2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஈரான் அணுசக்தி உடன்படிக்கை: வெற்றி யாருக்கு?

Thipaan   / 2015 ஜூலை 23 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

எல்லாப் போர்களும் போர்க்களங்களில் நடப்பதில்லை. இப்போதெல்லாம் அநேகமான போர்கள் பேச்சு மேசைகளில் தான் நடக்கின்றன. அதனால் தானோ என்னவோ வென்றவர் யார்? என்பதை ஊடகங்களே முடிவெடுக்கின்றன.

எமக்குச் சொல்லப்படும் தகவல்களின் அடிப்படையில் முடிவை நாம் எட்டுகிறோம். பெரும்பாலான எமது முடிவுகளுக்கு மேற்குலக ஊடகங்களின் தகவல்களே அடிப்படையாக இருக்கின்றன.

ஆனால், அவை உண்மையல்ல எனப் பல தருணங்களில் கண்டிருக்கிறோம். அவ்வகையான இன்னொரு தருணத்தை வரலாறு - கடந்தவாரம் ஏற்படுத்தித் தந்தது. வரலாறு, தன் கடமையைச் செய்து கொண்டே இருக்கிறது.

கடந்தவாரம் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக எட்டப்பட்ட உடன்படிக்கை, பலவகைகளில் முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எல்லாமே போராகப் பார்க்கப்படுகின்ற நிலையில் யார் வெற்றியாளர் என்ற கேள்வியே முன்னகர்த்தப்படுகிறது.

இவ்வுடன்படிக்கை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெற்றியாகவும் ஈரானின் இயலாமையின் விளைவென்றும் மேற்குலக ஊடகங்கள் மெச்சுகின்றன. இவ்வுடன்படிக்கை எட்டப்பட்டதன் காரணங்களையும் இதனால் பூகோளரீதியில், குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்படப்போகும் புதிய அதிகாரச் சமநிலையையும் கவனித்தல் தகும்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாட்டின் வரலாறு மிகவும் நீண்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த உடன்படிக்கையை நோக்க வேண்டியிருக்கிறது. ஈரானின் மீதான அமெரிக்க ஆதிக்கத்துக்கு அறுபது வருடங்களுக்கு முன்னமே அத்திபாரமிடப்பட்டது.

ஈரானின் ஆட்சித் தலைவர் மொஸாடெக், படுகொலையின் பின்பு அமெரிக்க-பிரித்தானிய முயற்சி மூலம் ஈரானில் முடியாட்சியொன்று நிறுவப்பட்டது.

அதைப்போன்ற பயங்கரமான சர்வாதிகாரக் கொடுங்கோன்மை ஆசியாவில் வேறெதுவும் இல்லை எனுமளவுக்கு அந்த ஆட்சி சகல எதிர்ப்பாளர்களையும் கடுங்கண்காணிப்பு, ஆட்கடத்தல், சித்திரவதை, கொலை என்பன மூலம் கட்டுப்படுத்தியது. அந்த ஆட்சி கொமெய்னி தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியால் 1979இல் தூக்கி எறியப்படும் வரை, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகவே ஈரான் இருந்தது.

ஈரானின் இஸ்லாமிய மதவாத ஆட்சியின் தவறுகள் காரணமாக கணிசமானளவில் மக்கள் அதை வெறுத்தாலும் அந்த ஆட்சியைக் கவிழ்க்க ஈராக்-ஈரான் போரின் போது சதாமுக்கு ஆதரவு உட்பட அமெரிக்கா எடுத்து வந்த நடவடிக்கைகள் முடிவில் இஸ்லாமிய மதவாதிகளின் கையையே வலுப்படுத்தின.

 ஈரானின் பொருளாதாரம் அமெரிக்காவின் நெருக்குவாரங்களால் ஒரு புறமும் ஈரானிய ஆட்சியின் பழமைவாதப் போக்கால் இன்னொரு புறமும் பல சிக்கல்களை எதிர்நோக்கினாலும், ஆசியாவின் வலுவான ஒரு நாடாக ஈரான் வளர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்துக்குத் தடையாகவும் சீனாவைச் சுற்றி வளைத்துத் தனிமைப்படுத்தும் முயற்சிக்குத் தடையாகவும் உள்ள முக்கியமான ஒரு நாடு ஈரான். ஈரானில் ஓர் அமெரிக்கச் சார்பு ஆட்சியை நிறுவும் முயற்சி தோல்வி கண்ட பின்பே, ஈரான் பற்றிய கடும் போக்கை அமெரிக்கா மேற்கொண்டது. ஈரானுக்கு எதிரான கடும் போக்கு முஸ்லிம் மதவாத ஜனாதிபதி

அஃமெடி நெஜாடினின் தெரிவுக்குப் பின்பு தீவிரமாகியது. அஃமெடி நெஜாடினுக்குப் பின்னான புதிய ஜனாதிபதியின் நெகிழ்வான போக்கும் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் ஈரானிய செல்வாக்கும் மத்திய கிழக்கில் இருக்கின்ற அமெரிக்கக் கூட்டாளி நாடுகள் சந்தித்துள்ள மோசமான பின்னடைவும் குறிப்பானவை.

ஈரான், தனது அணுசக்தியை விருத்தி செய்யவும் அணு உலைகளில் பயன்பட்ட யூரேனியத்தைச் செறிவுபடுத்தி மீண்டும் பயன்படுத்த ஆய்வுகளை நடத்தவும் கூடாது என அமெரிக்கா கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளது. இந்த எதிர்ப்புக்கு இஸ்ரேலும் ஒரு முக்கியமான தூண்டு சக்தியாக இருக்கிறது. அமெரிக்க நெருக்குவாரத்தின் அடிப்படையில், சர்வதேச அணுசக்தி அதிகாரசபையில் அணுசக்தி தொடர்பான ஈரானின் செயற்பாடுகள் பற்றிய கண்டனத் தீர்மானம் ஒன்று 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவும் அமெரிக்காவுடனான தனது புதிய நெருக்கத்தின் விளைவாக அதை ஆதரித்தது. இதனடிப்படையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஆனால், மத்திய கிழக்கில் தவிர்க்கவியலாத ஒரு சக்தியாக ஈரான் தடைகளையும் தாண்டி வளர்ந்துள்ளது. இப்பின்னணியிலேயே  P5101 என்ற கூட்டு (அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி) ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பொருளாதார நலன்களுக்காக ஈரானுடன் வணிக உறவைப் பேண வேண்டிய நிலையிலுள்ளன. அதேவேளை ஈரானின் அணுசக்தி விருத்திக்கு உதவிசெய்து வந்த ரஷ்யா, இதில் தவிர்க்கவியலாத அரங்காடியாக மாறியது. ஈரானின் அணுசக்திப் பிரச்சினையானது பாதுகாப்புச் சபைக்குப் போவதை சீனா விரும்பவில்லை.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் சரியும் ஆதிக்கம், இஸ்ரேலிய நெருக்குவாரங்களையும் தாண்டி அமெரிக்கா இவ்விடயத்தில் ஓர் உடன்படிக்கைக்கு வருவதை கட்டாயமாக்குகின்றது. அமெரிக்கா, கடந்த பத்தாண்டுகளில் ஈரான் தொடர்பில் இரண்டுவிதமான முனைப்புகளை மேற்கொண்டது.

ஒன்று ஈரானுடனான போரொன்றுக்கு அமெரிக்கா ஆயத்தமாவது போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியது. மற்றையது, ஈரானைத் தனிமைப்படுத்துகிற முயற்சிகளைத் தீவிரமாக்கியது. அமெரிக்கா, ஏற்கெனவே உருவாக்கியுள்ள போர்க்களங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவும் ஆப்கானிலும் ஈராக்கிலும் முடிவற்றுத் தொடரும் போர்களும் இன்னொரு போரைத் தொடங்குவதைச் சாத்தியமற்றதாக்கின.

அமெரிக்காவின் நெருக்கடிக்குள்ளாயிருக்கும் பொருளாதாரம், விரும்பினாலும் ஈரான் மீது போரை நடாத்த முடியாத நிலைக்கு அமெரிக்காவைத் தள்ளியுள்ளது. ஈரானுக்கு ரஷ்யாவும் சீனாவும் அதன் நட்பு நாடுகளும் வழங்கி வந்த ஆதரவும், மத்திய கிழக்கில் அதிகரித்த ஈரானின் செல்வாக்கும் ஈரானைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளுக்குத் தடையானது.

ஈரானிய ஆட்சியாளர்கள் அமெரிக்க-இஸ்ரேலிய நெருக்குவாரங்களுக்குப் பணியப் போவதில்லை என்பதில் உறுதியாயிருந்தனர். ஏனெனில் அமெரிக்காவுக்கு ஈரான் பணிந்து போனால், அமெரிக்கா அதை மேலும் அடக்கியாளவே முற்படும் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தனர்.

இந்தச் சூழலிலேயே ஈரானின் அணுசக்தி தொடர்பான உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான முனைப்புகள் முதன்மைபெற்றன. பேச்சுக்களில் பங்குபற்றிய வேறெவரையும் விட இவ்வுடன்படிக்கையை எட்டுவதில் அமெரிக்கா காட்டிய அதிக அக்கறை, பலர் கவனிக்க மறந்தவொன்று.

1979இல் நடந்த ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து அமெரிக்காவின் மன்னிக்கமுடியாத எதிரியாக ஈரான் மாறியது. மிக அண்மைக்காலம் வரை ஈரானுடன் எதுவிதமான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளாத, மேற்கொள்ள விரும்பாத அமெரிக்காவின் இத் திடீர் மனமாற்றம் ஆராயப் பயனுள்ளது. குறிப்பாக இஸ்ரேலிய லொபிகளின் ஆளுகைக்குட்பட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் இஸ்ரேல், முற்றுமுழுதாக எதிர்க்கின்ற ஒரு செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள் என்றால் அதன் பின்னால் மிகப் பாரிய நலன்கள் ஒளிந்துள்ளன என்பது விளங்க வேண்டும்.

எட்டப்பட்ட உடன்படிக்கையை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்திருக்கிறது. இது ஓர் 'அதிர்ச்சி தரத்தக்க வரலாற்றுத் தவறு' என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹ§ கூறியுள்ளார். இவ்வுடன்படிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்ற இன்னொரு நாடு சவுதி அரேபியா. மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களின் எடுபிடிகளாக, காவலாளிகளாகச் செயற்படுகின்ற இவ்விரு நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு நடுவே அமெரிக்கா இப்பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என்றால் இவ்விடயத்தில் அமெரிக்க நலன்களின் முக்கியத்துவத்தை விளங்குவதில் சிரமங்கள் இரா.

உலகில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரான் முக்கியமானது. அதிலும் குறிப்பாக எரிவாயு உற்பத்தியில் ஈரானின் இடம் பிரதானமானது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உலகில் இயற்கை வாயுக்களை அதிகம் கொண்ட நாடு ஈரான். இந்த இயற்கை வாயுக்களும் எரிவாயுக்களையும் சர்வதேச சந்தையில் விற்பதில் முன்னிலையில் இருப்பது ரஷ்யா.

பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானால் இவற்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு விற்க முடிவதில்லை. ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதன் மூலம் இரண்டு விடயங்களை அமெரிக்கா சாதிக்க நினைக்கிறது. முதலாவது உக்ரேன் சிக்கலைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவிலிருந்து எரிவாயுக்களையும் இயற்கை வாயுக்களையும் வாங்க இயலாமல் செய்துள்ளன. எனவே, ஈரானுடனான உடன்படிக்கையின் விளைவாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் நீக்குவதன் மூலம் எரிவாயுக்களையும் இயற்கை வாயுக்களையும் ஈரானிடமிருந்து பெறமுடியும்.

இதனூடு ரஷ்யாவுடனான பொருளாதாரத் தடைகளை நீட்டிப்பதன் ஊடு, ரஷ்யாவின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கல். இரண்டாவது முதன்மையான வழங்குனர் என்ற வகையில் உலக சந்தையின் எரிவாயுக்களினதும் இயற்கை வாயுக்களினதும் விலைகளை ரஷ்யா தீர்மானிக்கிறது. ஈரான் மீதான தடைநீக்கமானது ஈரானானது ரஷ்யாவின் சந்தைக்கு சவால் விடுக்கும் நிலையை உருவாக்கும்.

இது ஆசிய, கிழக்கு ஐரோப்பிய ஆபிரிக்க சந்தைகளில் ரஷ்யாவின் ஏகபோகத்தைக் கேள்விக்குள்ளாக்கும். நீண்டகால நோக்கில் ஈரானை விட ரஷ்யாவையே அமெரிக்கா பிரதான எதிரியாகக் கருதுகிறது.

இவ்வுடன்படிக்கையை எட்டுவதில் பிரதான தடைக்கல்லாக இருந்தது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை முற்றாக நீக்க மறுத்தமையாகும். இவ்விடத்தில் ரஷ்யாவின் வகிபாகம் முக்கியமானது. பொருளாதாரத் தடைகள் முற்றாக நீக்கப்படமாட்டாதெனின் பேசிப் பயனில்லை என்ற நிலைப்பாட்டை ரஷ்யா எடுத்தது. அமெரிக்க மைய உலகுக்கு மாற்றாக ரஷ்யா-சீனா இணைந்து உருவாக்கியிருக்கும் ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் முக்கிய பங்காளியாக ஈரான் இருக்கிறது. இவ்வமைப்புக்கு தலைமையை ரஷ்யா வழங்குகின்ற நிலையில் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதானது ரஷ்ய- ஈரானிய பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்தும். ஈரானுக்கான ரஷ்யாவினது தொடர்ச்சியான ஆதரவு ரஷ்யாவை நம்பிக்கையான பங்காளியாக்கியுள்ளது. இப்போது ரஷ்யக் கம்பெனிகள் ஈரானில் எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கெடுப்பது, தொழில்நுட்ப உதவிகள் பற்றிய பேச்சுக்கள் தொடங்கியுள்ளன. இவை ரஷ்யாவுக்கு அவசியமானவை. இதனாலேயே ரஷ்யா, இவ்வுடன்படிக்கைக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதன் மூலம் ரஷ்ய ஆதரவின்றி உலக விடயங்களில் முடிவெடுக்க இயலாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இவ்வுடன்படிக்கைக்கான ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவானது அவர்களது பொருளாதார நலன் சார்ந்தது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் எண்ணெய் வர்த்தகத்தில் நெருக்கடியை மறைமுகமாகத் தோற்றுவித்துள்ளன. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட முன், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எண்ணெய் விநியோக்கத்தில் 42 சதவீத சந்தையை ஈரான் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரான் அணுசக்தி உடன்படிக்கையானது அணுஆயுத உற்பத்தி சார்ந்த விடயங்களுக்கப்பால், பூகோள அரசியலையும் உலகப் பொருளாதார நலன்களையும் அடிப்படையாகக் கொண்டது. இதில் ஈரான் அடைந்திருக்கின்ற வெற்றி சொல்கிற செய்தி: உலக அரங்கில் வலியோர் எப்போதும் வெல்வதில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .