்திரேலியா. அவுஸ்திரேலியாவுக்கு அலை அலையாக அகதிகள் படகுகளை அனுப்பியதன் மூலம் முன்னைய அரசாங்கம் அல்லது அதற்கு நெருக்கமாக இருந்தவர்களால் பல அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், சரணடைந்த போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுவித்திருந்தாலும், அவர்களின் மீது
முன்னைய அரசாங்கத்துக்கு நம்பிக்கையிருக்கவில்லை. அதனால், அவர்களை பின்தொடர்வதற்கு ஏராளமான புலனாய்வாளர்களை அமர்த்தியிருந்தது. அகதிகளை வெளிச்செல்ல திறந்துவிட்டதால், கணிசமான முன்னாள் போராளிகள் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் மூலம், முன்னாள் போராளிகள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தில் இறங்கும் வாய்ப்புகள் அருகிப்போயின.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் எண்ணிக்கை ஏதோவொரு வகையில் குறைந்துபோவதையும் அப்போதைய அரசாங்கம் தமக்கு சார்பான விளைவாகவே பார்த்தது. பெருந்தொகை அகதிகள் படகுகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதன் மூலம் கணிசமான வருமானத்தை உயர்மட்டத்தில் இருந்தவர்கள் சம்பாதித்துக்கொண்டனர்.
அவுஸ்திரேலியாவுடன் பேரம் பேசி, அதனை இலங்கையின் தாளத்துக்கு ஆடும் நிலைக்கு கொண்டுவரமுடிந்தது.
மேற்குலக அணியிலிருந்து ஒரு நாட்டை பிரித்தெடுத்து, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதில், முக்கியமான வெற்றி ஈட்டியது இலங்கையின் முன்னைய அரசாங்கம். இலங்கை அரசாங்கம், சர்வதேச அரங்கில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை தன்பக்கத்தில் வைத்திருந்ததை விட, அவுஸ்திரேலியாவை தன்பக்கம் திருப்பிக்கொண்டதே மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாக கருதலாம். இப்படி இந்த அகதிகள் படகு விவகாரத்தை வைத்து, அவுஸ்திரேலியா மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பல அனுகூலங்களை பெற்றிருந்தது.
தன்னை வைத்து சர்வதேச அரங்கில் இலங்கை தப்பிக்கொள்கிறது என்பதை அவுஸ்திரேலியா அறிந்திருந்தாலும், அதற்கு தனது பிரச்சினை மட்டுமே முக்கியமானதாக இருந்தது. தமிழர்கள் அவலப்பட்டதையோ, பிணங்களின் மீது ஏறி நின்று இலங்கை அரசு ஆட்சி செய்ததையோ அவுஸ்திரேலியா கண்டுகொள்ளவில்லை.
அகதிகள் படகுகளை கட்டுப்படுத்திய இலங்கை அரசுடன் தோளில் கைபோட்டு நடக்க தயாராக இருந்தது அவுஸ்திரேலியா.
அவுஸ்திரேலியாவின் அந்த பலவீனமே, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தையும் ரோனி அபோட் அரசாங்கத்தையும் நெருக்கமாக வைத்திருந்தது. இந்த நெருக்கம் குறித்து இலங்கையர்கள் சந்தேகம் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவின் பிரதமர்களிலேயே அகதிகள் விவகாரத்தை மோசமாக கையாண்டவரான ரொனி அபோட், மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் கைகோர்த்தமையின்; மூலம், தனது நாட்டுக்கு நல்லதை செய்திருக்கலாம். ஆனால், சர்வதேச அரங்கில், இலங்கையின் முன்னைய அரசுடன் கைகோர்த்துக்கொண்டமையின்; மூலம் தனது கைகளிலும் இரத்தக்கறையை பூசிக்கொண்டது. இதனாலேயே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியா தனது கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
18 minute ago