Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 17 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், நல்லிணக்கம் சம்பந்தமான ஒரு பெரிய சோதனையை அடுத்த வாரத்தில் சந்திக்கப்போகிறது.
வரும் மே 18ஆம் திகதியுடன் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்தநிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த போர் வெற்றி விழா, இம்முறை போர் வீரர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் இது தொடர்பான நிகழ்வுகள் வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளன.
முன்னைய அரசாங்கம், ஆரம்பத்தில் கொழும்பு-காலிமுகத் திடலிலும் அதன் பின்னர் கடந்த ஆண்டு மாத்தறையிலும் பெரியளவிலான வெற்றி விழாவாகவே கொண்டாடியது.
தற்போதைய அரசாங்கம் போர் வெற்றி விழாவை கொண்டாடவும் முடியாத அதேவேளை, அதனை முற்றாக கைவிடவும் முடியாத நிர்ப்பந்தத்துக்குள் சிக்கிப் போயிருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம், வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தான்.
முன்னைய அரசாங்கம், மே 19ஆம் திகதியை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட நாளாக மட்டும் கொண்டாடியிருக்கவில்லை.
அது தமிழரை வெற்றி கொண்ட நாளாகத் தான், கொண்டாடப்பட்டது. 2009ஆம் ஆண்டு போர் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் இருந்து, இன்று வரை அத்தகைய நிலையே நீடித்து வந்திருக்கிறது.
தாம் தமிழ்மக்களுக்கு எதிராகப் போரை நடத்தவில்லை என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராகவே போரை நடத்தியதாகவும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறிய நியாயங்கள் எதுவும் இன்று வரை தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அதுமட்டுமன்றி, விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்கே போர் நடத்தப்பட்டதாக அரசாங்கம் கூறிய காரணமும், இன்று வரை தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை.
போர் நடத்தப்பட்ட முறை மட்டுமன்றி, போருக்குப் பிந்திய நிலையும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில், தமிழ் மக்களுக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது.
அதில், தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதாக, ஐ.நா. அறிக்கைகளில் கூட பதிவாகியிருக்கின்றன.
இன்னும் பெரும் எண்ணிக்கையானோர் காணாமற்போகவும், ஆயிரக்கணக்கானோர் தமது அங்கங்களை இழந்து நிரந்தர வடுக்களுடன் வாழவும் இந்தப் போர் காரணமாகியது.
அதைவிட, தமது சொந்தங்களையும், சொத்துக்களையும், இழந்து வீதிகளிலும் முகாம்களிலும் ஆண்டுக்கணக்காக அலையும் தமிழர்களின் அவலநிலை இன்னமும் தீரவில்லை.
வன்னியில் போருக்குள் வாழ்ந்த மக்களுக்கு நேரடியான வடுக்களையும் காயங்களையும் கொடுத்த இந்த போர், வன்னிக்கு வெளியே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் அவர்களின் உறவுகளுக்கும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தத் தவறவில்லை.
இதனால், இந்தப் போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்ற கருத்தை தமிழ்மக்களிடம் ஏற்படுத்தவும் இல்லை, இனிமேல் ஏற்படுத்தப் போவதுமில்லை.
ஏனென்றால், இதில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட தமது உறவுகள் ஆயுதமேந்திய புலிகள் அல்ல, வெறும் அப்பாவிகள் என்பதை அவர்கள் அறிவார்கள்.
அவர்களால் எப்படி இதனை தமிழருக்கு எதிரான போர் அல்ல, புலிகளுக்கு எதிரான போர் தான் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?
அதுபோல, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் தம்மை விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரியிருக்கவும் இல்லை.
அவ்வாறு கோரியிருந்தாலும் கூட, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து, இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்த மக்கள் உரிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், முள்வேலி முகாம்களுக்குள் மாதக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டு, சொல்ல முடியாத துன்பங்கள் வேதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அதனை ஒரு விடுதலையாக தமிழ்மக்களால் எப்படி உணர்ந்திருக்க முடியும்?
போருக்குப் பின்னரும் தொடர்ந்த தமிழர்கள் மீதான அடக்குமுறைகளும் கெடுபிடிகளும் போரும் புலிகளும் மட்டும் தான் அதற்குக் காரணமில்லை என்ற உண்மையை மீண்டும் தமிழர்களுக்கு உறைப்பாக உணர்த்தியிருந்தது.
போருக்குப் பின்னர் தமிழர்கள் தமது சொந்த இடங்களில், பழையபடி வாழ்க்கையை எந்த அச்சமும் இல்லாமல் வாழவும் எல்லா உரிமைகளை அனுபவிக்கவும் கூடிய நிலையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தால் கூட, அதனை விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்த விடுதலையாக தமிழ் மக்களால் கருத முடிந்திருக்கும்.
ஆனால் இன்றும் கூட, தமது நிலத்துக்காகவும் அடிப்படை உரிமைக்காகவும் அச்சமில்லா இயல்பு வாழ்வுக்காகவும் போராட வேண்டிய நிலையில் தான் தமிழர்கள் இருக்கின்றனர்.
இந்தநிலையில், விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ்மக்களை மீட்கவே போரை நடத்தினோம் என்ற மஹிந்த அரசாங்கம் கூறிய நியாயமும் பொய்யாகிப் போய் விட்டது.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்மக்களை நசுக்கி வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு விட்டது.
இப்போது நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில், மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம், பதவிக்கு வந்து ஐந்து மாதங்கள் தான் ஆகியுள்ளன.
இந்த அரசாங்கத்தில் இருந்தவர்களும் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரை ஆதரித்தவர்கள் தான், அந்தப் போரில் தமிழர்கள் பட்ட அவலங்களையும் துன்பங்களையும் கண்டு ரசித்தவர்கள் தான் வெற்றி விழாக்களிலும் பங்கேற்றவர்கள் தான்.
ஆனால், ஆட்சிமாற்றத்துக்கு தமிழர்களின் ஆதரவு தேவைப்பட்ட போது, ஆட்சி மாற்றத்துக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவைப்பட்ட போது, அதற்கேற்ப தமது கொள்கையை மாற்றிக் கொண்டவர்கள்.
முன்னைய அரசாங்கத்தை விட முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடையவர்கள் என்றில்லா விட்டாலும் கொஞ்சம் வேறுபட்டவர்களாக காட்டிக் கொள்கின்றனர்.
இறுதிப்போரில் குற்றங்களோ, மீறல்களோ நடக்கவில்லை என்று சாதித்தது முன்னைய அரசாங்கம்.
அதனால், அதுகுறித்த எத்தகைய விசாரணைகளையும் நிராகரித்து, தமிழர்களுக்கான நீதியை மறுத்து வந்தது.
இப்போதைய அரசாங்கம், போரின் போது குற்றங்கள், மீறல்கள் நடந்திருக்கலாம், அதற்கு வெளிநாட்டு விசாரணை தேவையில்லை, உள்நாட்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்போம் என்கிறது.
இதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று இப்போதைய அரசாங்கம் சொல்கிறது.
இப்போது, போர் முடிந்து விட்டது, ஆனால் அதன் வடுக்கள் இன்னும் ஆறவுமில்லை, அதனை ஆற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவுமில்லை.
முன்னைய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இனரீதியாக சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் கொள்கையைத் தான் கடைப்பிடித்தது.
தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்களை அனைத்தையும் அழித்து விட்டு, படையினருக்கான போர் நினைவுச் சின்னங்களையும் பௌத்த விகாரைகளையும் அமைத்து, தமிழர்கள் மீது மேலாதிக்கத்தை திணிக்கும் முயற்சிகள் தான் நடந்தன.
இது தமிழர்களை இன்னும் இன்னும் சீண்டும் வகையிலும் கொதிப்படையச் செய்யும் வகையிலும், அவர்களைக் காயப்பட வைக்கும் வகையிலும் அமைந்திருந்தன.
ஆனால், புதிய அரசாங்கம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட சாத்தியமான வழிகளைக் கடைப்பிடிக்கப் போவதாக, உறுதியளித்திருக்கிறது.
தனியே பொறுப்புக்கூறல் மட்டுமே, தமிழர்களுக்குத் தேவையான நீதி மட்டுமல்ல. அவர்களின் மனங்களில் உள்ள காயங்களும் ஆற்றப்பட வேண்டியது அவசியம்.
நல்லிணக்கம் குறித்து இப்போது அதிகம் பேசப்படுகிறது. வெளிநாடுகளும் அதனை வலியுறுத்துகின்றன. உள்நாட்டிலும் வலியுறுத்தகப்படுகிறது. அரசாங்கமும் அது தமது கடமை என்கிறது.
அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியமான இரண்டு விடயங்கள் வடுக்களை ஆற்றுதலும் பொறுப்புக்கூறலும் ஆகும்.
வடுக்கள் அல்லது காயங்களை ஆற்றுவதில், இறந்தவர்களை நினைவு கூருதல் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
இது போரில் மட்டுமன்றி சாதாரண மனித வாழ்வில், இறந்து போனவர்களுக்காக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் நினைவு கூரும் பாரம்பரியம், எல்லா இன மக்களிடையேயும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.
தமிழர்களைப் பொறுத்தவரையில், இதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வந்திருக்கின்றனர்.
தமிழ் நாளிதழ்களில், இறந்து போனவர்களை நினைவு கூர்ந்து வெளியிடப்படும் அதிகளவிலான விளம்பரங்களே இதற்கு சாட்சி.
இது இப்போது ஏற்பட்ட வழக்கமல்ல. நீண்டகாலமாகத் தொடருகின்ற பாரம்பரியம். ஆனால், இந்த உரிமை சுதந்திரம் இன்னமும் கூடத் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.
தமிழர்களை விடுவிப்பதற்காக போர் நடத்திய அரசாங்கம், அவர்களின் சுதந்திரத்துக்காக போரை நடத்தியதாக கூறிய அரசாங்கம், இன்று வரை இறந்து போன தமிழர்களை நினைவு கூர அனுமதிக்கவில்லை.
போரில் இறந்து போன, தமது உறவுகளுக்காக ஒன்று கூடி கண்ணீர் விட்டு அழும் சுதந்திரத்தையோ, அவர்களுக்காக ஒரு விளக்கை ஏற்றி வைத்து மலர்களைத் தூவுகின்ற உரிமைகளையோ கொடுக்காமல் தான், அரசாங்கம் இதுவரை காலத்தைக் கடத்தி வந்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்காலில் மட்டுமன்றி, பொது இடங்களிலும் தமது வீடுகளிலும் கூட தமிழ்மக்களால் நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலையே நீடிக்கிறது.
முன்னைய அரசாங்கம் இந்த விடயத்தில் இராணுவத்தினரையும் பொலிஸாரையும் ஏவி விட்டு கடுமையாக தமிழ்மக்களை அடக்கியது.
அதையும் மீறி நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்தியவர்களை கடுமையான சட்டங்களின் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் அடக்கியது.
ஆனால், இப்போதைய அரசாங்கம், நல்லிணக்கத்துக்கான கதவுகளை திறப்பதாக கூறிக் கொள்கிறது.
இந்த அரசாங்கம், போர் வெற்றி விழாவை எப்படி நடத்தப் போகிறது என்பதும் முள்ளிவாய்க்காலில் மரணமான மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
போர் வெற்றி விழா இம்முறை இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருந்தாலும், அன்றைய நாளில் படையினரையும் போரில் உயிரிழந்தவர்களையும் நினைவு கூரும் நாளாக கடைப்பிடிக்கவுள்ளதாக, அரசாங்கம் கூறுகிறது.
ஆனால், அன்று இராணுவ அணிவகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இது போரில் பெற்ற மேலாதிக்கத்தை உணர்த்துகின்ற ஓர் அம்சம் தான்.
நினைவு கூரும் நிகழ்வாகவும் இல்லாமல் வெற்றி விழாவாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே ஏதோ ஒன்றை நடத்தி விட்டுப் போக நினைக்கிறது அரசாங்கம்.
இதன் மூலம் சிங்கள மக்களிடையே, நாமும் படையினரைக் கௌரவிக்கிறோம் என்று காட்டவும் முடியும்.
அதேவேளை, தமிழர்களிடம், நாம் போர் வெற்றியைக் கொண்டாடவில்லை என்றும் கூறவும் முடியும்.
விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்படியொரு இரண்டும் கெட்டான் வேடத்தைப் போடும் நிலையில் அரசாங்கம் இருக்கிறது.
ஆனால், இந்த இரண்டும் இல்லாத நிலை என்பது, நிச்சயமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.
போரில் இறந்தவர்கள் அனைவரையும் நினைவு கூரும் நாளாக கடைப்பிடிக்கவுள்ளதாக கூறும் அரசாங்கம், முள்ளிவாய்க்காலில் மட்டுமன்றி, தமிழர்கள் தாம் விரும்பிய இடங்களில் இறந்தவர்களுக்காக நினைவு கூரும் உரிமையையும் வழங்க வேண்டும்.
அத்தகைய உரிமை அளிக்கப்படுமா அல்லது அதனை நசுக்கும் வகையில் வடக்கு, கிழக்கில் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் தொடருமா என்று பார்க்க வேண்டும்.
முன்னைய அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும், மே 18ஆம் திகதியை முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களை நினைவு கூருவதற்கு அனுமதி மறுத்தால், இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லையென்றாகி விடும். அது தமிழர்களைக் கடுப்பாக்கி விடும்.
அதேவேளை, முள்ளிவாய்க்காலில் நினைவு கூரலுக்கு அரசாங்கம் அனுமதி அளித்தால், அதை மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இனவாதப் பிரசாரமாக்கி விடும் ஆபத்து உள்ளதை மறுக்க முடியாது.
எனவே, இந்த அரசாங்கம் எதையும் உறுதியாகவோ வெளிப்படையாகவோ அறிவிக்க முடியாது.
அதேவேளை, எதையும் கண்டும் காணாத ஒரு போக்கை கடைப்பிடிக்கலாம்.
ஆனால், மரணித்தவர்களை நினைவு கூரும் உரிமையும், பொறுப்புக்கூறலும் நல்லிணக்கத்துக்கு மிகவும் அவசியமானவை.
இவற்றைத் தாண்டி நிலையான அமைதியை நாட்டில் ஏற்படுத்தி விட முடியாது. அந்தவகையில், தற்போதைய அரசாங்கத்துக்கு, அடுத்த வாரம் ஒரு முக்கியமான சோதனையாகவே இருக்கும்.
ஏனெனில், நினைவுகூரும் உரிமையை தமிழருக்கு அரசாங்கம் அளிக்கப் போகிறதா என்பதை வைத்து, பொறுப்புக்கூறலை அரசாங்கம் நியாயமாக நிறைவேற்றுமா என்பதையும் சர்வதேசம் கணக்கிடலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025