2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வித்தியா விவகாரம் - தேர்தலிலும் எதிரொலிக்குமா?

Kanagaraj   / 2015 மே 28 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. சஞ்சயன்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குப் பலியாகிய சம்பவம், இலங்கைத் தீவின் முக்கிய அரசியல் விவகாரமாக மாறியிருக்கிறது. 

வடக்கிலும், கிழக்கிலும் இந்தக் கொடூர சம்பவத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களும் மக்களின் எழுச்சிகளும், தெற்கிலும் சிறிதளவு பரவத் தொடங்கியுள்ள அதேவேளை, இதனையே இனவாதப் பிரசாரங்களுக்குப் பயன்படுத்துகின்ற நிலையும் தீவிரமடைந்திருக்கிறது.

மாணவி வித்தியா, படுகொலை செய்யப்பட்ட சில தினங்களில் வடக்கில் தோன்றிய அமைதியான போராட்டங்கள், திடீரென வன்முறையாக வெடித்தது.

யாழ். நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளாகியதைத் தொடர்ந்து, 130 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல என்று தெரிவிக்கப்படுகிறது.

பலர் மாணவர்கள், இன்னும் பலர் வீதியால் சென்றவர்கள். மேலும் பலர் வேடிக்கை பார்ப்பதற்காக வந்தவர்கள்.
இவர்கள், வவுனியா, அனுராதபுர சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டங்கள் திடீரென வன்முறையாக உருவாக்கப்பட்டதன் பின்னணியில் புறச்சக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. தமிழ்மக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரிடமும் இந்த சந்தேகம் நிலவுகிறது.

யார் அந்த புறச்சக்தி என்ற கேள்விக்கான பதிலை, தற்போதைய விசாரணைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வருமா என்பது சந்தேகமே. ஏனென்றால், ஏற்கெனவே மாணவி வித்தியா விவகாரத்தில் பொலிஸ் தரப்பு மீது கடுமையான குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் கூறப்பட்டுள்ளன.

பொலிஸ் தரப்பு உடனடியாக முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் காட்டிய அலட்சியமே, வித்தியாவை உடனடியாக மீட்க முடியாமல் போனதற்கான காரணமாக கூறப்படுகிறது.

அதற்குப் பின்னரும், சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க விட்டது, வன்முறைகள் ஏற்படாமல் உரிய பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட விடயங்களில், பொலிஸ் தரப்பு திருப்திகரமான முறையில் செயற்பட்டிருக்கவில்லை என்று எல்லாத் தரப்பினாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கில் ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டது கூட, இதன் பின்னணியில் தான் என்று கூறப்படுவது உண்மையானால், பொலிஸ் தரப்பில் உள்ள குறைபாடுகளை உணர முடியும்.

அதேவேளை, இந்தச் சம்பவங்களில் பொலிஸ் தரப்பு மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்திருக்கிறார்.

எனவே யாழ்ப்பாணச் சம்பவங்களில் பொலிஸ் தரப்பின் தவறுகள் குறைபாடுகள் வலுவாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இப்படியான நிலையில், தொடர்ந்தும் அங்கு முன்னெடுக்கப்படும் விசாரணைகள் எந்தளவுக்கு நீதியாக - நியாயமாக முன்னெடுக்கப்படும் என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

இப்படியான நிலையில் தான், யாழ்ப்பாண வன்முறைகளின் பின்னால் உள்ள புறச்சக்திகளை அடையாளம் காண தற்போதைய பொலிஸ் விசாரணைகள் உதவுமா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

இந்தச் சம்பவங்களில் தொடர்புடைய புறச்சக்திகள், அரசியல் ஆதாயம் ஈட்டவே முனைந்திருக்கின்றன என்பது மட்டும் வெளிப்படை. மாணவி வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர், அதையொட்டி தெற்கில் பரப்பப்படும் வதந்திகள், செய்திகள் என்பன, இந்த விவகாரத்தில் புறச்சக்திகளின் ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது.'யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபாணியில் தான் விடுதலைப் புலிகளும் கூட போராட்டத்தை ஆரம்பித்தனர். 

இது ஆபத்தான நிலைமை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று கூறியிருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரது இன்னொரு உற்ற தோழரான விமல் வீரவன்ச, புலிகள் மீண்டும் தலையெடுத்து விட்டது போலவே கூக்குரல் எழுப்பியிருந்தார். இந்த விவகாரத்தை வைத்து எந்தளவுக்கு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் கூட, அரசியல் கட்சிகள் பல இந்த விவகாரத்தை தமது ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முனைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அரசியலில் முரண்பட்ட சக்திகள் சில சந்தர்ப்பங்களில் ஒன்றுபட்டுச் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. விரைவிலேயே நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள தருணத்தில், இதனை அரசியல் வியாபாரமாக்குவதற்கே பெரும்பாலான அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன.

தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் இதே போக்கு உள்ளது.வித்தியா கொலைக்குப் பின்னர் நடந்த சம்பவங்களின் அந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.இந்தக் கட்டத்தில் மாணவியின் சடலத்தின் மீது அரசியல் நடத்த முனைவதாகவும் இது கேவலமான செயல் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் இதற்காக அவர் பெண்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால், அதனை மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்து விட்டார்.எவ்வாறாயினும், வித்தியா படுகொலை மற்றும் அதற்குப் பிந்திய சம்பவங்களே இப்போது, அரசியலில் பிரதான பேசு பொருளாகியிருக்கிறது.

மீண்டும் அரசியலுக்கு வர முடிவு செய்து விட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மீள எழுந்து நிற்பதற்கு, ஏதாவதொரு வலுவான கைத்தடி தேவைப்படுகிறது.வித்தியா விவகாரத்தை அதற்காகப் பயன்படுத்த எத்தனிக்கிறார். வடக்கில் நடந்த போராட்டங்களை இனவாதப் போராட்டமாக சித்திரித்து, மற்றொரு ஆயுதக் கிளர்ச்சிக்கான அடித்தளம் போடப்படுவதாக அவரும் அவரது தரப்பினரும் சிங்கள மக்களிடையே கருத்துக்களைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். இந்த இனவாதப் பிரச்சாரத்தின் மூலமாக அடுத்தகட்ட அரசியல் நகர்வை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.

மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், அவருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட இடமளிக்குமா என்ற வலுவான சந்தேக இருக்கிறது.இந்த நிலையில், மாற்று அணியாக அவர் போட்டியில் இறங்கினால், வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி இருந்து வருகிறது.ஏனென்றால், அவ்வதாறானதொரு நிலையில் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி இரண்டாகப் பிளவுபடும். எனவே, தனது வாக்கு வங்கியை தெற்கில் அதிகரிப்பதற்கு இனவாதம் போன்ற விடயங்களே கைகொடுக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

போருக்குப் பின்னர், வடக்கை இறுக்கமான இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருந்த அவருக்கு, அங்கு மக்களால் நடத்தப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்கள் அனைத்துமே ஆயுதக் கிளர்ச்சியின் அடித்தளமாகத் தெரிவது அபத்தமானது. வடக்கிலுள்ள மக்களுக்கு ஜனநாயக ரீதியாக ஒரு பேரணியையோ ஆர்ப்பாட்டத்தையோ நடத்தும் உரிமை கூட வழங்கப்படக் கூடாது என்பதில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு எந்தளவுக்கு கடும் போக்குடன் இருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

எதையெடுத்தாலும் அதனை புலிகளுடன் முடிச்சுப் போடுவதும், எத்தகைய போராட்டங்கள் நடந்தாலும் அதனை, ஆயுதப் போராட்டமாக, பிரிவினைவாதம் தலைதூக்குவதாக எச்சரிக்கை செய்வதும் தான் இந்த தரப்புகளின் வாடிக்கையாகி விட்டது.

வடக்கிலுள்ள மக்களுக்கு எந்த உரிமைகளும் அளிக்கப்படாமல் அவர்களை ஓர் அறிவிக்கப்படாத இராணுவ முற்றுகைக்குள் வைத்திருப்பதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாதுகாப்புக் கொள்கையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அந்த நிலைமை தொடரப்படுவதையே அவர்கள் விரும்புகின்றனர் என்பதை இப்போதைய கருத்துக்களில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.

எவ்வாறாயினும், மாணவி வித்தியா விவகாரத்தை வைத்து அரசியல் நலன் தேடும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் முயற்சிகள், கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் இந்தக் கருத்துக்கள் கூட சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்தத் தவறவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்த குற்றச்சாட்டுகள் தான் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
மாணவி வித்தியா கொலையை அடுத்து, நிகழ்ந்த சம்பவங்களும், அதையடுத்து வெளியிடப்பட்ட கருத்துக்களும், அரசாங்கத்தினது பொறுப்பை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.தற்போதைய அரசாங்கமும் சில விடயங்களில் இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவில்லை- நீக்குப் போக்காகவே நடந்து கொண்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட பயணம், அத்தகைய தளர்வு நிலைக்கு முடிவு காண உதவக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெருகி வரும் குற்றச்செயல்களுக்கு, பொலிசாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் மற்றும், அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை என்பன முக்கியமான குற்றச்சாட்டுகளாக கூறப்பட்டு வந்துள்ளன.

இது இப்போது மாணவர்களின் மூலமும், அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மூலமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் குறைபாடுகளை நீக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார்.இது ஒருவகையில், முக்கியமான விடயமும் கூட.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை யாழ்ப்பாணத்துக்கு இழுத்துச் சென்றது, மஹிந்த ராஜபக்ஷவின் இனவாதப் பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு மட்டுமல்ல.

அதற்கும் அப்பால், போருக்குப் பின்னர் வடக்கிலுள்ள மக்களின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவருக்கு உணர்த்தியிருக்கிறது.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு போருக்குப் பின்னர் இளம் சமூகத்திடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, இப்போது அதிகளவில் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.இளைஞர்களை சரியாக வழிநடத்தாது போனால் மீண்டும், அவர்கள் குழப்பங்களில் ஈடுபடும் ஆபத்து உள்ளதாக சில நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போருக்குப் பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாதுள்ள நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சினைகள் உள்ள நிலையில், இத்தகைய எச்சரிக்கைகளின் தார்ப்பரியங்களை உதாசீனம் செய்து விட முடியாது.இது எச்சரிக்கைகள் முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும் விடுக்கப்பட்டது.
ஆனால், அதனை முன்னைய அரசாங்கம் வேறுவகையில் கையாண்டிருந்தது.

இளம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தீய பழக்கவழக்கங்கள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்கான வழிமுறையாகவே கையாளப்பட்டன.தாராளமாக புழங்க விடப்பட்ட போதைப்பொருட்கள், மற்றும் பிற தீய பழக்கவழக்கங்கள் இளம் சமூகத்தை இப்போது பெரும்பாலும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது,இதன் மூலம், தமிழ்ச் சமூகத்தை எந்தவொரு போராட்டங்களிலும் ஈடுபட முடியாத வலுவற்ற சமூகமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.இப்போதும் அந்த நிலையில் பெரிய மாற்றங்கள் எற்பட்டிருக்கவில்லை.

ஆனாலும், வித்தியா படுகொலையைத் தொடர்ந்து மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தன்னெழுச்சியான போராட்டங்களின் வீரியத்தைக் குலைத்து, அதனை வன்முறையாக, இனவாதப் போராட்டமாக மாற்றுவதற்கே தெற்கிலுள்ள அரசியல் சக்திகள் முயற்சித்துள்ளன.அதேவேளை, இந்த கொந்தளிப்பு நிலைமைக்கு முடிவு கட்டப்படாது போனால் அது ஆபத்தான நிலையை எட்டும் என்பதை உணர்ந்தே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு சென்று மாணவர்களிடம் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இதன் மூலம், தமிழ்மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்ற தோற்றப்பாட்டை அவரால் ஏற்படுத்த முனைந்திருக்கிறது.அதேவேளை, வடக்கில் எழுந்துள்ள போராட்டங்களை அடக்குவதிலும் தான் முன்னிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தெற்கிலுள்ள மக்களுக்கும் எடுத்துக் கூற முடிந்திருக்கிறது. எவ்வாறாயினும், மாணவி வித்தியாவின் படுகொலை மற்றும் அதையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் என்பது, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமானதொரு விவகாரமாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள், விசாரணைகளால் திணறிக் கொண்டிருக்கும், மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு, இதுபோன்ற இலகுவாக இனவாதப் பிரசாரமே அதிக பயனைக் கொடுக்கும் என்பதால் அவர்கள் இதனை அவ்வளவு விரைவாக கைவிட்டு விடமாட்டார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .