Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 03 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கேட்டு இனப்பாகுபாடின்றி நாடே அதிர்ந்துள்ள நிலையில், ஒரு கூட்டம் மட்டும் அதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று கூச்சலிடுபவர்களே அக் கூட்டத்தினராவர்.
அவர்கள் இந்த சம்பவத்தையும் மஹிந்தவை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான தமது முயற்சியை நியாயப்படுத்த பாவிக்கிறார்கள்.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறவில்லை என்றும் வித்தியாவின் படுகொலையை அடுத்து இடம்பெற்றதைப் போன்ற ஆர்ப்பாட்டங்களோ நீதிமன்றத்தை தாக்கியதைப் போன்ற சம்பவங்களோ இடம்பெறவில்லை என்றும் அவர்கள் வாதிட்டு வருகிறார்கள்.
எனவே, ஒரு துருப்புச் சீட்டாக பாவிக்க இந்த சம்பவம் கிடைத்தமையையிட்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் போலும்.
ஒருபுறம் தமது ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்று தமிழ் மக்கள் உள்ளிட்ட முழு நாட்டுக்கும் கூற முற்படும் அவர்கள், ஆர்ப்பாட்டங்களைக் காட்டி தமது காலத்தில் தமிழர்கள் இவ்வாறு வாலாட்ட வரவில்லை என சிங்கள மக்களிடம் கூற முற்பட்டுள்ளனர்.
சிங்கள மக்களிடம் அவர்கள் கூறிய விடயத்தை சுட்டிக் காட்டி, அவர்கள் இனவாதத்தை தூண்டுவதாக பலர் குற்றஞ்சாட்டவே இப்போது மஹிந்த அதைப் பற்றிக் குறிப்பிடாமல் நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகிறது என விஹாரைகள் தோறும் கூறி வருகிறார்.
ஆனால், அவர் இதன் மூலம் கடந்த மே 20ஆம் திகதி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் யாழ்ப்பாண நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட போது நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தையே சூட்சுமமாக சுட்டிக் காட்டுகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
மஹிந்தவின் சாணக்கியத்தாலும் போர்க்களத் திறமையாலுமே புலிகள் அழிக்கப்பட்டார்கள் என மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் ஓர் அபிப்பிராயத்தை மிகச் சாதூரியமாக நாட்டில் கட்டி எழுப்பி இருக்கிறார்கள்.
ஆனால், சரத் பொன்சேகா மற்றம் கோட்டாபய ராஜபக்ஷ என்ற போர்க்களக் காரணிகள் இல்லாதிருந்தால் அதேபோல் தம்மைத் தவிர்ந்த எல்லோரையும் பகைத்துக் கொள்ளும் புலிகளின் தூர நோக்கற்ற கொள்கை இல்லாதிருந்தால் இப்போது புலிகள் உலக அங்கிகாரம் இல்லாத நிலையிலாயினும் வடக்கு மற்றும் கிழக்கில் தமது ஆட்சியை நிறுவியிருப்பார்கள்.
எனினும், பண்டைய கால மன்னர்களைப் போல் தாம் போர்க்களத்தில் போராடியது போலும் தாமே போர்க்கள உத்திகளை வகுத்தது போலவும் போர் வெற்றியின் முழுப் பெருமையையும் கைப்பற்றிக் கொண்டு இருக்கும் மஹிந்த, இப்போது அதை பாவித்து அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்செயல்களைக் காட்டி, சிங்கள மக்கள் மனதில் பீதியை உருவாக்க முயற்சிக்கிறார்.
வித்தியாவின் படுகொலை என்பது நாட்டில் இடம்பெற்ற முதலாவது வன்புணர்வுச் சம்பவமோ அல்லது முதலாவது கூட்டு வன்புணர்வுச் சம்பவமோ அல்ல.
அதேபோல் வித்தியா இது போன்ற நிலைக்கு உள்ளான முதலாவது மாணவியோ அல்லது வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட முதலாவது பெண்ணோ அல்ல.
அது போன்ற சமபவங்கள் வடக்கில் போலவே தெற்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் தெற்கே ஒரு தமிழ் மாணவி, இறப்பர் தோட்டம் ஒன்றினூடாக பாடசாலைக்குச் செல்லும் வழியில் இதேபோல் கொல்லப்பட்டு இருந்தார்.
மஹிந்தவின் கட்சியைச் சேர்ந்த பிரதேச சபைத் தலைவர் ஒருவர், பலர் பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் பிரிட்டிஷ் பிரஜை ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது ரஷ்யக் காதலியை தமது சகாக்களுடன் கூட்டாக வன்புணர்ந்தமையும் நாடே அறிந்த விடயம்.
இப்போது வடக்கில் சட்டம் சீரழிந்தவிட்டது என கூச்சலிடும் மஹிந்தவின் காலத்தில் பொலிஸார் ஒரு வருட காலமாகவே அந்த பிரதேச சபைத் தலைவரை கைது செய்யவில்லை.
இறுதியில் பிரட்டன்; இளவரசர் சார்ள்ஸ் தலையிடும் அளவுக்கு நிலைமை மோசமாகவேதான் அப் பிரதேசபைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
வடக்கில் இருந்தும் அடிக்கடி இது போன்ற சம்பவங்களை பற்றிய செய்திகள் வருகின்றன.
வித்தியாவின் படுகொலையை அடுத்து கிளிநொச்சியிலும் இதே போன்று கூட்டு வன்புணர்வுக்குட்;படுத்தப்பட்டு சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ் பத்திரிகையொன்றில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
ஆனால், ஏனோ அந்த சம்பவம் ஊடகங்களினாலோ அரசியல்வாதிகளினாலோ பெரிதுபடுத்தப்படவில்லை. மக்கள் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் இல்லை.
வடக்கில் இடம்பெறும் இதுபோன்ற சம்பவங்கள் சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை. தெற்கே நடைபெறும் சம்பவங்கள் தமிழ் ஊடகங்களில் வெளிவருவதில்லை.
ஆனால், வித்தியா பற்றிய செய்தி பல சிங்கள பத்திரிகைகைளில் ஆரம்பத்தில் உள்பக்கங்களிலேனும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.
20ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து சிங்கள் பத்திரிகைகள் அதைப் பற்றி கட்டுரைகளையும் ஆசிரியர் தலையங்கங்களையும் வெளியிட்டு வித்தியாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தன.
அவ்வாறிருக்கத் தான் தமது காலத்தில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என்றும் புலிகள் மீண்டும் தலைதூக்குகிறார்கள் என்றும் மஹிந்தவின் ஆதரவாளர்கள், தென்பகுதி மக்களின் கவனத்தை திசை திருப்ப முற்பட்டுள்ளனர்.
தென் பகுதியில் வித்தியாவுக்காக உருவாகியுள்ள அனுதாபத்தை இல்லாமல் செய்ய முற்படுகிறார்கள்.
தமது நிர்வாகத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான இது போன்ற படுபாதகச் செயல்களை நிறுத்த முடிந்தது என்று புலிகள் அமைப்பினருக்கு மட்டுமே மார் தட்டிக் கொள்ள முடியும். அவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டோர்களை சுட்டுத் தள்ளினர்.
அதேபோல் இப்போது பலர் இது போன்ற குற்றங்களை தடுக்க இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
இப்போதைக்கு எவரும் அந்தக் கோரிக்கையை எதிர்க்கவில்லை. ஆனால், வித்தியா படுகொலை பற்றிய சூடு தணிந்த பின்னர் எவராவது இது போன்ற சம்பவங்களுக்காக புலிகளின் தண்டனையை அல்லது இஸ்லாமிய சட்டத்தின் கீழான தண்டனையை வழங்க வேண்டும் என்றால் அது மனித உரிமை மீறல் என்பார்கள்.
இந்நாட்டில், புலிகளைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தமது நிர்வாகத்தின் கீழ்; பெண்கள் இவ்வாறான நிலைக்கு ஆளாகவில்லை எனக் கூற முடியாது. எனவே, இப்போது மஹிந்தவின் ஆதரவாளர்கள் தவறான அபிப்பிராயத்தையே நாட்டுக்கு கொடுக்க முயற்சிக்கிறார்கள்.
இதற்காக சிறந்த உதாரணமொன்றை வழங்கலாம். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி சண்டே டைம்ஸ் பத்திரிகையில் சுயிந உழரவெ ழக அiழெசள வiஉமள ழn என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஒரே நாளில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 18 வயதுக்குட்பட்ட ஐந்து இளம் பெண்களைப் பற்றி அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது மஹிந்தவே ஜனாதிபதியாக இருந்தார்.
அவரது காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு வெலிகந்தையில் வைத்து ஒரு தமிழ் பெண் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதற்கு உதாரணமாகும்.
இச் சம்பவம் தொடர்பாக அப்போது அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரே குற்றஞ்சாட்டப்பட்டனர். அப்போதும் மஹிந்தவே ஜனாதிபதியாக இருந்தார்.
விந்தை என்னவென்றால் அவ்வாறு கொல்லப்பட்ட பிரேமணி தனுஸ்கொடி என்ற அப்பெண்ணின் பெயர் பின்னர் மஹிந்தவின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தடை செய்யப்பட்ட நபர்களின் பட்டியலொன்றிலும் இடம்பெற்றிருந்தது.
நாடு முழுவதிலும் இடம்பெறும் இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் ஊடகங்களில் வருவதில்லை. வந்தாலும் அவற்றால் ஆர்ப்பாட்டங்கள் போன்ற கொந்தளிப்பு நிலை உருவாகுவதில்லை. ஒரு சில சம்பவங்கள் தான் சர்வதேச கவனத்தை ஈர்க்கின்றன.
தெற்கே இடம்பெற்ற சம்பவங்களில் சர்வதேச கவனத்தை ஈர்த்த ஒரே சம்பவம் 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது இடம்பெற்ற கதிர்காம அழகி பிரேமவதி மனம்பேரி படுகொலை சம்பவம் மட்டுமே.
ஒரு பெண் நாட்டை ஆளும் போதே அச்சம்பவம் இடம்பெற்றது. அப்போது சிறிமாவோ பண்டாரநாயக்கவே பிரதமராக இருந்தார். அச் சம்பவம் அவ்வாறு சர்வதேச கவனத்தை ஈர்த்த போதிலும் 1971 கிளரச்சியின் போது இராணுவத்தினரால் மிக மோசமான முறையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரே பெண் மனம்பேரி அல்ல.
சர்வதேச ரீதியாக மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு சம்பவம் தான் 1996 ஆண்டு யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை.
கிருஷாந்தியும் ஒரு மாணவி, அவர் சுண்டுக்குளி மகா வித்தியாலயத்தின் கல்வி கற்கும் போதே இதேபோல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு செம்மணி இராணுவ சோதனை சாவடி அருகே சேற்றில் புதைக்கப்பட்டு இருந்தார். அப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியில் இருந்தது.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தெற்கே ஒரு பிரதேச சபைத் தலைவர் நூறு பெண்களை கெடுத்து நூறாவது பெண்ணை கெடுப்பதை முன்னிட்டு விழா நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அப்போதும் மஹிந்தவே ஜனாதிபதியாக இருந்தார். அவ்வறான நிலையும் நாட்டில் இருந்தமையினால் தமது ஆட்சிக் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறவில்லை என எந்தவொரு ஆட்சியாளரும் கூற முடியாது.
வித்தியா பற்றிய செய்தி தெற்கின் மனசாட்சியையும் கலக்கியிருக்கிறது. ஆனால், கிருஷாந்தி குமாரசுவாமியின் விவகாரத்தில் போல் இதிலும் கொலையாளிகள் இராணுவத்தினராக இருந்திருந்தால் தெற்கே மௌன ஆர்ப்பாட்டங்கள் போன்றவை இடம்பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.
யாழ்ப்பாண நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டும் சிலர் கடந்த ஆட்சிக் காலத்தில் இது போன்று சட்டத்தை கையிலெடுக்க எவருக்கும் இடமளிக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர்.
ஆனால், அவர்கள் மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தை மறந்துவிட்டார்கள் போலும் அல்லது மக்கள் அதனை மறந்துவிட்டார்கள் என நினைக்கிறார்கள் போலும்.
புலிகளின் மாவீரர் தினத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும். எனவேதான் வடக்கில் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்காமல் இருக்க வேண்டுமானால் தமக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குமாறு கோருகிறார்கள் போலும்.
தெற்கே மட்டுமல்லாது வடக்கிலும் வித்தியாவின் படுகொலை சம்பவத்தோடு அரசியல் புகுந்து விளையாடுவதாக தெரிகிறது. தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதை விரும்பாதவர்களே வித்தியா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல தாம் உதவியதாக கதை பரப்புகிறார்கள என கொழும்பு பல்கலைகழக சட்டத்துறை பேராசிரியர் வி. ரி.தமிழ்மாறன் கூறியிருந்தமை அந்த அரசியல் தலையீட்டையே காட்டுகிறது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் யோசனைகளை முன்வைப்பது ஒரு புறமிருக்க அரசியலுக்காக அவற்றை பாவிப்பது கீழ்த்தரமானது என்பதை எவரும் புதிதாக கூறத் தேவையில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025