2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாயப்பொய்கையில் இறங்கி மந்திரப்பூ பறிப்பது எவ்வளவு காலத்துக்கு?

Thipaan   / 2015 ஜூலை 21 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ப. தெய்வீகன்

மக்கள் ஆதரவுபெற்ற சக்தி மிக்க தலைவர்கள், பூகோள அரசியல் அட்டவணைக்குள் அடங்க மறுக்கின்றபோது, அவர்களை இயலுமானவரை சகல தந்திரோபாயங்களையும் பின்பற்றி அந்த உயர்பீடத்திலிருந்து தூக்கியெறிந்துவிடுவது நடப்பு உலக ஒழுங்கு.

இந்த நூற்றாண்டில் இடம்பெற்ற பல படையெடுப்புக்கள், பதவி கவிழ்ப்புக்கள், படுகொலைகள் அனைத்தும் மேற்குறிப்பட்ட எழுதப்படாத விதியினுள் அடக்கம்.

இந்தப் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய அரசியல் இருப்பினை பார்ப்போமானால், 2002ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முகம்கொடுத்த அதேநிலைதான் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இதனைக் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

மஹிந்தவுக்கான அரசியல் ஆதரவு எனப்படுவதை கட்சிமட்டத்துக்கு அப்பால், மக்கள் தரப்பிலிருந்து பார்ப்பதாக இருந்தால், அதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தல்தான் நெருக்கமாக உள்ள சரியான அளவீடாக அமையும்.

தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திமிறிக்கொண்டிருக்கும் மஹிந்தவை நோக்கி அவரின் எதிரிகள் முன்வைக்கும் விமர்சனங்களில் 'மக்கள் ஆதரவை இழந்த பின்னர் தேர்தலுக்கு வரக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் யார் வெற்றியாளர் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையான கொழும்பை தவிர்த்து, நாட்டின் ஏனைய சிங்கள பகுதிகளை எடுத்துக்கொண்டால் - மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2,505,801. ஆனால், மஹிந்த பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 3,140,971. அதாவது, சிங்கள மக்களின் நாயகனாக மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரியைவிட 635,170 வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், தமிழ் - முஸ்லிம் மக்களின் வாக்குகள்தான் மஹிந்தவை பதவியை விட்டே துரத்தியது.

தேர்தல் முடிந்தவுடன் தனது சொந்த ஊருக்கு ஹெலிகொப்டரில் சென்ற மஹிந்த, தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, தன்னை தமிழர்கள் தோற்கடித்துவிட்டார்கள் என்றுகூறி சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராக, அவ்வாறான கொதிநிலை கொண்ட சூழ்நிலையில், உசுப்பேற்றிவிட்டார்.

இவையெல்லாம் நடந்து முடிந்து ஆறுமாதங்கள் முடிந்துவிட்டன.

இப்போது, மஹிந்தவின் அரசியல் மீள்பிரவேசத்தை பார்ப்போமானால், அவருக்கு அவர் சார்ந்த இனமக்கள் மத்தியில் பாரிய ஆதரவு இருப்பினும், மேற்குலகமோ முக்கியமாக இந்தியாவோ, அவரது அரசியல் வருகையை அறவே விரும்பவில்லை. அதற்கான காரணங்களை இங்கு விரிவாக அலசத் தேவையில்லை. அனைவருக்கும் தெரிந்ததே. இதனைத்தான் முதலில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முகம்கொடுத்த அதேநிலை என்று குறிப்பிட்டிருந்தேன்.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை, மஹிந்த எனப்படுபவர், இன்றைக்கு அல்ல- என்றைக்கும் மறக்கமுடியாத பெருந் தலைவர்.

அண்மையில், கொழும்பிலுள்ள நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்ன ஒரு தகவல், பாமர சிங்கள மக்களின் சிந்தனையோட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.

சில மாதங்களுக்கு முன்னர், எனது நண்பர் ஓட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது சிங்கள ஓட்டுநரோடு அரசியல் கதைவிட்டு பார்த்திருக்கிறார். அப்போது, முன்னர் ஆட்சியிலிருந்த மஹிந்த அரசு சொகுசு வாகனங்கள் கொள்வனவில் மக்களின் பணத்தை கொள்ளை அடித்து பாரிய ஊழலில் ஈடுபட்டிருப்பதை எனது நண்பர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ஓட்டோ ஓட்டுநர் 'விடுங்க சார். அவர் எத்தனை சொகுசு வண்டியாவது வாங்கி ஓடட்டும். பிரபாகரனையே ஒழித்துக்கட்டியவர் அல்லவா? வாங்கி ஓடித்தான் போகட்டுமே. சொகுசாக வாழ்வதற்கு அவருக்கு இல்லாத தகுதி இந்த நாட்டில் வேறு யாருக்கு இருக்கிறது' - என்று கூறியுள்ளார்.

ஓட்டோ ஓடும் ஒரு பாமர சிங்கள பொதுமகன், நாட்டின் அரசியல் நடப்பு குறித்து கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடு இதுதான்.

சிங்கள தேசத்தை பொறுத்தவரை, என்ன சொல்லியும் வாக்குக் கேட்கலாம். ஆனால், அதன் போர் வெற்றியை இழிவுபடுத்தியோ அல்லது அந்த வெற்றிக்கு பொறுப்பானவர்களை சீண்டிப்பார்த்தோ வாக்குக் கேட்பது என்பது பாமர சிங்கள மக்கள் மத்தியில் நடவாத காரியம். அது இன்றல்ல, இன்னும் பல ஆண்டுகளுக்கும் சிங்கள மக்கள் மத்தியில் முடியாத காரியம்தான்.

இந்தியாவில் எம்.ஜி.ஆரின் புகழுடன் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. போலவும் காந்தியின் புகழுடன் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி போலவும் மஹிந்தவின் போர் வெற்றி என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கப்போவது உறுதி. தெற்கில் அரசியல் நடத்தப்போகும் கட்சிகள் அனைத்தும் ஐ.தே.க. போல மேட்டுக்குடி கொள்கைகளுடன் பட்டும்படாமல் வெற்றிகளை திரட்டிக்கொள்ளலாமே தவிர, அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியில் தமக்கான திரண்ட ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு சிங்கள கட்சிகள் இன்னமும் எவ்வளவோ பாடுபடவேண்டியுள்ளது.

சிங்கள மனோபாவம் எனப்படுவது தேசப்பற்றெனப்படும் சிக்கலான கோட்பாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்ட மாயை. தேசிய கருத்துருவாக்கம் எனப்படுவது சிங்கள மக்களை பொறுத்தவரை அவர்களுக்கு தெரியாமலே, அதன் தாற்பரியம் விளங்கப்படாமலே மகாவம்ச மாயையின் ஊடாக பின்னப்பட்டிருப்பதாகும். அந்த குழப்பமான குட்டையில் மீன் பிடித்து, அதில் நல்ல இலாபமும் ஈட்டிக்கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ.

அப்படிப்பட்ட அரசியல் வியாபாரியின் திறமையை ஆழமாக நோக்கவேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், இந்த சிக்கலிலிருந்து சிங்கள மக்களை விடிவிக்கும்வரை தமிழ்த் தேசியத்துக்கான நியாயபூர்வ அங்கிகாரம் எனப்படுவது அயலில் அந்தரிக்கும் அநாதைப் பொருளாகவே கிடப்பில் இருக்கப்போகிறது.

விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில், சிங்கள மக்களை இந்த மாயை தேசிய வியாதியிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவையெல்லாம் அவர்கள் நினைத்த இலக்கை எட்டவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. சிங்கள மொழியில் பத்திரிகை ஒன்றை வெளியிட்டும் வேறு பல ஊடகங்கள் ஊடாக சிங்கள மக்களுக்கு தமிழ்த் தேசிய சிந்தனைகளையும் அது அச்சுறுத்தல் இல்லாத - கூட்டு மனவுணர்வு - உரிமை என்ற உண்மையையும் எடுத்துக் கூறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றபோதும், அந்த பயணத்தால் நீடிக்கமுடியவில்லை.

இந்த பணியெனப்படுவது தற்போது தமிழ்த் தேசிய அரசியல் தரப்பின் மீதான பெரிய சுமையாக மாறியிருக்கிறது. 

முப்பதாண்டு காலம் தமிழர்களின் உரிமைக்காக ஆக்ரோஷமான போராட்டத்தை முன்னெடுத்து அது ஓய்வுற்றுள்ள இந்த காலப்பகுதியில், தமிழர் தரப்பிலிருந்து அதே உரிமைக்காக முன்னெடுக்கப்படும் எந்தப் போராட்டத்தையும் சிங்கள மக்கள் மென்முறை வழியான பார்ப்பதற்கு தயாராக இருக்கமாட்டார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடிய யதார்த்தமே. அவர்களின் இந்த யாதார்த்தபூர்வமான அச்சத்துக்கு மஹிந்த போன்றோரின் இனவாத தேசிய அரசியல் பிரசாரத்தின் ஊடாக ஏற்பட்ட பிரக்ஞைநிலை எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதை மேலே பார்த்தோம்.

அப்படியானால், அதை தமிழர் தரப்பின் அரசியல் தரப்புக்கள் எவ்வாறு கையாளப்போகின்றன என்பது தமிழ்த் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவேண்டிய பிரதான பேசுபொருளாகும்.

தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் தெளிவான பார்வையை உருவாக்கவேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு முக்கியத்துவத்தை சிங்கள மக்களுக்கான அறிவுபூர்வமான பிரசார வழியிலும் காண்பிக்கவேண்டும். இதற்கான சுதந்திர உரையாடல் வெளியை தமிழர் அரசியல் தரப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் முன்னெடுக்கவுள்ள முக்கியமான வேலைத் திட்டங்களில் ஒன்றாக இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பணியை செய்வதற்கு தேர்தலில் வெற்றிபெற்ற தரப்பு மட்டும்தான் தகுதியுடையது என்று அர்த்தமாகாது. தேர்தல் அரசியலுக்கு அப்பால், தமிழ்த் தேசிய அரசியல் வெளியில், பொருத்தமானதும் இறுக்கமானதுமான கொள்கை அரசியலில் பிடிப்புள்ள தரப்பினர் தமிழ் மக்களுக்கான பொறுப்புமிக்க இந்தப் பங்களிப்பை வழங்கமுடியும்.

தலைநகரின் அரசியல் பரீட்சயமும் நெளிவு சுளிவுகளும் தெரிந்த ஒரு கூட்டத்தினர் இந்தப் பணிக்காக உள்வாங்கப்பட்டு, சிங்கள மிதவாத அரசியல் தலைமைகளுக்கு ஊடாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது பொருத்தமான வழிமுறையாக இருக்கும்.

தமிழர் அரசியலை இனிவரும் காலங்களில் தனியே வெற்றி முழக்கங்களாகவும் எமக்குள் நாங்களே ஆளுக்காள் வெறித்தனமாக பழிவாங்கிக் கொள்வதற்கான கருவிகளாகவும் பயன்படுத்தாமல், காத்திரமான காரியங்களுக்கு பயன்படுத்தும் முற்போக்கு கருத்தியல் கோட்பாடுமிக்கதாக மாற்றவேண்டும்.

பௌத்த தேசியம் எனப்படுவது இப்படியான கட்டமைக்கப்பட்ட கவசமாக மாறிவந்து பல ஆண்டுகளாகிவிட்டன. பௌத்த தேசியத்தில் ஊறிய சிங்கள அரசியல் தலைமைகள் எவ்வளவுக்கு எவ்வளவு தான்தோன்றித்தனமான கொள்கைகளுடன் பயணிப்பதற்கு தலைப்பட்டிருக்கின்றனவோ, அதேயளவு தனது புத்திஜீவிகள் அடங்கிய கூட்டத்தினரை தனது கொள்கைகளுக்கு கவசமாக கொண்டு தனது பயணத்தையும் சூழ்ச்சிகளையும் பக்குவமாக நகர்த்துகிறது என்பதை கவனிக்கவேண்டும்.

இந்தத் திட்டங்களை நன்றாக உற்று நோக்கினால் -

தமிழர் தரப்பு செய்யவேண்டிய பொறுப்புமிக்க காரியங்களுக்கு அப்பால், நமது அணியத்தில் தற்போதுள்ள புத்திஜீவிகள் கூட்டத்தையும் அந்த பௌத்த தேசியத்திடம் விழுங்கக்கொடுத்துவிடும் அச்சத்துடனேயே பார்க்கவேண்டியதாக இருக்கிறது. அவ்வளவுதூரம், சிங்களத் தரப்பின் வியூகம் மிகவும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நேரெதிராக தமிழர் தரப்பை நோக்கினால், அது கானல்நீராகவே காணப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தல் களேபரத்துக்கு பின்னர், தமிழர் தரப்பில் இதற்கான வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படுமா? வரலாற்று வலுச்சேர்க்கும் இந்தப் பணியை முன்னெடுக்கப்போவது யார்?  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .