Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 22 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஆற்றைக் கடக்கும் வரை தான் அண்ணன் தம்பி எல்லாம், அதன் பின்னர் நீ யாரோ, நான் யாரோ?' என்கிற நிலையே இலங்கை அரசியலரங்கில் காணப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கடந்த 17ஆம் திகதி இலண்டனில் நடத்திய நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
வட மாகாண சபையில் கடந்த ஜனவரி மாதம் இனவழிப்பு தீர்மானத்தை முன்வைத்து சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரைக்குப் பின்னர், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினால் அதிகம் சிலாகிக்கப்பட்டு வரவேற்கப்பட்ட உரையாக 'இலண்டன் உரை'யைக் கொள்ள முடியும். அதுவும், இலங்கை, பொதுத் தேர்தலொன்றை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், சி.வி.விக்னேஸ்வரனின் உரை தமிழ்த் தேசியத் தளத்தில் அதீத கவனம் பெறுவது இயல்பானது. இந்தப் பத்தி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இலண்டன் உரை தொடர்பில் சில விடயங்களையும், தமிழ்த் தேசிய அரசியலரங்கில் அவர் எவ்வாறு உள்வாங்கப்படுகின்றார் என்பது தொடர்பிலும் பேச விளைகின்றது.
தனிப்பட்ட ரீதியில் முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் என்ன நோக்கங்களுக்காக நுழைய விரும்பினாரோ தெரியாது.
ஆனால். அவரின் வருகையை வரவேற்றவர்களின் அளவுக்கு, எதிர்த்தவர்களின் அளவும் பெரியது. தமிழ் மக்கள் தனிப்பட்ட நபர்கள் மீது கொள்ளும் சந்தேகம் என்பது இயல்பானது. ஏனெனில், கடந்த காலங்களில் அவர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட துரோகத்தின் அளவு அதிகமானது. அப்படியான நிலையில், சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் வருகையையும் பெரும் சந்தேகங்களோடுதான் எதிர்கொண்டார்கள். வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் தமது அரசியலுரிமைப் போராட்டத்தின் குறியீட்டு வெற்றியைப் பதிவு செய்வதற்கான களமாக கையாண்டார்கள். அதன்போக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றது. சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானார்.
அரசியல் என்பது தெளிந்த நீரோடை போன்றதல்ல என்கிற அனுபவப் பாடத்தையும், அரசியல் சாக்கடைக்குள் இறங்கி நீந்துவது என்பது பெரும் ஆற்றலோடு செய்யப்பட வேண்டியது என்பதையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சில காலத்துக்குள்ளேயே உணர்ந்து கொண்டார். அதுவும், பௌத்த சிங்கள தேசியவாத அரசாங்கத்தோடு இணக்கமான அரசியலை முன்னெடுக்க நினைத்தவருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த 'ஷொக்' என்பது என்றைக்கும் ஜீரணிக்க முடியாதது.
அதுபோல, தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் ரீதியிலான சூட்சுமங்களை அவரினால் முழுமையாக புரிந்து கொள்ளவும் முடியாதிருந்தது. இவற்றினால், முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பத்தில் அதீத தடுமாற்றங்களைச் சந்திக்க நேரிட்டது. அது, அவர் மீதான நம்பிக்கையிழப்பை அதிகப்படுத்தியது.
எனினும், சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய அரசியலை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்கிற அவரின் இன்றைய நிலைப்பாட்டுக்கு கடந்த வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து நகர்ந்து வந்திருக்கின்றார் என்று கொள்ள முடியும்.
அது, இலங்கையின் பௌத்த சிங்கள அரசாங்கங்கள் மீதான நம்பிக்கையிழப்பின் காரணமாகவும், தமிழ் மக்களின் கூட்டு மனப்பான்மை சொல்லும் செய்தியின் பிரதிபலிப்பினாலும் ஏற்பட்டது. வடக்கு மாகாண சபை தன்னுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டு செய்யக் கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக இருந்து வருவதுதான். ஆனால், அதற்கான சூழல் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எவ்வளவு இருந்தது என்பது மறு கேள்விக்குரியது. அதேபோன்றதொரு நிலைதான், இன்னமும் தொடர்கின்றது.
சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் வருகையை புலத்திலுள்ள தமிழ் மக்கள் சந்தேகங்களோடு வரவேற்றாலும், புலம்பெயர் தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் இணக்க அரசியலின் அதீத சாய்தல் நிலைப்பாடுகளுக்கு எதிரான பக்கம் ஒப்பீட்டளவில் சி.வி.விக்னேஸ்வரன் நகர ஆரம்பித்த தருணத்தில்தான், புலம்பெயர் தமிழர்களும், ஊடகங்களும் அவரை ஆதரிக்க ஆரம்பித்தன. இன்றைக்கு அது எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்றால், சி.வி.விக்னேஸ்வரனை சந்தேகங்களுக்கு அப்பாலான தலைவராகவும், எதிர்காலத்தின் குறிப்பிட்டத்தக்க நம்பிக்கையாகவும் கொள்ள வைத்திருக்கின்றது.
தென்னிலங்கை அரசியல் சக்திகளோடு அதீத இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தி அதிகாரங்களை அடைவேண்டும் என்று நினைக்கும் தரப்பினருக்கும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முறுகல் வடக்கு மாகாண சபையில் இனவழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தருணத்தில் ஆரம்பித்தது.
இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் சி.வி.விக்னேஸ்வரனின் குறித்த நடவடிக்கையை ரசிக்காத போதிலும், தமிழ் மக்கள் அதனை மனதார வரவேற்றார்கள். ஏனெனில், தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பினை, அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட அவையே நிறைவேற்றி வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றது. குறித்த தீர்மானமும் குறியீட்டு அரசியலில் முக்கியமானது. இந்த இடத்திலிருந்து அவரின் இலண்டன் உரையை கவனத்தில் கொள்ள முடியும்.
'வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமாறு பல கட்சிள் சேர்ந்தே எனக்கு கோரிக்கை விடுத்தன. சில கட்சிகள் நான் எந்தவொரு கட்சியின் பக்கமும் சாராதிருக்க வேண்டும் என்றும் பலவந்தப்படுத்தின. எனவே தனித்துவமாக நிற்பதே உசிதமானது என்று எனக்குப் பட்டது.
மக்களின் நலனுக்காகவே நாங்கள் கட்சியை உருவாக்கியுள்ள போதிலும், அக்கட்சிகள் மக்களின் நலன்களைப் பார்க்க தற்போது முக்கியத்துவம் அடைந்து வருவதைக் காண்கிறோம். என்னைப் பொறுத்த வரை மக்களின் நலனே எமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். இந்த நிலையில் கட்சிகளைக் கடந்து சேவையில் ஈடுபடவே நான் விரும்புகிறேன்.'
அவையினருக்கு முகமன்கூறி தன்னுடைய உரையினை ஆரம்பித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தன்னுடைய நிலை மற்றும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டினை மேற்கண்ட பகுதியினூடு ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவரது தற்போதைய அரசியலை அந்தக் கட்சிகளே அவ்வளவு ரசிக்கவில்லை. மாறாக, அச்சுறுத்தலாக உணர ஆரம்பித்துவிட்டன. அவ்வாறான நிலையில், கூட்டமைப்புக்குள் இருந்து கொண்ட ஜனநாயக ரீதியிலான எதிர்வினையை ஆற்றுவதற்கு அவர் முனைகின்றார்.
அதனை, அவர் புலத்தில் (தாயகத்தில்) ஏற்கெனவே முன்னெடுத்திருந்தாலும், புலம்பெயர் தளத்தில் செய்வது இதுதான் முதன்முறை. தன்னுடைய அரசியலை அவர் மக்களோடு நேரடியாக பேச ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்களவு நல்மாற்றங்களை வழங்கும் என்று நம்பலாம்.
'அழகிய இலங்கைத் தீவில் வாழும் இனங்கள் அமைதியாகவும், அன்பாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக நான் அர்ப்பணிப்புடம் பணியாற்றி வருகின்றேன்.
அதேவேளை, தமிழ் மக்கள் தங்களுடைய தேசத்தில் நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவமாக வாழவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.' என்ற பகுதியினூடு ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்கிற விடயத்தை தெளிவாக்க முனைத்திருக்கின்றார். எந்தவொரு தருணத்திலும் அவர் பிரிவினைக் கோரிக்கைகளின் பக்கம் நகரவில்லை. இது, இன்றைய யாதார்த்த சூழலில் மிக முக்கியமான செய்தி.
ஏனெனில், 'தமிழ்த் தேசிய அரசியலில் விட்டுக்கொடுப்புக்களை செய்வது சரியல்ல' என்கிற நிலை நோக்கி நகர்ந்து வந்திருக்கின்ற சி.வி.விக்னேஸ்வரன், ஒருமித்த இலங்கைகக்குள் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்கிற நிலைப்பாட்டை முன்வைக்கும் போது அது, இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளப்படும். ஏனெனில், இந்த விடயத்தை இரா.சம்பந்ததோ, எம்.ஏ.சுமந்திரனோ முன்வைக்கின்ற போது அது, ஆற்றும் எதிர்வினை வேறுமாதிரியானது. ஏற்கெனவே, 'சிங்கங்கொடி பிடித்தவர்கள்' என்கிற வாசகத்துக்குள் அவர்கள் இருவரும் அடங்கிவிட்டார்கள். ஆக, அவர்கள் கூறுவதை சந்தேகத்தோடு பார்க்கும் நிலை உருவாகி நீண்டகாலமாகிறது.
'பன்னெடுங்காலமாக எமது இனத்தின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் நாம் பல்வேறு வடிவங்களில் போராடி வந்திருக்கின்றோம். ஆயினும், எமது காலத்தில் எமது மக்களுக்கான உரிமையோ, நீதியோ உள்நாட்டில் கிடைக்காது என்பதனை தென்னிலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் புலப்படுத்தி வந்திருக்கின்றன. எனவேதான், எமது காலத்தில் உறுதியான ஜனநாயக அத்திவாரத்தை இட்டு எமது எதிர்கால சந்ததியினரிடம் இந்தப் பணியைத் தொடர்வதற்கு அவர்களிடம் கையளிக்கும் வண்ணம் நாம் விரைந்து பணியாற்ற வேண்டியிருக்கின்றது.'
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்வது போல 2016ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளோ, அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் கூறுவது போல நாடாளுமன்ற பிரநிதித்துவத்தை உறுதிப்படுத்தனூடு அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கி குறுகிய காலத்துக்குள் நகர்ந்துவிடலாம் என்று நம்புவதே அடிப்படையற்றது. அந்தக் கருத்துக்களை முன்வைப்பவர்களுக்கே அது சாத்தியமில்லாது என்று தெரியும். அப்படியான நிலையில், வாக்கு அரசியலின் தகிடுதத்தங்களைக் கடந்து முதலைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூரநோக்கோடு தமிழ் அரசியல் தளம் கட்டமைக்கப்பட வேண்டும் என்று மேற்கண்ட பகுதியினூடு கோரியிருக்கின்றார். வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் அவரும் வாக்கு அரசியலின் போக்கிலான உரைகளை ஆற்றியிருக்கிறார் என்பது மறுக்க முடியாத விடயம். ஆனால், அவர் அதிலிருந்து இப்போது நகர்ந்து வந்திருக்கின்றார் என்று கொள்ள முடியும். நான் அப்படித்தான் நம்புகிறேன்.
'முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெளிந்த அரசியலை செய்ய நினைக்கின்றார். ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் சூழலோ, தென்னிலங்கை அரசியலோ அதற்கான வாய்ப்புக்களை வழங்குவதில்லை. அதன் சூட்சுமத்தைப் புரிந்து அரசியல் செய்வதென்பது பெரும் சிக்கலானது. அப்படிப்பட்ட நிலையில், விக்னேஸ்வரனின் அரசியல் என்பது மாணவ நிலையை ஒத்தது. ஒப்பீட்டளவில் நேர்மையானது.
' எனும் தொனியிலான கருத்தை வடக்கு மாகாண சபை 'இனவழிப்புத் தீர்மானத்தை' நிறைவேற்றி தருணத்தில் அரசியல் கலந்துரையாடலொன்றின் போது பகிர்ந்து கொண்டேன். அதற்குப் பின்னரான கடந்த ஆறு மாத காலத்திலும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நிலை அப்படித்தான் இருக்கின்றது. இலண்டன் உரையும் அதையே உணர்த்தி நிற்கின்றது!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025