Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 14 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ப.தெய்வீகன்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் எதிர்வரும் தேர்தலில் குதிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை களமிறக்கும் யோசனைகளை மைத்திரி தரப்பு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன.
மஹிந்தவின் அரசியல் பிரவேசத்துக்கு அனுமதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரியின் முடிவு தொடர்பாக வெளிப்படையாக அதிருப்தி வெளியிட்டிருந்த சந்திரிகா அம்மையார், தான் அரசியலுக்கு மீண்டும் வருவது தொடர்பாக கோடி காட்டிவிட்டு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் புறப்பட்டுள்ளார். அங்கிருந்து வந்து தனது அரசியல் செல்நெறி குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.
சந்திரிகா அம்மையாரின் அரசியல் இருப்பு என்பது காலாவதியாகிட்டபோதும் அது எவ்வாறு புதிய மூலப்பொருளாக மைத்திரியை ஜனாதிபதியாக கொண்டுவரும் உற்பத்தி முறையில் பயன்படுத்தப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். மஹிந்தவை ஆட்சிக்கட்டிலிருந்து கலைப்பதற்கு மைத்திரியுடன் கைகோர்த்துக்கொண்ட அம்மையார், தனது புதிய அவதாரத்தின்போது வெளியிட்ட கருத்துக்கள் எவ்வளவு சுவாரஸியமானவை என்பதை அவரது பேச்சுக்களை கேட்டவர்கள் அவதானித்திருப்பர்.
அதாவது, புலிகளுக்கு எதிரான போரை வென்றுவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் மஹிந்தவின் வெற்றி முழக்கத்தை நிராகரித்த சந்திரிகா அம்மையார், தனது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த 75 சதவீதமான நிலப்பரப்புக்கள் ஸ்ரீ லங்கா படையினரால் வெற்றிகொள்ளப்பட்டதாகவும் மீதியைத்தான் மஹிந்தவின் படைகள் வென்றதாகவும் கூறியிருந்தார்.
சந்திரிகா அம்மையார் கூறிய அவரது படைகள் மேற்கொண்ட போரின்;போது தமிழ் மக்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நிகழ்வொன்றின் 20 ஆண்டு நிறைவு தினம் கடந்த ஜூலை 9ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை!
1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி..
தமிழர் பிரதேசங்களை விழுங்கும் 'முன்னேறிப்பாய்தல்' என்ற புதிய படை நடவடிக்கையுடன் ஸ்ரீ லங்கா படைகள் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பிரதேசம் மீது தமது தாக்குதல்களை ஆரம்பித்தன.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினார்கள். பல நூற்றுக்கணக்கான மக்கள் போக்கிடமில்லாமல் வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது கட்டடங்களில் சென்று தஞ்சமடைந்தார்கள். இவ்வாறு- அராலி, வட்டுக்கோட்டை பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் காரைநகர் வீதியூடாக நவாலியில் வந்து தஞ்சமடைந்த இடம்தான் சென். பீற்றர்ஸ் தேவாலயம்.
அடுத்த நாள் 9ஆம் திகதி...
கூட்டுக் குடும்பங்களாக நெருக்கமாக வாழும் அந்த கிராமமே மிகுந்த பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த பெயர் தெரியாத தமது சொந்தங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் ஒட்டுமொத்த நவாலி மக்களும் இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். தேவாலயத்தின் பின்புற வளவினுள் பெரிய பாத்திரங்கள் வைத்து சமையல் நடந்துகொண்டிருந்தது. மூலைக் காணியில், கழிவிடங்களுக்கான குழிகளை வெட்டுவதில் ஆண்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தனர். தேவாலயத்தை கடந்து ஆனைக்கோட்டை நோக்கி செல்லும் காரைநகர் வீதியால் இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு இளைஞர்களும் யுவதிகளும் குளிர்பானங்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
சரியாக மாலை 5 மணியளவில், அப்பிரதேசத்தை கடந்து சென்றுகொண்டிருந்த 'புக்காரா' வானூர்தி ஒன்று திடீரென வழமைக்கு மாறாக தாழப்பறந்தது. தேவாலயத்தினுள்ளும் தேவாலயத்தின் அருகாமையில் நின்றுகொண்டிருந்தவர்கள் அவதானித்தது. எவருமே அந்த புக்காராவில் அப்போது சந்தேகப்படவில்லை. ஏனெனில், அவர்கள் தஞ்சமடைந்திருந்த இடம் தேவாலாயம். அத்துடன், தேவாலயத்தின் அருகிலிருந்த உயரமான மரத்தில் செஞ்சிலுவை கொடி கட்டப்பட்டிருந்தது. எந்த கல்நெஞ்சக்காரனுக்கும் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த தங்களின் மீது கண்மூடித்தனமாக குண்டுவீச மனம் வராது என்ற நம்பிக்கையுடன் அந்த அப்பாவி மக்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாகவிருந்தனர்.
ஆனால், எல்லோரையும் கதி கலங்க வைக்கும் பேரிரைச்சலுடன் வானிலிருந்து எட்டுக்குண்டுகளை தள்ளிவிட்டது அந்த இரக்கமே இல்லாத இரும்பு பறவை.
நவாலி முருகமூர்த்தி கோயிலிலுக்கு செல்லும் வீதிக்கு எதிர்புறமாக – காரைநகர் வீதியிலுள்ள – வீட்டில் ஆரம்பித்து எட்டு குண்டுகளும் வீழ்ந்து வெடித்து, அந்த பிரதேசத்தை ஒரே கணத்தில் மயானமாக்கியது அந்த புக்காரா.
எனது வீட்டுக்கு மிகவும் அருகாமையில் இடம்பெற்ற இந்த சம்பவமும் அன்றையதினம் மக்கள் எழுப்பிய மரண ஓலமும் அலறலும் அந்த பிரதேசத்தையே ஆட்கொண்டிருந்த கந்தகநெடியும் இன்னமும் மறக்கமுடியாத கொடூர நினைவுகள். அன்றைய மாலைப்பொழுதில் தேவாலயத்தை அண்டிய பிரதேசத்தில் எழுந்த மரண ஓலம் அடங்குவதற்கு நடுநிசிக்கும் மேலாகியது. எவர் செத்தார், எவர் தப்பினார் என்று எதுவுமே தெரியாத கையறுநிலையில் அப்பாவி பொதுமக்கள் அந்தரித்தநிலையை 'அன்றைய முள்ளிவாய்க்கால்' என்று கூறவேண்டும்.
அடுத்தநாள் விடிந்தது. வெளிச்சம் பரவ தொடங்கியவுடனேயே தேவாலயத்தை நோக்கி விரைந்தேன்.
தேவாலயத்தின் கூரையில் ஓர் ஓடுகூட கிடையாது. தேவாலயத்தின் மீது குண்டு விழாதபோதும், அருகில் விழுந்துவெடித்த அதிர்வில் அத்தனை ஓடுகளும் வீழ்ந்து நொருங்கி, தேவாலயத்தின் தீராந்திகள் மாத்திரம் அந்த மண்டபத்தை எலும்புக்கூடுகள் போல தாங்கிக்கொண்டிருந்தன. கதவுகள் எல்லாம் பிளந்து விழுந்து கிடந்தன.
நாவூறு படாமல் பிஞ்சுக் கன்னத்தில் கறுத்தப்பொட்டு வைத்த பச்சிளம்; குழந்தையின் தலை ஒன்று தேவாலயத்தின் முன்பாகவிருந்த பூந்தொட்டியில் கிடந்தது.
தேவாலயத்தின் முன் பரந்த நிழலைக் கொடுத்துக்கொண்டிருந்த வாகை மரத்தின் கிளையொன்றின் மீது சடலம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
தேவாலய சுவர்கள், மதில்கள், மரங்கள் எல்லாம் வெடித்துச்சிதறிய குண்டின் சன்னங்கள் சல்லடை போட்டுக்கிடந்தன. அவற்றின் மீது இரத்தம் தெறித்து சதைகள் ஒட்டிப்போய் கசாப்புக் கடைக்குள் நுழைந்தது போல ஒரு நாற்றம் தலையை சுற்றியது.
தேவாலயத்திலும் அந்த சுற்றுவட்டாரத்திலும் மூன்று நாட்களாக இடிபாடுகளுக்குள்ளும் முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் மூடிக்கிடந்த மண்குவியல்களுக்குள்ளிருந்தும் சடலங்களை மீட்டுக்கொண்டேயிருந்தனர்.
மனிதாபிமானமற்ற இந்த கொடூரப் படுகொலையால் சீற்றமடைந்த செஞ்சிலுவை சங்கம், சர்வதேச ரீதியில் இந்த செய்தியை கொண்டு செல்ல, பெரும் அழுத்தத்துக்கு உள்ளானார் ஸ்ரீ லங்காவின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர். தாக்குதல் தொடர்பாக விளக்கம் கேட்ட போப்பாண்டவருக்கு பதிலளித்த சந்திரிகா அம்மையார் 'படையினரின் தாக்குதலினால் தேவாலயம் சேதமடைந்திருந்தால், உடைந்த ஓடுகளை எண்ணி சொல்லுங்கள். அதற்கு நட்டஈடு செலுத்துவதில் தங்களுக்கு சிக்கல் இல்லை' என்றார்.
இந்தப் படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்றுவரை வெளி ஊடகங்கள் அனைத்திலும் தவறான தகவல்களே வெளிவந்துகொண்டிருப்பது வருந்தத்தக்க விடயம். சம்;பவத்தின் பின்னர் வெளியான கத்தோலிக்க வாரப் பத்திரிகையான 'பாதுகாவலன்', கொல்லப்பட்ட 210 பேரின் விவரங்களை வெளியிட்டிருந்தது. அத்துடன், வருடாவருடம் சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெறும் படுகொலை நினைவு தினத்திலும் 210 பேருக்கான பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த படுகொலைக்கு காரணமான 'புக்காரா' விமானத்தை ஓட்டிய விமானி, பின்னாளில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார் என்ற தகவலொன்று வெளியானபோதும் அது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
இதயத்தை பிழியும் - இரத்தவாடை வீசும் - இந்த சம்பவத்தை இன்று குறிப்பிடுவதன் நோக்கம், இந்த சம்பவம் இடம்பெற்றதன் இருபதாம் ஆண்டு நிறைவை நினைவுபடுத்துவது மட்டுமல்ல.
இவ்வாறு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மீதான படுகொலைகளுக்கு காரணமானவர்கள் பலர் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்னணியில் ஒழிந்து விடுகிறார்கள். மக்களாலும் மறக்கப்பட்டு விடுகிறார்கள். யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்காவுக்கு வந்து பிரபாகரன் பற்றி பேசி, கைதட்டல் வாங்கி செல்கிறார்கள். தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மறுசீரமைத்துக்கொண்டு, தாங்கள் படுகொலை செய்த அதே இனத்துக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு - கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல் - எமது மக்களுக்கு தீர்வு பெற்றுத்தருவது பற்றியெல்லாம் பேசிச் செல்கிறார்கள்.
அதை ஜீரணித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் அப்படிப்பட்ட தலைவர்களை மன்னித்து கைகுலுக்கும் எமது அரசியல் தலைவர்களை நம்பித்தான் தமக்கொரு விடிவை பெற்றுக்கொள்ள வேண்டிய தலைவிதியுடனும் தமிழ் மக்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025