Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 20 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சன் டி.வி.குழுமத்துக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் ஊடக உலகத்தை நடுங்க வைத்துள்ளது. 33 தொலைக்காட்சி அலைவரிசைகளையும் 45 வானொலி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் இந்த குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் அண்ணன் என்பதால், இந்தக் குழுமம் பல்வேறு சோதனைகளை சந்திக்கிறது.
இந்த குழுமம் தொடங்கப்பட்டதிலிருந்தே போட்டியும் பொறாமையும் கூடவே வளர்ந்து வந்தன. அதற்கு ஏற்றாற் போல் அக்குழுமத்தைச் சார்ந்தவர்களில் ஒருவரான தயாநிதி மாறன் மத்திய அமைச்சரானது, அதுவும் தொலைத் தொடர்புத்துறைக்கே அமைச்சரானது சன் டி.விக்கு தலைவலியாக மாறியது. சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந்தவர் தயாநிதி மாறன். அதற்கு முக்கிய காரணம் அவர் சார்ந்த கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவில் மத்திய அரசு நடைபெற்றதுதான்.
பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுக்குமே 2004 முதல் 2009 வரை இருந்த முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஏழாம் பொருத்தமாக இருந்தது.
'என் துறைக்கே நானே ராஜா' என்பது அப்போது அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் எடுத்த முடிவு. அது போல்தான் அவரது செயற்பாடுகளும் இருந்தன. அப்போது தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், சன் டி.வி. குழுமத்தின் சார்பில் வெளிவரும் தினப் பத்திரிக்கையான தினகரனில் தி.மு.க.வுக்குள் யாருக்கு செல்வாக்கு என்று ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் அழகிரிக்கு செல்வாக்கு இல்லை என்ற ரீதியில் வெளிவர அதனால் அழகிரி ஆதரவாளர்கள் கோபித்துக் கொண்டு தினகரனை தாக்கி, தீ வைத்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த நிகழ்வுக்குப் பிறகு தயாநிதி மாறனுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேயான உறவில் உரசல் வெளியானது. 'தயாநிதி மாறன் தி.மு.க.வுக்குள் செல்வாக்குப் பெற முனைகிறார்' என்ற எண்ணம் தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டது. அதன் பின்னர், 2009 முதல் 2014 வரையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தயாநிதி மாறனின் அதிகாரம் குறைந்தது. அது மட்டுமின்றி அவர் வகித்த தொலைத் தொடர்புத் துறை இந்த முறை தி.மு.க.வின் சார்பில் ஆ.ராஜாவுக்கு அளிக்கப்பட்டது.
இங்குதான் '2ஜி' அலைக்கற்றை நட்டப் புகார் வருவதற்கு அத்திபாரம் போடப்பட்டது என்பது தனிக்கதை. அந்த நேரத்தில் '2ஜி' விவகாரத்தை தங்களது சன் குழும டி.வி.களில் ஊதிப் பெரிதாக்கியது மாறன் தரப்பு. இந்த முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததே சன் டி.வி.யின் செய்திகள் தான் என்றால் மிகையாகாது. இதனால், தி.மு.க.வுக்கும்- சன் டி.வி.க்குமான உறவு பாதித்தது. தி.மு.க. தொண்டர்கள் 'இந்த டி.வி. நம் செய்திகளை முக்கியமாகப் போடும் சனெல் அல்ல' என்ற முடிவுக்கு வந்தார்கள்.
இதுபோன்ற காலகட்டத்தில் கனிமொழி கைது, ராஜா கைது எல்லாம் நடைபெற்று, 'இதற்கெல்லாம் காரணம் சன் டி.வி.யில் செய்யப்பட்ட 2ஜி பிரசாரம்தான்' என்ற எண்ணம் தி.மு.க. தொண்டனுக்கே ஏற்பட்டது. ஆகவே, 'தி.மு.க. தலைமைக்கும் மாறன் சகோதரர்களுக்கும் மோதல்', ' தி.மு.க. தொண்டனுக்கும், சனெலுக்கும் கருத்து வேறுபாடு' என்ற ரீதியில் தி.மு.க. ஆட்சி 2011இல் முடிந்த நேரத்தில் மாறன் சகோதரர்கள் தி.மு.க.விலிருந்தும், தி.மு.க. தலைமையிடமிருந்தும் ஏறக்குறைய தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்.
இந்த 'தனிமை' மாறன் சகோதர்களுக்கு ஆபத்தாக வந்தது. அதற்கு ஏற்றாற் போல் 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. படு தோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்வியின் பலனாக தி.மு.க. ஆட்சி தமிழகத்திலும் இல்லை. மத்தியிலும் தி.மு.க. ஆதரவு கொடுக்கும் ஆட்சி இல்லை. மாநில மற்றும் மத்திய அதிகாரத்தை தி.மு.க. இழந்த நிலையில், மாறன் சகோதரர்கள் மீதான 'ஏர்செல் மேக்ஸி' வழக்கு, 'சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸேஞ்ச் அமைத்த வழக்கு' எல்லாம் சூடு பிடித்தது.
தமிழகத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவுடன், முதலில் அதன் வெப்பத்தை மாறன் சகோதரர்கள் சந்தித்தார்கள். சென்னை மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள அசோக் நகர் காவல் நிலையம் கலாநிதி மாறனை ஆஜராகும்படி சம்மன் அனுப்பிய வைபவங்கள் எல்லாம் அரங்கேறியது.
அந்த காலகட்டத்தில் மாறன் சகோதரர்களின் சனெல்களில் அ.தி.மு.க.வின் செய்தி- குறிப்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசாங்க செயற்பாடுகள் தான் தலைப்புச் செய்திகளாகும். தி.மு.க.வின் செய்திகள் பின்னுக்குப் போய் விடும். ஆனாலும் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்ந்ததால் 2014 வரை வழக்கு, விசாரணை எல்லாம் நடைபெற்றதே தவிர, சன் டி.வி. குழுமத்துக்கு சோதனை ஏதும் வரவில்லை.
இது போன்ற சூழ்நிலையில் மத்தியிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் எல்லாம் மாறன் சகோதரர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க.வின் ஆதரவுடன் மாறன் சகோதரர்கள் இருந்த போது பகைத்துக் கொண்ட தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள், ஏன் அதிகாரிகள் எல்லாம் அணி சேர்ந்தார்கள்.
இந்நிலையில், மாறன் சகோதரர்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்ட விசாரணையில் 'சட்டவிரோத டெலிபோன் எக்ஸேஞ்ச்' அமைத்த வழக்கில் இன்றைக்கு தயாநிதி மாறன் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். இப்போது அவருக்கு அளிக்கப்பட்ட முன் பிணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்திருக்கிறது.
ஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்பட்டவுடன் முதலில் மாறன் சகோதரர்கள் தங்களுடைய 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தை விற்றார்கள். அந்த விற்பனை சட்ட விதிகளையும் சரி, அதை வாங்கியவர்களும் சரி இந்திய சட்ட விதிகளை முறைப்படி கடைப்பிடிக்கவில்லை என்று டொக்டர் சுப்ரமணியன் சுவாமியே, பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பி அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இப்போது சன் டி.வி. குழுமத்தின் 33 சனெல்களுக்கும் 'செக்யூரிட்டி க்ளியரன்ஸ்' மறுக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லிகுக்கும், உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங்குக்குமே பனிப்போர் நடக்கிறது என்றும் செய்திகளுக்கு பஞ்சமில்லை. அதேபோல் இந்திய சட்டமா அதிபர் முகுல் ரஸ்தோகி 'சன் குழுமத்தின் சனெல்களுக்கு செக்யூரிட்டி க்ளியரன்ஸ் (பாதுகாப்பு அனுமதி) கொடுக்க மறுப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது' என்றே கருத்து தெரிவித்து விட்டார்.
ஆனால், இந்த அபிப்பிராயத்தை உள்துறை அமைச்சகம் ஏற்க மறுத்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியாவின் உச்சகட்ட அந்தஸ்தில் உள்ள சட்ட அதிகாரியான 'சட்ட மா அதிபர்' கொடுத்த கருத்துக்கு எதிராக சன் டி.வி. விவகாரத்தில்தான் உள்துறை அமைச்சகம் செயற்பட்டிருக்கிறது.
அரசியல் சட்டப் பிரிவு 76 'அரசுக்கு சுதந்திரமாக தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டியது சட்ட மா அதிபரின் கடமை' என்று வலியுறுத்துகிறது. அப்படி வழங்கப்பட்ட கருத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மறுத்துள்ளது உள்துறை அமைச்சகம் என்பதுதான் இப்போது பல்வேறு கட்சித் தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, அகில இந்திய தலைவர்கள், மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் (அ.தி.மு.க. தவிர) சன் டி.வி குழுமத்துக்கு 'பாதுகாப்பு அனுமதி' மறுக்கப்பட்டதும், 'வானொலி அலைவரிசைகள் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதும்' அநியாயம் என்று கருத்து தெரிவித்து விட்டார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியும் 'ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல் இது' என்று கண்டன அறிக்கை வெளியிட்டு விட்டார். இந்த அறிக்கை மட்டும் மாறன் சகோதரர்கள் நடத்தும் 'தினகரன்' பத்திரிகையில் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. இல்லையென்றால் தி.மு.க. தலைவரின் அறிக்கைகள் அந்தப் பத்திரிகையின் முதல் பக்கத்தில் பெரும்பாலும் வராது.
'தொழில் தொடங்கும் சூழ்நிலையை உருவாக்குவோம்', 'அந்நிய முதலீடுகளை ஈர்ப்போம்', 'திறமையானவர்கள் யாருமே தீண்டப்படாதவர்கள் அல்ல', 'விசாரணை அமைப்புகள் நடுநிலைமையுடன் செயல்படும்' என்றெல்லாம் கூறி ஆட்சிக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசில் - தொழிலதிபர்களுக்கு எதிராக, தொழிலை முடக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் இந்த 'சன் டி.வி. குழும' விவகாரம்தான்.
'இதுபோன்ற வழக்குகளில் சிக்கியுள்ள பல சனெல்களுக்கு 'பாதுகாப்பு அனுமதி' கொடுத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏன் எங்களுக்கு மட்டும் நிராகரிக்கிறது' என்பதுதான் மாறன் சகோதரர்கள் - மத்திய அரசைப் பார்த்துக் கேட்கும் கேள்வி.
ஆனால், இப்போது தி.மு.க.வின் ஆதரவில் மத்திய அரசு இல்லை என்பதும், பரிந்து பேச நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் இல்லை என்பதும் 'மாறன் சகோதரர்களின்' எதிர்காலத்தை 'சவால்களும் சோதனைகளும்' நிறைந்த பாதையில் கொண்டு வந்து நிலை நிறுத்தியிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025