2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இனவாதமும் அனுதாபமும்

Thipaan   / 2015 ஜூன் 03 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது துதிபாடிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் முக்கியமான செய்தியொன்றை சொல்லியிருக்கின்றார்.

 'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், பிரதமர் வேட்பாளராக எந்தவொரு தருணத்திலும் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படமாட்டார். ஆகவே, அது பற்றிய எதிர்பார்ப்புக்களை விடுத்து, அடுத்த கட்டம் தொடர்பில் சிந்தியுங்கள்.' என்றவாறாக அந்தச் செய்தி அமைந்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக  மைத்திரிபால சிறிசேன விடுத்த கடுந்தொனியிலான உத்தரவு இதுதான். இதற்கு முன்னரும்; கட்சியினரிடம் அவர் உத்தரவுகளை பிறப்பித்துள்ள போதிலும், அதில் நிறையவே நெகிழ்வுத்தன்மை இருந்தது.

அது, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை எதிர்பார்த்து உழைத்து தோல்வி கண்டவர்களின் மனதை ஆற்றுப்படுத்துவதற்கான நெகிழ்வு நிலையாகவும், கால அவகாசமாகவும் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால், அதை மைத்திரிபால சிறிசேனவின் ஆளுமைக் குறைபாடு அல்லது பலவீனம் என்று கருதி காய்களை நகர்த்த முற்பட்டவர்களுக்கு, அவர் தகுந்த தருணங்களில் 'கடுக்காய்' கொடுத்து வந்திருக்கின்றார்.  

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான கடந்த ஐந்து மாதத்தில் மைத்திரிபால சிறிசேனவின்  அரசியல் என்பது 'ஆரவாரமற்ற ஆட்சியாளன்' என்கிற கருது நிலையை ஏற்படுத்துமளவுக்கு அமைதியானதாக இருந்திருக்கின்றது.

ஆட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில், அவருள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் குறிப்பிட்டளவான தாக்கத்தைச் செலுத்துகின்றனர். அதை, மைத்திரிபால சிறிசேனவினால் இப்போதைக்கு தவிர்க்கவும் முடியாது.

அது, நன்றி விசுவாசத்தின் போக்கிலும் அணுகப்பட வேண்டியது. இந்த நிலையை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  பங்காளிகளோ அதிகளவு ரசிக்கவில்லை. ஏனெனில், தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு பெரும்பாலும் எதிர்த்தரப்பில் உட்கார வைக்கும் வகையான நடவடிக்கை இது.

'மைத்திரிபாலவுக்கு என்ன வேண்டும்? தன்னை ஜனாதிபதியாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான (சுதந்திரக் கட்சியும் அங்கம் வகிக்கும்) அரசாங்கமொன்று வேண்டுமெனில், சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை கைவிடு. ரணிலை பிரதமராக்க வேண்டுமெனில், சுதந்திரக் கட்சியில் நீ ஏன்............ புரிகின்றாய்? (இடைவெளியில் 'சுயமைதுணம்' எனும் அர்த்தம் வரும் சிங்கள தூசண வார்த்தை)' -இப்படியான கருத்தொன்றை முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பொது மேடையில் கடந்த நாட்களில் வெளியிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்துக்குள்ளேயே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சாதியை தரக்குறைவாக விழிக்கும் வார்த்தையை வெளியிட்டு திட்டித்தீர்த்த வாசுதேவ நாணயக்காரவின் அடுத்த கட்ட நடவடிக்கை இது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் கூட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வாசுதேவ நாணயக்காரவே விடுத்திருந்தார்.

ஆனால், அந்தக் கோரிக்கையை கடும் தொனியில் நிராகரித்த மைத்திரிபால சிறிசேன, 'நான், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்த காலத்திலேயே, அவரது அனைத்து மோசடி வேலைகள் குறித்தும் தெரிந்து கொண்டுள்ளேன்.

ஜனாதிபதித் தேர்தலில் நான் வென்றுவிடுவேன் என்ற அச்சத்தில், என்னை தனது துப்பாக்கிக்கு இரையாக்க நினைத்து, இருதடவைகள் என்னை சுட நினைத்தார் மஹிந்த ராஜபக்ஷ. அப்படிப்பட்டவரை எப்படி பிரதமர் வேட்பாளராக்குவேன்?' என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதுவும் தான், மைத்திரிபால சிறிசேனவை வாசுதேவ நாணயக்கார இவ்வளவு தரக்குறைவாக திட்டித் தீர்க்க காரணமாக அமைந்திருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியதிகாரத்தில் உட்கார வைக்கவேண்டும் என்கிற காவடியைத் தூக்கியிருக்கும் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் தமது நடவடிக்கைகளில் ஒப்பீட்டளவில் தோல்விகளைச் சந்தித்து வருகின்றார்கள். 'வடக்கில் மீண்டும் புலிகள் எழுச்சி பெறுகின்றார்கள், மே 18இல் புலிக்கொடி பறக்கின்றது,
மைத்திரியோடு வெளிநாட்டுப் புலிகள் தொடர்பிலிருக்கின்றார்கள், சிங்கள மக்களை காட்டிக்கொடுக்கும் காரியத்தில் அரசாங்கம் ஈடுபடுகின்றது, தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலேற்பட்டுள்ளது' என்கிற மாதிரியான கருத்துக்களையே மஹிந்த ராஜபக்ஷவும், அவரது துதிபாடிகளும் கடந்த நாட்களில் அதிகமாக உச்சரித்து வருகின்றார்கள். இந்தக் கருத்துக்கள், சிங்கள ஊடகங்களில் குறிப்பிட்டளவு இடம்பிடித்தாலும், மக்களை பெரும் அணியாக திரட்டுமளவுக்கானதாக இல்லை. 'மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவோம்' என்கிற கோசத்தோடு  ஆரம்பித்த கூட்டங்களுக்கான மக்கள் ஆதரவு குறிப்பிட்டளவு குறைந்திருக்கின்றது.

இது, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்களிடம் இருந்த ஆதரவோடு ஒப்பிடுகையில் பெரும் வீழ்ச்சி.

இன்னொரு பக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி மீதான சிங்கள மக்களின் அபிமானம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. எவ்வளவு காழ்ப்புணர்வு கருத்துக்களோ, விமர்சனங்களோ வெளியிடப்பட்டு வந்தாலும், அவை மைத்திரிபால சிறிசேனவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற வகையிலானதாக இல்லை. அந்த விமர்சனங்களில், அதிகம் ரணில் விக்கிரமசிங்கவே குறிவைக்கப்படுகின்றார். இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கான அச்சுறுத்தல் என்பது எங்கிருந்தும் இப்போதைக்கு இல்லை.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆட்சியதிகாரம் குறித்த மீள் ஆசையை ஊட்டியவர்களினால், அலரி மாளிகையிலிருந்து கொண்டு அசராமல் அடிக்கும் ஆப்புக்களை எதிர்கொள்ளும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை.

ஏனெனில், கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பில் ஒட்டுமொத்தமாக ஊடகங்களில் வெளியிட்டு அதன் சூட்டினைத் தணிக்க முயலாமல், ஒவ்வொரு விடயமாக தூக்கி வைத்து அலசி ஆராய்ந்து மக்களிடம் வெளியிடுகின்றார்கள். இப்போது வரையில் 3,000 முறைப்பாடுகள் கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டிருக்கின்றது.

ஆனால், அவற்றினை அவசரப்படாமல் விசாரணைக்கு எடுப்பதிலுள்ள சூட்சுமம் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டது. அது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மத்திரமல்ல.  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பல முக்கியஸ்தர்களுக்குமான அடி.

கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்த விபரங்கள் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளியாகி வருகின்றது. அதில், மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது குடும்பம் மற்றும் உறவினர்களையும் இலக்கு வைக்கும் விபரங்கள் தவறுவதில்லை.

இது, மக்களை மெல்ல மெல்ல தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதற்கான சூத்திரமாக கையாளப்படுகின்றது. இன்னொரு பக்கம் சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் குழப்ப நிலையையும் ரணில் விக்கிரமசிங்க தக்க வைக்க முயல்கின்றார்.

அது, மைத்திரிபால சிறிசேனவுக்கும், சந்திரிகா குமாரதுங்கவுக்கும் கூட தெரியும். மஹிந்த அபிமானிகளை கட்சிக்குள் இருந்து கழட்டிவிடுவதற்கான  வாய்ப்பாக அதை, அவர்கள் கருதுகின்றார்கள்.

இன்னொரு புறம், மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அணியும் எல்லா இடங்களிலும் பலமான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்திலும், அப்படியொரு காட்சி பேஸ்புக்கில் அரங்கேறியது. நிதி மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டார்.

அந்த விடயத்தை, குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான நாமல் ராஜபக்ஷ, பேஸ்புக்கில் இறைஞ்சும் விதமான கருத்தொன்றை எழுதியிருந்தார். அதாவது, 'நானும், அப்பாவும் மட்டுமே அரசியல்வாதிகள். அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ள வேண்டுமெனில் எம்மை இலக்கு வையுங்கள். அம்மாவையும், சகோதரர்களையும் விட்டுவிடுங்கள். அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல.' என்ற தொனியில் அமைந்திருந்தது அது.

இதற்கு, நாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்திலேயே, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் மகன் சவீன் காரியவசம் பண்டாரநாயக்க பதிலளித்திருந்தார்.

அதில், 'கடந்த இரண்டரை வருடங்களாக (கடந்த அரசாங்கத்தினால்) எனது தாய் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது நான் எவ்வாறான உணர்வை கொண்டிருந்தேன் என்பதை நாமல் ராஜபக்ஷ தெரிந்து கொண்டாரா? எமது தாயும், தந்தையும், மாமாவும் கூட அரசியல்வாதிகள் இல்லை. எனினும், உங்களுடைய ஆட்சியில் அவர்களை மானக்கேடாக நடத்திய போது நான் எந்தளவு கஷ்டப்பட்டிருப்பேன்.

ஊடகங்களில் அரசாங்கம் முற்றிலும் பொய்யான செய்திகளை வெளியிடும் போது நான் எவ்வளவு தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பேன். மற்றவர்களின் அனுதாபத்தை அல்லது ஆதரவை எதிர்பார்க்கும் முன்னர் நீங்கள் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் மறுபக்கத்தையும் கேளுங்கள்.' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் கடந்த நாட்களில் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது. சிங்கள மக்களிடம் அனுதாபத்தை எதிர்பார்த்தும், இனவாதத்தைப் பேசியும் மீண்டும் ஆட்சியதிகாரத்தில் ஏறி உட்காரலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ தரப்பு போலியாக நம்பிக்கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசியலில் இனவாதம் அதிக வெற்றிகளை குவித்து வந்திருக்கின்றது. ஆனால், அது, எல்லாத் தருணங்களிலும் வெற்றிகளைத் தருமென்றும் எதிர்பார்க்க முடியாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பட்ட அடியிலிருந்து கூட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் அதைக் கற்றுக்கொள்ளவில்லை.

அப்படியான நிலையில், அவர்கள் பொதுத் தேர்தலில் தனித்துக் களம் கண்டால் படப்போகும் அடி, பாரதூரமானதாக இருக்கலாம். அப்போது, மஹிந்த ராஜபக்ஷ இலங்கை அரசியல் வரலாற்றிலிருந்து அனைத்து அடையாளங்களும் பிடுங்கப்பட்டு அகற்றப்படும் சூழல் ஏற்படலாம்!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .