2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

இரட்டைக் குதிரைகளா சண்டிக் குதிரைகளா?

Thipaan   / 2015 ஜூலை 27 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்றத்தில் வசந்தமாக வீச வேண்டிய 'விவாதம்' என்ற சுதந்திரக் காற்றுக்கு மக்கள் பிரதிநிதிகளே பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஜூலை 22ஆம் திகதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டம் மூன்றாவது நாளாக முடங்கிப் போயிருக்கிறது. ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பிரயோகித்துள்ள இந்த 'நாடாளுமன்றம் முடக்கம்' என்ற அஸ்திரம் ஜனநாயகத்தின் அத்திபாரத்தை அசைத்துப் பார்க்கிறது.

கருத்து மோதல்கள், ஆழமான விவாதங்கள், அற்புதமான சுவாரஸ்யங்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் வாக்களித்தவர்கள் கேட்டுப் பெற வேண்டிய பொக்கிஷங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. கம்பீரமாக காட்சியளிக்கும் லோக்சபாவும், ராஜ்ய சபாவும் இன்றைக்கு அந்த அவையின் உறுப்பினர்களின் ஆர்பாட்டத்தால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

'நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும்', 'எதிர்க்கட்சி உரிமைகளின் காப்பாளராகவும்' திகழ்ந்த ஜி.வி. மவுளாங்கர் - சபாநாயகராக இருந்து நடத்திய நாடாளுமன்றமே இந்திய நாடாளுமன்றம். அதனால்தான் ஜவரஹர்லால் நேரு கூட அவரை, 'லோக்சபாவின் தந்தை' என்றே அழைத்தார். அப்படிப்பட்ட புகழ்பெற்ற அவையில் இப்போது எல்லாம் 'சபாநாயகர் இருக்கை நோக்கி முற்றுகை' என்பது சர்வசாதாரண நிகழ்வாகி விட்டது. 'கூட்டத் தொடரை நடத்த விடாமல் ரகளை' என்பது தினமும் நடக்கும் கூத்தாகி விட்டது.

சென்றமுறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது, '2ஜி அலைக்கற்றை', 'பொதுநலவாய விளையாட்டு ஊழல்', 'நிலக்கரி முறைகேடு', 'லோக்பால் மசோதா' - போன்ற விவகாரங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கசக்கிப் பிழிய, அப்போது எதிர்வரிசையில் இருந்த பாரதீய ஜனதாக் கட்சிக்கு கிடைத்தது. அப்போது ராஜ்ய சபையின் பா.ஜ.க. கட்சித் தலைவராக இருந்த அருண் ஜேட்லி (இப்போது நிதித்துறை அமைச்சர்), 'நாங்கள் நாடாளுமன்றத்தை இயங்க விடவில்லை என்கிறார்கள்.

இப்போது நாங்கள் செய்வதே (இயங்க விடாமல் இருப்பது) முக்கியமான நாடாளுமன்ற பணி' என்று பதிலடி கொடுத்தவர். குளிர் காலக் கூட்டத்தொடரை நடத்த முடியாததால், 1.50 கோடி ரூபாய் வீண் ஆகிறதே என்று அப்போது கேள்வி எழுப்பிய போது, 'இந்த நட்டத்தை விட 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாங்கள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பிரச்சினை எழுப்புவதால் அரசு முறையாக 3ஜி ஏலத்தை விட்டுள்ளது.

அதனால் அரசுக்கு லாபம்தான் ஏற்பட்டுள்ளது' என்று கூறி, நாடாளுமன்றத்தை பா.ஜ.க. முடக்குவதால் அரசாங்கத்துக்கு லாபம் என்று தன் வழக்கறிஞருக்கே உள்ள வாதத் திறமையை வெளிக்காட்டியவர் அருண் ஜேட்லி.

பா.ஜ.க. அன்று காங்கிரஸ§க்கு கொடுத்ததை இன்று காங்கிரஸ் பா.ஜ.க.வுக்கு திருப்பிக் கொடுக்கிறது. லோக்சபாவில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு பெரும்பான்மை இருந்தாலும் கடந்த 22ஆம் திகதியிலிருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டுள்ளன. 'ஐ.பி.எல். கிரிக்கெட் லலித் மோடி' விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரராஜே உதவியது எல்லாவற்றையும் முன்னிறுத்தி அவர்களை ராஜினாமா செய்ய வைத்தால் நாடாளுமன்றத்தை நடத்த அனுமதிப்போம் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாதம்.

அந்த விவகாரம் ஆறிப் போவதற்குள் அடுத்த விவகாரமாக மத்திய பிரதேச மாநிலத்தில் 'வியாபம்' முறைகேடு எதிர்க்கட்சிகள் கையில் சிக்கியது. மத்திய பிரதேசத்தில் அரசு பணி நியமனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வு போன்றவற்றின் முறைகேடுதான் 'வியாபம்'. 1990களில் தொடங்கிய இந்த முறைகேடு, 2015இல் பரபரப்பாகி விட்டது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் முதலமைச்சராக இருப்பவர் சவுகான். இந்த ஊழலில் அந்த மாநில ஆளுநர் ராம் நரேஷ்யாதவே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். 'லலித் கேட்'டை மிஞ்சிய இந்த 'வியாபம்' முறைகேடு, இந்திய அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள், சாட்சிகளாக இருப்பவர்கள், புலன் விசாரணை செய்யும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்து 'மர்மமான' முறையில் மரணம் அடைந்தது 'வியாபம்' ஊழலை இந்திய வீதிகளுக்கு இழுத்து வந்து விட்டது. இப்போது 'வியாபம்' ஊழல் புகார்களை விசாரிக்கும் பொறுப்பை இந்திய உச்சநீதிமன்றமே தலையிட்டு சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விட்டது.

இந்த 'வியாபம்' முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய பிரதேச முதலமைச்சர் சவுகான் - ராஜினாமா செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் புதிய கோரிக்கை. இது தவிர சட்டிஷ்கர் மாநிலத்தில் 'அரிசி முறைகேடு' புகாருக்கு பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் ராமன்சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன.

இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 'சுஷ்மா சுவராஜ்', 'வசுந்தரராஜே', 'சவுகான்', 'ராமன்சிங்' என்று பா.ஜ.க. மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தாலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விவகாரம்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 'லலித் மோடிக்கு உதவியதில் அவர் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்' என்று

காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேட்டியளித்தது நாடாளுமன்ற நிலைவரத்தை மேலும் கலவரமாக்கியிருக்கிறது. 'ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றும், 'பா.ஜ.க. அமைச்சர்கள் யாரும் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடவில்லை' என்றும், 'மாநில முதல்வர்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பக் கூடாது' என்றும் பா.ஜ.க. வலுவாக வாதிட்டு வருகிறது.

'நாங்கள் நாடாளுமன்றத்துக்குள் எப்படிப்பட்ட விவாதத்துக்கும் தயார்' என்று பா.ஜ.க. கூறுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியும் எதிர்கட்சிகளும், 'அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைப்பது மட்டுமின்றி, அதைச் செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த பிடிவாதத்தில் 'நாடாளுமன்ற ஜனநாயகம்', 'நிலம் எடுப்பு மசோதா', 'சேவை வரி விதிப்பு மசோதா' என்பது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தடுமாறி நிற்கின்றன. தேசியக் கட்சிகளாக இருக்கும் இந்த இரு கட்சிகளின் அரசியல் இந்திய நாடாளுமன்றத்தை திணற வைத்திருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இதுபோன்ற 'விவகாரங்கள்' எழுந்த போது 'ஏன் மௌனமாக இருக்கிறார்' என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியதுண்டு. அவரை 'மவுன் சிங்' என்றெல்லாம் பட்டப் பெயர் கொடுத்து அழைத்தது உண்டு. அந்த மன்மோகன் சிங்கின் பாணியை அப்படியே கடைப்பிடிக்கிறார் இப்போது பிரதமர் நரேந்திரமோடி என்ற குற்றச்சாட்டு எங்கும் கேட்கிறது. 

இந்த முறைகேடுகள், ஊழல்கள் குறித்து பிரதமர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதே தனி பிரசாரமாக மாறி விட்டது. 'எங்கே பிரதமரின் கருத்து' என்று ஏலம் போட்டுக் கேட்காத குறையாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல- மக்கள் கூட கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் இதுவரை மூன்று நாட்கள் எந்தப் பணியும் இல்லாமல், ஒத்திவைப்பு என்ற ஒரே நிகழ்ச்சிநிரலில் முடிந்து விட்டது. இனி, இன்று திங்கட்கிழமை மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும். அன்றைய தினமும் எதிர்க்கட்சிகளுக்கும்- ஆளுங்கட்சிக்கும் இதே மோதல் நீடித்தால், நாடாளுமன்றத்தின் பணிகள் முழுமையாக முடக்கப்படும் அபாயம் இருக்கிறது. 'நாடாளுமன்றத்தை செயல்பட வைக்க வேண்டியது' ஆளுங்கட்சியின் பணி மட்டுமா அல்லது எதிர்க்கட்சிகளும் அதற்கு பொறுப்பேற்க வேண்டுமா என்பதுதான் இப்போதை கேள்வி. பிரதமர் நரேந்திரமோடியைப் பொறுத்தமட்டில் 'எதிர்க்கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது' என்று வலியுறுத்திப் பேசுகிறார்.

ஆனால், முறைகேடுகள் குறித்த தன் கருத்தை சொல்ல மறுக்கிறார். இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு - நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகள் பற்றிக் கூறும் போது, 'உறுப்பினர்களின் திறமை, நாடாளுமன்ற விவாதத்தில் ஈடுபாடு, சுய கட்டுப்பாடு, பெரிய அளவிலான ஒத்துழைப்பு எல்லாம் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மிகவும் அவசியம்' என்றார்.

இதை வலியுறுத்திய முன்னாள் சபாநாயகர் மனோகர் ஜோசி, 'நாடாளுமன்றம் நடப்பதற்கு உறுப்பினர்களின் கண்ணியமும் கட்டுப்பாடும் முக்கியம்' என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுவரை இருந்த சபாநாயகர்களில் சமீப காலங்களில் இருக்கும் சபாநாயகர்கள் விவாதங்களை ஒழுங்கு படுத்துவதற்குப் பதில் தன் முன் வந்து முற்றுகையிடும் உறுப்பினர்களை சமாதானம் செய்வதற்கே பெரும் பகுதியான நேரத்தை செலவிட வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

இன்றைக்கு நேரு வழி நடக்கும் காங்கிரஸ் கட்சியும் சரி, இதற்கு முன்பு எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த பா.ஜ.க.வும் சரி 'நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை' அடியோடு மறந்து விட்டு அன்றைய அரசியலுக்கு என்ன தேவை என்பதை மட்டும் மையமாக வைத்து செயல்பட்டன. இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதனால், நாடாளுமன்ற முடக்கம் என்பது அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஏதோ சகஜமான ஒன்றாக இந்திய ஜனநாயகத்தில் மாறிவிட்ட கொடுமை அரங்கேறி விட்டது.

வாக்களித்த மக்கள் கன்னத்தின் மீது கையை வைத்துக் கொண்டு கவலையில் உறைந்து போயிருக்கிறார்கள். ஆளுங்கட்சியைப் பொறுத்தமட்டில் 'பிரச்சினைக்கு தீர்வு கண்டு' சுமூகமாக அவையை நடத்த அனுமதிப்பதற்குப் பதில் 'எங்களை நீங்கள் யார் கேட்க?' என்ற எதேச்சாதிகார பாணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருக்கும் வெங்கய்யா நாயுடு அனைத்து கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டியவர். அவரே, 'எங்கள் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது. எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது' என்று மனம் போன போக்கில் கருத்துச் சொல்லுகிறார்.

எதிர்க்கட்சியினரின் கருத்தைக் கேட்டு அதற்கு விடை காண்போம் என்று கருதாமல் 'காங்கிரஸின் வதேரா (சோனியா மருமகன்) முதல் குவத்ரோச்சி (போபர்ஸ் நாயகன்) வரையிலான முறைகேட்டை விவாதிக்கலாமா,' என்று ஏட்டிக்குப் போட்டி அரசியலில் ஆளுங்கட்சி குதித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் 'நாடாளுமன்றத்தை மூன்று தினங்கள் முடக்கி' ஒரு பாடத்தை பா.ஜ.க.வுக்கு கற்றுக் கொடுத்தோம் என்ற அளவில் இனி நாடாளுமன்ற ஜனநாயகத்தை செயல்பட வழி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் கிளம்பியிருக்கிறது. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த 'இரட்டைக் குதிரைகள்' போல் பணியாற்ற வேண்டும்.

ஆனால், அவை 'சண்டிக் குதிரைகளாக' இருக்கின்றன என்பது திருவாளர் வாக்காளர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய எம்.பி.க்கள் இதை உணருவார்களா?


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .