Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 07 , பி.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்ததாக கடந்த ஜூன் 30ஆம் திகதி ஒரு செய்தி வெளியாகியது. இரண்டு நாட்களில் அதாவது ஜூலை 2 ஆம் திகதி, ஜனாதிபதி அதனை மறுத்தார்.
மீண்டும் ஜூலை 3ஆம் திகதி, மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்ததாக செய்தி வெளியாகியது. ஐ.ம.சு.கூ.வின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, தமக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என மாதுளுவாவே சோபித்த தேரரிடம் அன்றைய தினமே கூறியதாக சில இணையத்தளங்கள் கூறின.
4ஆம் திகதி அதாவது சனிக்கிழமை தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, 49 வருட கால அரசியல் அனுபவம் உள்ள தான், ஜனவரி 8ஆம் திகதியன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அடைந்த வெற்றியை பின் நோக்கித் திருப்பும் வகையிலான எந்தவொரு முடிவையும் எடுக்கப் போவதில்லை என்றார்.
இப்படிப் பார்த்தால், நாட்டில் என்ன நடைபெறுகிறது என்று சாதாரண மக்கள் திகைத்து நிற்கும் நிலைமையொன்று உருவாகியிருக்கிறது என்றே கூற வேண்டும்.
ஒன்று மட்டும் மிகத் தெளிவாக தெரியவருகிறது. அது தான் மஹிந்தவின் விடயத்தில், ஜனாதிபதி பெரும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறார். அதேவேளை, அவருக்கு தாம் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை உருவாகியிருப்பதாகவும் தெளிவாக தெரிகிறது.
எனவே, மஹிந்தவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறும் ஸ்ரீ.ல.சு.க.வின் பெரும்பான்மை குழுவுக்கும் அவ்வாறு வாய்ப்பளிக்கக் கூடாது என்று கூறும் அக் கட்சியின் சிறுபான்மைக் குழு உட்பட தமக்கு வாக்களித்த மக்களுக்கும் இடையில் ஜனாதிபதி சிக்கிக் கொண்டு இருக்கிறார் என்பது தெளிவு.
இது ஒரு புறம் ஜனாதிபதியின் ஆளுமையைப் பற்றிய பல சந்தேகங்களை எழுப்புகின்ற அதேவேளை, நல்லாட்சி என்ற பெயரில் அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் தோல்வியடைந்துவிட்டனவா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஏனெனில், மஹிந்த போன்ற ஒருவர் ஜனாதிபதியாக இருந்தால், இன்று ஜனாதிபதிக்கு சவால்விடும் பலர் ஒடுங்கி பதுங்கித் தான் இருப்பார்கள்.
மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் ஜனாதிபதித் தேர்தலின் போது அவருக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீ.ல.சு.க. தலைவர்கள் பயந்து போனார்கள். எனவே, அவர்கள், ஜனாதிபதித் தேர்தலின் போது தமது கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற மைத்திரிபாலவை தமது கட்சியின் தலைவராக உடனடியாக நியமித்தனர்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவுடன், சந்திரிகாவை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்காக ஸ்ரீ.ல.சு.க. யாப்பில் மஹிந்த ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். அதன்படி, ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அவர் கட்சித் தலைவராக வேண்டும். அதன்படி சந்திரிகாவிடம் இருந்த கட்சித் தலைமை மஹிந்தவிடம் சென்றது.
இதனை பாவித்தே மைத்திரிபால ஜனாதிபதியானவுடன் அவரும் அக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், தேர்தலில் மைத்திரியை தோற்கடிக்க முயற்சித்த ஸ்ரீ.ல.சு.க. தலைவர்கள் நினைத்திருந்தால், கட்சி யாப்பை மீண்டும் மாற்றி மைத்திரிக்கு கட்சித் தலைமையை வழங்காதிருந்திருக்கலாம். எனினும், நிறைவேற்று ஜனாதிபதியின் மீதிருந்த பயத்தின் காரணமாக அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இப்போது இந்த பயம் படிப்படியாக குறைந்து விட்டது.
ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதிகளில், மஹிந்தவின் ஆட்சியில் செயற்பட்ட ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது முக்கிய வாக்குறுதியாகியது. ஆனால், அது முறையாக நடைபெறவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் காலத்தில் கூறிய புதிய அரசாங்கத்தின் தலைவர்களின் கீழ், ஓரிரு சிறிய குற்றங்களுக்காகவே சிலர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் விடயத்தில் கைது செய்யப்பட்ட வெலே சுதா போன்றவர்களால் பெயர் குறிப்பிடப்பட்ட அரசியல்வாதிகளும் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் நாட்டை விட்டே ஓடிய சிலருக்கு எதிராகவும் சிறு குற்றச்சாட்டுகளின் பேரிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் விடயத்தில் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்ட சிலரும் ஊழலை ஒழிக்க வந்த அரசாங்கத்தில் பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். எனவே, இது பயப்பட வேண்டிய அரசாங்கம் அல்ல என்றதோர் மனப்பாங்கு முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்களின் மனதில் வளர ஆரம்பித்தது.
அத்தோடு, தேர்தலில் தனித்து போட்டியிட்டால், ஓர் ஆசனத்தையேனும் பெற முடியாத விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய ஆகிய நான்கு சிறு கட்சிகளும் தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக மஹிந்தவை பிரதமராக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பத் தொடங்கின.
இதற்காக அவர்கள் நுகேகொடையில் நடத்திய முதலாவது கூட்டத்தில், ஒரு சில ஸ்ரீ.ல.சு.க. அரசியல்வாதிகளே கலந்து கொண்டனர்.
அது ஸ்ரீ.ல.சு.க.வின் உட்கட்சி ஒழுக்கத்தை மீறும் செயல் என ஜனாதிபதி கூறிய போதிலும் அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அச் சிறு கட்சிகளின் இரண்டாவது கூட்டத்துக்கு முன்னரை விட கூடுதலாக ஸ்ரீ.ல.சு.க. அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு தொடர்ந்து நடைபெற்ற போது, அதுவும் ஜனாதிபதியின் மீது ஸ்ரீ.ல.சு.க தலைவர்களுக்கு இருந்த பயத்தை போக்கிவிட்டது. அவர்கள் கட்சிக்குள்ளேயே மஹிந்தவுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த அதுவே முக்கிய காரணமாகியது. மஹிந்த போன்ற ஒருவர் பதவியில் இருந்தால் அவர்கள்; இவ்வாறு வாலாட்டப் போவதில்லை.
ஊழல்களுக்கு எதிராக விரைவாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுத்திருந்தால் அதேவேளை, கட்சி ஒழுக்கத்தை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற இக்கட்டான நிலைமையை ஜனாதிபதி எதிர்நோக்கத் தேவையில்லை. பொதுவாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான புதிய அரசாங்கம் நல்லாட்சி என்ற பெயரில் நடத்திய சோம்பல் நிறைந்த நிர்வாகத்தின் காரணமாகவே மஹிந்த சார்பாக, ஜனாதிபதி மீது இவ்வளவு நெருக்குதல் தொடுக்கப்படுகிறது.
மஹிந்தவுக்கு ஸ்ரீ.ல.சு.க.வின் கீழ் போட்டியிட இடமளிப்பதாக கடந்த 30ஆம் திகதி முதன்முறையாக செய்தி வெளிவந்த போது ஜனாதிபதி செயலகத்தினால் ஓர் அறிக்கை விடப்பட்டு இருந்தது. மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக ஜனாதிபதி அங்கிகரிக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததே தவிர மஹிந்தவை சாதாரண வேட்பாளராகவாவது ஏற்றுக் கொள்ளவில்லை என அதில் குறிப்பிடப்படவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் ஜனாதிபதி சார்பில் அவ்வாறு கூறப்பட்டது.
இப்போது, மஹிந்தவுக்கு சாதாரண வேட்பாளராக போட்டியிட இடமளிப்பதாகவே ஐ.ம.சு.கூ கூறுகிறது. அதனை எதிர்க்க முடியாத நிலையில் ஜனாதிபதி இருக்கிறார்போலும். மஹிந்தவுக்கு அதுவே போதுமானதாகும். அது, ஒட்டகத்துக்கு கூடாரத்துக்குள் தலையை திணித்துக் கொள்ள இடமளித்த கதையாகிவிடுவது திண்ணம். தேர்தலில் மஹிந்தவும் வென்றால் ஐ.ம.சு.கூவும் வெற்றி பெற்றால், ஜனாதிபதி அவரை விடுத்து மற்றொருவரை பிரதமராக நியமிக்கலாமா?
இப்போதும் மஹிந்தவுக்கு போட்டியிட சந்தர்ப்பம் அளிப்பதாக இருந்தால் அது உட்கட்சி நெருக்குதல் காரணமாகவே எடுக்கப்பட்ட முடிவாகும். அவ்வாறாயின், ஐ.ம.சு.கூ.வும் வெற்றி பெற்று மஹிந்தவும் வெற்றி பெற்றால், அதுவரை ஜனாதிபதியும் ஐ.ம.சு.கூ. தலைவராக இருந்தால் மஹிந்தவுக்கான உட்கட்சி நெருக்குதல் இப்போதைய நெருக்குதலை விட பன்மடங்கு அதிகரிக்கும். ஜனாதிபதி அதனை முறியடிப்பாரா?
மஹிந்த பிரதமராவது எந்த வகையிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அடுத்த கேள்வியாகும். அது நாட்டை எவ்வகையில் பாதிக்கும் என்பது ஒரு கேள்வியாகும். ஜனாதிபதி மைத்திரிபாலவை எவ்வகையில் பாதிக்கும் என்பது மற்றொரு கேள்வியாகும்.
மஹிந்த பிரதமரானால் தமக்கு என்ன நேரும் என்பதை ஜனாதிபதியே அண்மையில் கூறியிருந்தார். மஹிந்த பிரதமரானால் அவருக்கு ஜனாதிபதியாவதற்கு மேலும் ஒரு ரவை வீச்சின் தூரம் தான் இருக்கும் என ஜனாதிபதி கூறியிருந்தார்.
அவ்வாறே நடக்காவிட்டாலும் மஹிந்த தலைமையிலான ஐ.ம.சு.கூ.,120 ஆசனங்களையாவது பெற்றுக் கொண்டால், அவர் முன்னர் செய்ததைப் போல் மேலும் 30 ஆசனங்களை விலைக்கு வாங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளக் கூடும். முப்பது கோடி, நாற்பது கோடி, ஐம்பது கோடி மற்றும் அமைச்சர் பதவி என்று வரும் போது எதிர்க்கட்சியில் உள்ள எந்த அரசியல்வாதி தான் வளைந்து கொடுக்காமல் இருக்கப் போகிறார்?
அது போன்றதோர் நிலைமை மீண்டும் உருவாகினால் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றும் வரக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மஹிந்த பிரதமராக இருக்கும் போது ஜனாதிபதி இறந்தால் அல்லது குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டால் மஹிந்தவே ஜனாதிபதியாவார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஒருவர் இருமுறை தான் ஜனாதிபதியாகலாம் என்று இருந்த போதிலும். அது தேர்தல் மூலம் ஜனாதிபதியாவதையே குறிக்கிறது. இது போன்ற வேறு வழிகளில் ஒருவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாவதை அது தடுக்கவில்லை. எனவே, இது போன்றதோர் முறையில் மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாகலாம்.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டமை உண்மை தான். அவற்றினால் மக்கள் பயனடைவதும் உண்மைதான். ஆனால், அரசியல்வாதிகள் பணம் சம்பாதிப்பதற்காகவே அப்பணிகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டன.
மத்தல விமான நிலையத்துக்கு செல்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட அதிவேக வீதியொன்றில் மாடுகள் நடமாடுவது அண்மையில் தொலைக்காட்சியொன்றில் காட்டப்பட்டது. தேவையின்றியும் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டமைக்கு இது சிறந்த உதாரணமாகும். அதாவது, அவை பணம் சம்பாதிப்பதற்காகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மத்தல விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஓரிரண்டு விமானங்களாவது வருகின்றனவா என்பது கேள்விக்குறியே. ஹம்பாந்தோட்டை துறைமுகம் இதுபோன்ற மற்றொரு அபிவிருத்தித் திட்டமாகும். பயனுள்ள, பயனற்ற சகல அபிவிருத்தித் திட்டங்களும் ஊழல்கள் மலிந்தவையாகவே காணப்பட்டன.
சில அதிவேக வீதிகளின் ஒரு கிலோமீற்றர்களுக்கு 700 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் கூறியிருந்தார். எவரும் அதனை மறுக்கவும் இல்லை. மஹிந்த மீண்டும் பதவிக்கு வந்தால் இது போன்ற அபிவிருத்தித் திட்டங்கள்தான் தொடரும்.
சிறுபான்மை மக்கள், மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அச்சத்துடனும் பீதியுடனுமே வாழ்ந்தனர்.
சிறுபான்மை மக்களை இம்சித்துக் கொண்டும் நிந்தித்துக் கொண்டும் இருந்த தீவிரவாத குழுக்களுக்கு மஹிந்தவின் ஆட்சியில் பெரும்மதிப்பு இருந்தமை சகலரும் அறிந்த உண்மையாகும். அவர் மீண்டும் பதவிக்கு வந்தால் அச்செயல்களும் தொடர மாட்டா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மஹிந்த, ஐ.ம.சு.கூ.வின் கீழ் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிப்பதாக இருந்தால், அது அரசியல் நாகரிகத்தை குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமமாகும். மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவே சுமார் 63 இலட்சம் மக்கள், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.
அந்த வாக்குகளால் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் முடிவடையும் முன், அதே மஹிந்த அரசியல் அதிகாரங்கள் பெறும் வகையில் ஜனாதிபதி மைத்திரி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அவருக்கு அரசியல் நாகரிகமே தெரியாது என்றே கூற வேண்டும்.
கடந்த நவம்பர், டிசெம்பர் மாதங்களில் ஸ்ரீ.ல.சு.க.வைச் சேர்ந்த பல எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் அப்போது எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்வந்திருந்த மைத்திரிபால சிறிசேனவை நம்பி உயிராபத்தையும் பொருட்படுத்தாது அவருக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.
அவர்கள் அனைவரும் இப்போது மஹிந்தவின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பது உறுதி. எனவே, இப்போது மைத்திரிபால மஹிந்தவுக்கு பிரதமராகும் வாய்ப்பை அளிப்பதானது தம்மை நம்பியவர்களை காட்டிக் கொடுத்தலாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தமது மனசாட்சிக்கு எதிராவே மஹிந்தவுக்கு இடமளித்தார் என்பது நிச்சயம். எனவே, சில எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் இடம்பெறலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
edwin Friday, 10 July 2015 11:07 AM
Well written
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025