Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 27 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நீதிமன்றத் தீர்ப்பினால்' கட்டாய விடுப்பில் சென்ற ஜெயலலிதா, அதே நீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பால் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகியிருக்கிறார்.
முதல் மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார். இரண்டு தடவைகள் நீதிமன்ற தீர்ப்புகளால் பதவி விலகி மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதுவரை முதலமைச்சாராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது பேக் டு தி பெவிலியன் என்பது போல் நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
சனிக்கிழமை (23) அன்று மிகவும் குறுகிய நேரம் மட்டுமே செலவிட்டு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார் ஜெயலலிதா.
பொதுவாக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக இந்திய அரசியல் சட்டத்தின் 164(4) பிரிவு அமைச்சர் ஒருவர் பதவியேற்கும் முன்பு, அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநர் செய்து வைக்க வேண்டும் என்றுதான் சொல்கிறது.
'அவர்களுக்கு' என்று அரசியல் சட்டம் சொல்லவில்லை. ஆனாலும் தமிழகத்தில் முதல் முறையாக அமைச்சரவையின் 28 அமைச்சர்களில் (முதலமைச்சர் ஜெயலலிதா தவிர) முதலில் 14 பேரும் அடுத்து 14 பேரும் கோரஸாக பதவியேற்றார்கள்.
ஆளுநர் ரோசய்யா இப்படியொரு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புத் தீர்மானத்தை செய்த கவர்னராக தமிழக ஆளுநர்கள் வரலாற்றில் இடம் பெறுகிறார்.
பதவிப்பிரமாணம் முடிந்த மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. இருந்தாலும் அன்றைய தினம் மதியம் முதல்வர் அலுவலகம் இருக்கும் தலைமைச் செயலகத்துக்கு வந்தார் ஜெயலலிதா.
அவரை அமைச்சர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் வரவேற்றனர். நேராக தனது அலுவலகத்துக்குச் சென்று பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா ஐந்து முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில் முக்கியமானது தமிழகம் முழுவதும் மிகவும் பாப்புலரான அம்மா உணவகங்களை 201 இடங்களில் காணொலி காட்சி மூலம் திறந்த வைத்ததுதான்.
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு வந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் ஒரிஜினல் டிராக்கில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.
இனி அனைவரும் கூறி வந்த 'ஓ.பி. ஆட்சி' (முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம்) விடைபெற்று, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி பணியைத் தொடருகிறது.
இன்னும் ஒரு வருடங்கள்தான் அ.தி.மு.க.வின் ஆட்சிக்கான பதவிக்காலம் இருக்கிறது. இந்தப் பதவிக்காலத்தில் மாநிலத்தில் ஆட்சியை நடத்த வேண்டும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குச் செல்லும் அப்பீல் மனுவை சமாளிக்க வேண்டும்.
மாநில ஆட்சியைப் பொறுத்தவரை கடந்த 7 மாதங்களில் தமிழகத்தில் எந்த நிர்வாகமும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு கிராம அளவில் போய் விட்டது.
இதை தலை கீழாக மாற்றி 'அ.தி.மு.க. அரசு செயல்படும் அரசு' என்று காட்ட வேண்டிய பெரும் சவால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.
எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றுமையுடன் இல்லையென்றாலும், அவர்கள் அனைவருமே அ.தி.மு.க.வை எதிர்ப்பதில் ஒருமுகமாகி விட்டார்கள். தனித் தனியாக நின்று அ.தி.மு.க.வுக்கு எதிரான தாக்குதலை தொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெயலலிதா கோட்டைக்குச் சென்ற தினத்தில் மதுரை மாநகரில் மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தி, 'நம்மை ஏமாற்றிய நான்கு ஆண்டுகள்' என்று அ.தி.மு.க.வை கடுமையாகச் சாடியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
அது மட்டுமின்றி அ.தி.மு.க. மீது ஒரு குற்றப்பத்திரிக்கையும் வாசித்திருக்கிறது. துறை ரீதியாக அ.தி.மு.க.வின் தோல்விகள் என்ன என்பதை பட்டியலிட்டுள்ளது.
மதுரையில் திரண்ட கூட்டம் மாற்றத்துக்கான அறிகுறி என்பதை வெளிப்படுத்துவது போல் இருந்தது என்கிறார்கள் தி.மு.க. முன்னால் அமைச்சர்கள்.
அதை விட முக்கியமாக இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது மு.க. ஸ்டாலின்தான். மேடையில் 18 மாவட்டச் செயலாளர்கள் இருந்தாலும் வரவேற்புரைக்குப் பிறகு ஒரேயொரு பேச்சாளர். அது தலைமை பேச்சாளர்.
அது யாரென்றால் மு.க.ஸ்டாலின். தி.மு.க.வின் பொதுக்கூட்டங்கள் இதுவரை இப்படியொரு வித்தியாசமான முறையில் நடைபெற்றதில்லை. ஜெயலலிதா, முதல் நாள் பதவியேற்பு விழாவினை அரை மணி நேரத்தில் முடித்தார் என்றால் இந்த மாபெரும் மாநாட்டை தி.மு.க. ஒரு மணி நேரத்தில் முடித்தது.
ஆகவே, அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிசயங்களை சந்திக்க இருக்கிறது என்பதற்கான முன்னோட்டங்கள்தான் இந்த நிகழ்வுகள் எல்லாம். ஒரு வேளை எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டால், அதை சமாளிக்க வேண்டிய கட்டத்தில் அ.தி.மு.க. இருக்கிறது.
இதற்கிடையில்தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட விருக்கும் அப்பீல் வழக்கை தாக்குப் பிடித்து சமாளிக்க வேண்டிய நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கிறார்.
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு பா.ஜ.க.வின் மூத்த அமைச்சர்கள் டெல்லியிலிருந்து வருவார்கள் என்று செய்திகள் கசிந்தன. ஆனால் யாரும் வரவில்லை. அதற்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பா.ஜ.க.வின் சார்பில் வந்தார்.
ஆனால் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பதவியேற்பு அழைப்பிதழே வழங்கப்படவில்லை. மாநிலத் தலைமையைப் புறக்கணித்து விட்டு, மத்திய தலைமை இந்த விழாவில் கலந்து கொண்டதை பா.ஜ.க.வினர் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள்.
இது ஒன்றும் புதிதல்ல. முன்பொருமுறை பா.ஜ.க.வும் தி.மு.க.வும் கூட்டணியாக இருந்த சமயத்தில், 'தமிழக பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. பா.ஜ.க. இடம்பெற்றுள்ள தேசிய அளவிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தி.மு.க. நீடிக்கிறது' என்று வினோதமான உடன்படிக்கை இருந்த காலகட்டம் தமிழக அரசியலில் உண்டு.
பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை என்றாலும் பிரதமர் நரேந்திர மோடி 12 நாட்களுக்குள் இரு முறை ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
முதலில் அவர் வழக்கிலிருந்து விடுதலை பெற்றவுடன் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். இப்போது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் வாழ்த்து சற்று வித்தியாசமாக இருந்தது. ஜெயலலிதா முதல்வரானதற்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், 'மாநில அரசு வெற்றிகரமாக தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்ய மத்திய அரசு உதவும்' என்று கூறியிருக்கிறார்.
மாநிலத்தில் நடக்கும் அ.தி.மு.க.வுக்கு தனிப் பெரும் பெரும்பான்மை இருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. இந்த சூழ்நிலையில் 'பதவிக்காலத்தை வெற்றி கரமாக முடிக்க' எப்படி பா.ஜ.க. உதவப் போகிறது என்ற கேள்விக்குறி பலரது மனதிலும் எழுந்திருக்கிறது.
குறிப்பாக நிதி அமைச்சர் அருண்ஜேட்லியின் இந்த பேச்சை தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. பிரதமரின் வாழ்த்து, மத்திய நிதி அமைச்சரின் வாழ்த்து, மாநிலத்தில் உள்ள பா.ஜ.க.வினரின் வாழ்த்து என்று பல்வேறு வாழ்த்துக்களுடன் இந்த முறை பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா தேர்தல் யுக்தியை எப்படி வகுக்கப் போகிறார் என்றுதான் இப்போது அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
பா.ஜ.க.வினரின் வாழ்த்துக்கள் எல்லாமுமே அ.தி.மு.க.வின் ஆதரவை நாடாளுமன்றத்திலும் ராஜ்ய சபையிலும் பெறுவதற்கு மட்டும்தானா அல்லது தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கும் பதிலளித்த அருண்ஜேட்லி, 'அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி இப்போதைக்கு இல்லை' என்று கூறியிருக்கிறார். 'இப்போதைக்கு' என்ற வார்த்தை இதில் சூட்சுமம் நிறைந்த வார்த்தை. 'இப்போதைக்கு இல்லை. பிறகு பார்க்கலாம்' என்பதுபோல்தான் அருண்ஜேட்லியின் பேச்சு இருக்கிறது.
எது எப்படியோ தமிழகத்துக்கு முதலமைச்சராக ஜெயலலிதா வந்து விட்டார். இதுவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு நாங்கள்தான் மாற்று என்று கூறிக் கொண்டிருந்த டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்களும், பா.ஜ.க. போன்ற கட்சிகளும் இப்போது சீனில் காணவில்லை.
ஏனென்றால், களத்தில் ஜெயலலிதா என்றைக்கு வருகிறாரோ அன்றைக்கே அவருக்குப் போட்டியாக எதிர்க்கும் ஒரே கட்சி தி.மு.க. என்ற நிலை உருவாகி விடுகிறது. அதைத்தான் மதுரை மாநகரில் நடைபெற்ற தி.மு.க.வின் மாபெரும் பொதுக்கூட்டம் எடுத்துக் காட்டியிருக்கிறது.
இனி மீண்டும் 'அ.தி.மு.க.- தி.மு.க' அரசியல் தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கும். ஏனென்றால், தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி அமைக்கும் தகுதி இந்த இரு கட்சிகளுக்குத்தான் இருக்கிறது என்பதே இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025