Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 04 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிடுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்பதை கடந்த திங்கட்கிழமை பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்திருந்த பேட்டியில், அவரது ஊடக இணைப்பாளர் ரொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ எப்போது தங்காலையிலுள்ள தனது வீட்டில் இருந்தவாறு மக்களைச் சந்திக்கத் தொடங்கினாரோ, அப்போதே அடுத்த கட்ட அரசியல் ஆசையை நிறைவேற்றுவதற்கான பயணத்தை தொடங்கியிருந்தார்.
விகாரைகள் தோறும் அவர் வழிபாடு என்ற பெயரில் மக்களை சந்திக்கத் தொடங்கியதும் அத்தகைய ஒவ்வொரு சந்திப்பிலும் அரசாங்கத்தை விமர்சித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கியபோதே, அவரது எதிர்காலத் திட்டம் ஓரளவுக்கு வெளிச்சமாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தோற்கடித்துள்ளனர், இனி நாமாகவே ஒதுங்குவோம்; என்றில்லாமல் அவர், தனக்கு ஆதரவான அணியொன்றை வைத்து அரசாங்கத்தை மிரட்டியும் அதனுடன் பேரம் பேச வைத்தும் அவ்வப்போது ஆதரவுக்கூட்டங்களை நடத்தியும் தனது பலத்தை வெளிப்படுத்த முயன்றபோது, மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அதிகார ஆசை விட்டுப்போகவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
தனக்கு பிரதமர் பதவியைக் கேட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்த அவர் எப்போது தயாரானாரோ, அப்போதே அவர் பிரதமர் பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார் என்பதை உறுதிப்படுத்தமுடிந்தது.
இப்போது அவரது பேச்சாளரிடமிருந்து வெளிப்பட்டுள்ள அறிவிப்பு, ஆச்சரியமானவொன்றே அல்ல. ஏனென்றால், இது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவொன்று.
இனிமேல் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து வெளிவரப்போகும் அறிவிப்பையும் கூட, நாம் ஆச்சரியத்துடன் பார்க்கவேண்டியிருக்காது. அவர் தாம் ஆட்சியில் இல்லாத காலத்தில் நாட்டில் நிலைமைகள் மோசமடைந்துள்ளதை சுட்டிக்காட்டுவார். வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டதையும் நீதிமன்றம் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுவார். இடைநிறுத்தப்பட்ட சீன அபிவிருத்தித்திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் முடங்கிப்போயுள்ளதாக கூறுவார்.
உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிக்கப்பட்டதால், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக புலம்புவார். இப்படி தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளெல்லாம் குறை கூறி, இவற்றினால் நாடு பேராபத்தில் சிக்கியிருப்பதாக கூறப் போகிறார்.
கடைசியாக, இந்த ஆபத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்க மீண்டும் அரசியலுக்கு வாருங்கள் என்று மக்களும் மகாசங்கத்தினரும் தன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதன் பேரிலே, பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக கூறுவார்.
அதாவது தான் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடாதுபோனால் நாடே அழிந்துவிடும் என்பதுபோல, அவரது எதிர்கால அறிக்கை ஒன்றையோ பேட்டி ஒன்றையோ நாம் விரைவாக எதிர்பார்க்கலாம். இதுவே, அவரது இரண்டாவது அரசியல் பிரவேசத்துக்காக நடத்தப்படும் நாடகத்தின் நிறைவுக் காட்சியாக இருக்கும்.
பொதுவாக நாடகங்களில் இத்தகைய இறுதிக்காட்சிகள் எப்போதுமே, பரபரப்பானதாகவும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்கும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களமிறங்குவதற்கு ஆரம்பித்த நாடகத்தின் இறுதிக்காட்சி அத்தகைய திருப்பங்களை நிறைந்த ஒன்றாகவோ, பரபரப்பானதாகவோ இருக்காது. ஏனென்றால், அது கடைசியில் முன்னைய மகாராஜாவின் வருகையுடன் நிறைவுபெறப் போகிறது.
இந்த நாடகத்தின் இரண்டாம் பாகமே சுவையானதாகவும் பரபரப்பு மற்றும் கேள்விகள் நிறைந்ததாகவும் இருக்கப்போகிறது. ஏனென்றால் அதுவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியைப் பெற்றுக்கொடுக்குமா, இல்லையா என்ற உச்சக்கட்ட காட்சியாக- முன் எதிர்வுகூற முடியாத ஒன்றாக இருக்கும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி என்பது முன் எதிர்வுகூறத்தக்க ஒன்றாக இருந்திருக்கவில்லை என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். ஏனென்றால், அந்தப் போட்டி அந்தளவுக்கு சிக்கலானதாக, கடுமையானதாக, கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே இருந்தது. ஆனால், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவிக்காக, அதனை அடைவதற்காக வகுக்கவுள்ள அரசியல் தந்திரோபாயத் திட்டங்களே, அவருக்கு ஆறுதல் பரிசாக பிரதமர் பதவியையாவது பெற்றுக்கொடுக்குமா என்பதை தீர்மானிக்கும்.
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் அவருக்கு அதிகாரத்திலிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
மிக உயர்ந்த அதிகாரத்தில் அவர் இருந்திருந்தாலும், இனிமேல் அந்தப் பதவியை அவரால் பிடிக்கமுடியாது. அதற்கான சட்டங்கள் எற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன. எனவே, இனிமேல் பிரதமர் பதவியையாவது பிடிப்போம் என்பதே அவரது இலக்காக இருக்கிறது.
உயர் பதவியிலிருந்து விட்டு, அதற்குக் குறைவான பதவியில் அமர்வதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதையெல்லாம் பார்த்தால், அதிகாரம் கையை விட்டுப் போய்விடும், தாம் செல்லாக்காசாகி விடுவோம் என்பது அவருக்குத் தெரியும். மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காக அவர் எதையும் செய்யத் தயாராகவிருக்கிறார், எந்த கௌரவத்தை விட்டுக்கொடுக்கவும் தயாராகவிருக்கிறார்.
பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக எழுந்துநிற்க தயாராகவிருக்கிறாரா என்று அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கேள்வியெழுப்பியிருந்தார்.
மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில் அத்தகைய கௌரவப் பிரச்சினைகள் ஏதும் இல்லாததாலேயே, அவரால் முன்னைய நிலையிலிருந்து கீழிறங்கி பிரதமர் பதவிக்கு குறி வைக்க முடிந்திருக்கிறது.
2004இல் தன்னைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் எவ்வாறு பேரம் பேசினாரோ, அதுபோலவே இப்போது தன்னைப் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தவேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றிருக்கிறார் அவர்.
சந்திரிகாவிடம் அவர் மிரட்டும் தொனியில் பேரம் பேசினார். அப்போது சந்திரிகாவும் வேறுவழியின்றி ஒத்துக்கொள்ள நேரிட்டது. ஆனால், இப்போது அவரால் அவ்வாறு மைத்திரிபால சிறிசேனவிடம் பேரம் பேச முடியவில்லை. இதனையொரு வகையில் கெஞ்சுதல் என்றே கூறவேண்டும்.
மக்களால் தோற்கடிக்கப்பட்ட அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தமுடியாது என்று முகத்தில் அடித்தால் போல மைத்திரிபால சிறிசேனவால் இப்போது கூறமுடிந்திருக்கிறது. இத்தகைய கட்டத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு தனது பிரதமர் கனவை நிறைவேற்றப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் பிரதமர் கனவை நிறைவேற்றுவதே, இருக்கும் வழிகளிலேயே இலகுவானதும் சாத்தியமானதுமாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினி பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ நிறுத்தப்பட்டால், ஐ.தே.க. வுக்கு அது ஒரு மிகப்பெரிய சவாலாக மீண்டும் எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளிவிடக்கூடிய ஆபத்தை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ள பெரும்பான்மையின மக்களின் ஆதரவும் சுதந்திரக் கட்சியின் பரம்பரை வாக்கு வங்கியும் கூட்டணிக் கட்சிகளின் பலமும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.
எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் விழுந்தாவது சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகி விடவேண்டும் என்று பார்க்கிறார். ஆனால், ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவோ, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தமுடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இந்தக்கட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த கட்ட அரசியல் திட்டம் எவ்வாறு முன்னகர்த்தப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்காதுபோனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடையப்போவது மட்டும் உறுதி. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் கனவைக் கைவிடவும் தயாரில்லை. அதுபோல அவரை எப்படியாவது பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனிப்பவர்களும் அந்த முயற்சியைக் கைவிடத் தயாராக இல்லை.
மஹிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ஷவை முதலீடாக வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கும் இது முக்கியமான கட்டம்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட இடமளிக்காதுபோனால், இவர்கள் தனியாகப் போட்டியிடப் போவது உறுதி.
அதைவிட, இன்னொரு சாத்தியப்பாடும் உள்ளது. அது என்னவென்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரான சுசில் பிரேம ஜயந்தவோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருக்கும் அநுர பிரியதர்சன யாப்பாவோ மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் சாய்ந்துவிடாமலும் இருக்கவேண்டும்.
இறுதிக்கட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளித்து, சுசில் பிரேமஜயந்த கையெழுத்திட்டுவிட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதுவும் செய்துவிட முடியாது.
ஏனென்றால், தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்படும் வேட்பாளர் பட்டியலில் கட்சியின் செயலாளர் தான் ஒப்பமிட வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷவை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் சுசில் பிரேம ஜயந்த கையெழுத்திடுவார் என்று அண்மையில் வாசுதேவ நாணயக்கார கூறியிருந்தார். அவ்வாறானதொரு தருணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடக்கூடும். அதற்கு அநுர பிரியதர்சன யாப்பாவின் கையெழுத்து தேவைப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்ததும் உடனடியாக அவரை நீக்கிவிட்டு, அநுர பிரியதர்சன யாப்பாவை அந்தப் பதவிக்கு நியமித்திருந்தார் மஹிந்த ராஜபக்ஷ. தனக்கு விசுவாசமானவர் என்பதாலேயே, அவருக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரே என்பதை தெரிந்திருந்தும் அநுர பிரியதர்சன யாப்பாவை கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தூக்காமல் விட்டுவைத்திருக்கிறார்.
இந்த நிலையில் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா- மஹிந்த ராஜபக்ஷவின் நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இந்தக் கட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் சென்றாலும் கூட, மைத்திரிபால சிறிசேனவின் விசுவாசிகள் தனித்துப் போட்டியிடப் போவது உறுதி. அவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடைந்து விடும்.
அதைவிட, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்கப்படாமல், அவராகவே வேறு ஒரு கட்சியில் போட்டியிட முடிவு செய்தாலும், சுதந்திரக் கட்சியில் உள்ள கணிசமானவர்கள் அவருக்குப் பின்னால் செல்லத் தயாராக இருக்கிறார்கள். எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அப்போதும் பிளவு ஏற்படுவது உறுதி. எனவே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உடைவுக்கே வழி வகுக்கப்போகிறது.
இது மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தெரியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியும். சந்திரிகா குமாரதுங்கவுக்கும் தெரியும். ஆனாலும், இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிந்திக்கின்றனர். சுயநலன், கட்சிநலன், நாட்டு நலன் என்று இவர்களின் பார்வை மாறுபாடாக உள்ளது. இதில் எந்த நலன் வெல்லப் போகிறது என்பது மஹிந்த ராஜபக்ஷவின் மறு அரசியல் பிரவேசத்தின் இறுதி விளைவிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025