Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மார்ச் 02 , மு.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஐயூப்
புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் தொடர்பாக மக்களிடையே ஓரளவுக்காவது நம்பிக்கை இருந்திருந்தால் அது படிப்படியாகவும் வேகமாகவும் அற்றுப்போவதை இப்போது அவதானிக்க முடிகிறது. ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னர் பதவிக்கு வந்த சகல அரசாங்கங்களும் வாக்குறுதிகளை மீறியிருப்பதனால் தற்போதைய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அற்றுப்போவதைப்பற்றி மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவும் இல்லை.
அதவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களித்த மக்கள் வெறுப்படைந்து இருப்பதாகவும் தெரியவில்லை. ஏமாந்து பழகியிருப்பதே அதற்குக் காரணமாக இருக்க வேண்டும். 100 நாட்கள் வேலைத்திட்டத்திலிருந்த வாக்குறுதிகளைப் பற்றி இப்போது அரசியல்வாதிகள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது கவனமும் இப்போது தேசிய அரசாங்கம் என்ற விடயத்தின்பால் திரும்பியிருக்கிறது. கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் கட்டுநாயக்கவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடைபெற்ற செயலமர்வொன்றின் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்தொன்றை அடுத்தே தேசிய அரசாங்கம் தொடர்பான இந்த விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சு.க உறுப்பினர்கள் சிலருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கி தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க தாம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அந்த செயலமர்வின் போது கூறியதாக கூறப்படுகிறது. அதாவது தேசிய அரசாங்கம் என்று கூறப்பட்ட போதிலும் அது உண்மையிலேயே ஐக்கிய தேசிய கட்சியும் சு.க.வும் இணைந்து உருவாக்கும் தேசிய அரசாங்கமாகவே இருக்கும்.
ஜனாதிபதியின் இந்தக் கூற்று இப்போது நாட்டில் சில சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. ஆயினும், இது ஜனாதிபதியினால் புதிதாக வெளியிடப்பட்ட கருத்தொன்றல்ல. 'நூறு நாட்களில் புதிய நாடொன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம்' என்ற பெயரில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட திகதி வாரியான வேலைத்திட்டத்தின் இறுதி அம்சமாக இது குறிப்பிடப்பட்டு இருந்தது. 'நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெறும் வகையிலான அமைச்சரவையைக் கொண்ட சர்வகட்சி அரசாங்கம்' என்றே அந்த வேலைத்திட்டத்தில் இது குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே, கட்டுநாயக்கவில் நடைபெற்ற மேற்படி செயலமர்வின் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்து புதியதல்ல. ஆயினும், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் இக்கருத்து முன்வைக்கபட்ட போது, அது மக்கள் மத்தியில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்சம் விலைவாசி குறைத்தலையும் விமர்சிக்கும் தற்போதைய எதிர்க்கட்சியில் உள்ள சிலராவது அதனை அப்போது விமர்சிக்கவில்லை.
ஆனால், 'தேசிய அரசாங்கம்' என்ற பெயர் அரங்குக்கு வந்துள்ள நிலையில், இப்போது அது பலரது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஐக்கிய தேசிய கட்சியும் சிறுபான்மை கட்சிகளும் மட்டுமே அதனை விமர்சிக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை வரவேற்பதைப் போல் கருத்து தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தேசிய அரசாங்கத்தின் கீழ் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார்.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு முன்னர் பலமுறை சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைப் பற்றி கருத்து வெளியிட்டு இருந்தார். சிலவேளை ஜனாதிபதியின் தேசிய அரசாங்கம் என்ற கருத்தை ஐ.தே.க வரவேற்கிறதாகத்தான் இருக்க வேண்டும். அல்லது ஐ.தே.க.வின் கருத்தையே ஜனாதிபதி வெளியிட்டு இருக்கிறார் போலும். ஏனெனில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சு.க.வின் தலைவராக இருந்த போதிலும் அவரது கருத்துக்கள் அனேகமாக சு.க.வின் கருத்துக்களை விட ஐ.தே.க. தலைவரின் கருத்துக்களை ஒத்தே இருக்கின்றன.
இப்போது இந்த தேசிய அரசாங்கம் என்ற கருத்தை பலர் விமர்சிக்கின்றனர். சிலர் அதனை ஆதரிக்கின்றனர். அந்த ஆதரவு மற்றும் எதிர்ப்புக்களை அவதானிக்கும் போது அவை கொள்கைப் அடிப்படையிலன்றி தேசிய அரசாங்கத்தால் தமக்கு என்ன நடக்கும் என்பதன் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக இரு பிரதான கட்சிகள் அல்லது இரு பெரிய கட்சிகள் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால், சிறு கட்சிகளினது பேரம் பேசும் சக்தி முற்றாகவே அற்றுப்போகும். அந்த அடிப்படையிலேயே அக்கட்சிகள் கருத்து வெளியிட்டு வருகின்றன.
இக்கட்சிகளுக்கு தனியே போட்டியிட்டு பிரதேச சபையொன்றில் ஒரு சில ஆசனங்களையாவது பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, அவர்கள் பிரதான கட்சிகளில்இணைந்தே போட்டியிட வேண்டியுள்ளது. ஆனால் தேசிய அரசாங்கம் என்ற நிலை வந்தால் இந்த கட்சிகளின் முக்கியத்துவம் அத்தோடு முடிவடைந்துவிடும். அவற்றுக்கு நாடாளுமன்றம் என்பது வெறும் கனவாக மாறிவிடும்.
அக்கட்சிகளுக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைக்க வேணடுமானால் நிச்சயமாக பிரதான இரு கட்சிகளும் மோதிக்கொள்ள வேண்டும். அதேவேளை, அவ்விரு கட்சிகளும் சம பலத்துடன் இருக்க வேண்டும். அப்போது தான் பிரதான கட்சிகள் சிறு கட்சிகளின் உதவியை நாடும். ஆனால், தேசிய அரசாங்கம் அந்த நிலையை இல்லாமல் செய்துவிடும். எனவே அக்கட்சிகள் இதனை எதிர்க்கின்றன. தேசிய அரசாங்கத்தினால் நாட்டுக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. சிறு கட்சிகளாக இருந்த போதிலும் சிறுபான்மை கட்சிகளும் மக்கள் விடுதலை முன்னணியும் சற்று வித்தியாசமாக நடந்து கொள்கின்றன. உதாரணமாக தேசிய அரசாங்கம் உருவானாலும் இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைபபு அரசாங்கத்தோடு சேரப்போவதில்லை.
கூட்டமைப்பின் தலைவர்கள் அமைச்சுப் பதவிகளை விரும்பாமல் இல்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அதனை விரும்பமாட்டார்கள். தமிழ் வாக்காளர்களின் உறவினர்கள் என்ற வகையில் புலம்பெயர்ந்தவர்;களே அவ்வாக்காளர்களின் மன நிலையை கட்டுப்படுத்துகிறார்கள். எனவே கூட்டமைப்பின் தலைவர்கள் விரும்பினாலும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு தேசிய அரசாங்கம் வந்தாலும் வராவிட்டாலம் ஒன்றே தான்.
தேசிய அரசாங்கம் ஒன்றின் மூலம் நாடு பயன்பெறும் வாய்ப்பு இருந்தால், அதனை எதிர்க்கவும் கூட்டமைப்புக்கு வேறு காரணங்கள் இல்லை. இந்த நிலையில் தான் சுமந்திரன் மேற்படி கருத்தை வெளியிட்டு இருக்கிறார். மக்கள் விடுதலை முன்னணி சில காலமாக நாட்டில் பிரபல்யம் அடைந்து வருகிறது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தமக்கு கூடுதலான ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அக்கட்சி நினைக்கிறது. அதேவேளை, கூட்டரசாங்கம் அமைக்க அக்கட்சி முன்வந்தால் முன்னிலை சோஷலிஸ கட்சி போன்ற தமது சித்தாந்த போட்டியாளர்கள் தமது உறுப்பினர்களில் மேலும் ஒரு பிரிவினரை பிரித்து விடுவார்கள் என அக்கட்சித் தலைவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அக்கட்சியும் பொதுத் தேர்தலின் போது எந்தவொரு பிரதான கட்சியோடும் கூட்டுசேர மாட்டாது என ஊகிக்கலாம்.
இந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணிக்கும் பிரதான இரு கட்சிகள் ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைத்தாலும் ஒன்று, இல்லாவிட்டாலும் ஒன்று என்ற நிலை தான் இருக்கிறது. எனவே, தமிழ் தேசிய கூட்டமைப் போலவே தமக்கு என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்காமல் நாட்டுக்கு என்ன நடக்கப் போகிறது என்ற அடிப்படையில் கருத்து வெளியிட அக்கட்சியினாலும் முடியும். இந்த நிலையில் தான் தேசிய அரசாங்கம் அமைத்தால் கடந்த அரசாங்கத்தின் திருடர்களும் ஊழல் பேரவழிகளும் தண்டிக்கப்படுவார்களா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியிருந்தார்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராவார். அவ்வாறான நிலைமை இல்லாவிட்டால் ஐ.தே.க. இதனை விரும்பாது. ரணில் பிரதமரானால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி தாம் இழந்த சிறப்புரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள கனவு காணும் சிறு கட்சிகளினதும், அதே கனவை காணும் சு.க.வில் உள்ள பிரிவினரதும் நிலைமை படு மோசமானதாகிவிடும்.
அந்த சிறு கட்சிகளுக்கு மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது. இரு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் ஏனைய சிறு கட்சிகளுக்குப் போலவே மஹிந்தவை கரை சேர்க்க முயற்சிக்கும் அக்கட்சிகளுக்கும் தொற்றிக்கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பிரதான கட்சியொன்றும் இல்லாமல் போய்விடும். எனவே அவ்விரு சாராரும் தேசிய அரசாங்கம் என்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.
இவ்வாறு எல்லோரும் தமக்கு என்ன நடக்கப்போகிறது என்பதன் அடிப்படையிலேயே பிரச்சினையை அணுகுகிறார்கள். தேசிய அரசாங்கம் வந்தாலும் தமது நிலை மாறாது என்று நினைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகள் மட்டும் பிரச்சினைகளை தீர்க்க அது உதவுமா இல்லையா என்று பார்க்கின்றன.
சுமந்திரனின் கருத்தில் ஒரு நியாயம் இருக்கிறது தான். இவ்வளவு காலமும் ஒரு பிரதான கட்சி இனப் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கும் போது மற்றைய பிரதான கட்சி, இனவாதத்தை தூண்டி அதனை குழப்பியது. இரு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் இனவாதத்தைத் தூண்ட பிரதான கட்சியொன்று இல்லாமல் போய்விடும் என்று நினைப்பதில் நியாயம் இருக்கிறது. இந்த அடிப்படையில் தேசிய அரசாங்கம் ஒன்று இனப் பிரச்சினையை தீர்க்க உதவும் என சுமந்திரன் கூறியது சரி தான்.
ஆனால், இன்று இனவாதத்தை தூண்டுவதில் பிரதான கட்சிகள் மட்டும் ஈடுபடவில்லை. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உருமய ஆகிய கட்சிகளும் எதிலும் திருப்பதியடையாத சில தமிழ் அரசியல்வாதிகளும்; இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதை தொடர்ந்தும் எதிர்த்து வருவார்கள்.
'தேசிய அரசாங்கம் வேண்டாம், முன்னைய அரசாங்கத்தின் திருடர்களைப் பிடி!' என்றும் 'தேசிய அரசாங்கம் வேண்டாம், நாடாளுமன்றத்தை கலை!' என்றும் அநுர குமார திஸாநாயக்க கூறி வருகிறார். இது ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களாகவே தெரிகிறது. தேசிய அரசாங்கம் வேண்டாம் திருடர்களைப் பிடி என்பது சரி தான். ஆனால் அத்தோடு நாடாளுமன்றத்தை கலை என்றும் கூறும் போது நாடாளுமன்றத்தை கலைக்கு முன்னர் திருடர்களைப் பிடிக்கும் பணியை பூர்த்தி செய்ய அரசாங்கத்தால் முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே, இந்த தேசிய அரசாங்கம் பற்றிய வாதங்கள் இடியப்ப சிக்கலாகவே தெரிகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி என்னவென்றால் எதற்காக தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே. அந்தக் கேள்வி, நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
25 minute ago