2025 மே 17, சனிக்கிழமை

தேசியப் பட்டியல் சர்ச்சை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

பதவி ஆசைதான், அரசியல் ரீதியாக ஒரு சமூகம் சீரழிந்து போவதற்கு காரணமாகி விடுகின்றது. எந்தக் குறுக்கு வழியிலாவது நாடாளுமன்றத்துக்குச் சென்றால் போதுமென சிலர் நினைக்கின்றனர். சமூகத்துக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட, பணமும் புகழும் சம்பாதித்து நீண்டநாள் அரசியலில் நிலைத்திருக்க வேண்டுமென அரசியல்வாதிகள் நினைப்பதால் அவர்கள் அரசியலின் புனிதத்தைக் கெடுத்துவிடுகின்றனர். தேர்தல் காலம் வந்துவிட்டால், இந்த ஆசைக்கு 'சாவி' (வைன்) கொடுக்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், எல்லா சிறுபான்மை கட்சிகளும் தனித்துப் போட்டியிடாமையால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வேட்பாளர்களையே தம்முடைய கட்சி சார்பில் நிறுத்த முடிந்திருக்கின்றது. தனித்துப் போட்டியிடும் கட்சிகள் வெல்வதற்காகவே சில வேட்பாளர்களையும் அதேபோல் சில 'டம்மி' வேட்பாளர்களையும் கொண்டு தம்முடைய வேட்பாளர் பட்டியலை வழக்கம் போல பூர்த்தி செய்திருக்கின்றன. பெரும்பான்மைக் கட்சியின் கீழ் போட்டியிடும் சிறிய, சிறுபான்மை கட்சிகள் தமக்கு வழங்கப்பட்ட கோட்டாவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சிலரை மட்டுமே களத்தில் இறக்கியிருக்கின்றன.

இதற்கப்பால், வேட்பாளராக போட வேண்டிய நிலையிலும் வாய்ப்புக் கிடைக்காமல் போனவர்களையும் அதேபோல் வேட்பாளராக போட்டியிட்டால் வெற்றிபெறமாட்டார்கள் என்றபோதும் எம்.பி. பதவி கொடுக்கப்பட வேண்டியவர்களையும் அதிகமதிகம் உள்ளடக்கியதாக தேசியப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட்;டுள்ளது. இந்நிலையிலேயே, தேசியப் பட்டியல் தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் பொருந்திய ஓர் அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டிருக்கின்றார். தேர்தல் சட்ட விதிமுறைகளை மிக இறுக்கமான முறையில் கடைப்பிடிப்பதில் பின்னிற்காத ஓர் அரச அதிகாரியான தேர்தல்கள் ஆணையாளர், இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை சர்ச்சைகளைத் தோற்றுவிக்கத் தொடங்கியிருக்கின்றது.

தேசியப் பட்டியல் என்பது உண்மையில் ஒரு பொன்னான வாய்ப்பாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைக் கொண்டுவந்த ஜே.ஆர். ஜெயவர்தன செய்த ஒரு நல்ல காரியமாக இதைக் குறிப்பிடலாம். படித்தவர்களும் சமூக அக்கறை உள்ளவர்களும் காசு செலவளித்து தேர்தலில் போட்டியிட மாட்டார்கள், மேடைபோட்டு பேசி வாக்குக் கேட்க அவர்கள் ஒருபோதும் விரும்பவும் மாட்டார்கள். பணவசதி இல்லாத சமூக சிந்தனையாளர்களுக்கு எட்டாக்கனியாகவும் அறிவாளிகளைப் பொறுத்தவரையில் ஒரு சாக்கடைபோலவும் அரசியல் இருந்தது எனலாம்.

ஆனால், ஒரு நாட்டின் நாடாளுமன்றத்துக்கு இப்படிப்பட்ட புத்திசாலிகள் தேவையாக இருந்தார்கள். எனவேதான் இந்த நிலைமையை மாற்றியமைத்து, அறிவாளிகளையும் நாடாளுமன்றத்துக்கு உள்வாங்க இடமளிக்கும் நியமன எம்.பி. முறைமையை ஜே.ஆர். அறிமுகப்படுத்தினார். கட்சிகளால் வேட்புமனு சமர்ப்பிக்கப்படும் போது தேசியப் பட்டியலும் முன்மொழியப்படுவதுடன், தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் கட்சிகள் அனைத்தும் பெற்றுக் கொள்ளும் வாக்குகளை நூற்று வீதாசாரமாகக் கொண்டு, மொத்தமாகவுள்ள 29 தேசியப் பட்டியல் எம்.பி.களும் கட்சிகளுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் இந்த முறைமை அமைந்திருப்பதை நாமறிவோம்.

படித்தவர்களையும் நல்லவர்களையும் உள்வாங்க வேண்டும் என்ற ஓர் உன்னத நோக்கத்துடனேயே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ முறைமை அமுல்படுத்தப்பட்டது. அல்லது, அதுவே இம்முறைமையின் நோக்கமென்று  அப்போதைய அரசாங்கம் காரணம் கூறியிருந்தது. அதனால் நல்ல பல தலைவர்களை நாடாளுமன்றம் கண்டது. கே.என்.சொக்சி போன்ற பல அறிவாளிகளின் மூளைகளை நாட்டின் நலனுக்காக பயன்படுத்தும் வாய்ப்பு கிட்டியது. ஏனென்றால், பெரும்பான்மை கட்சிகள் தேசியப் பட்டியலில் அவ்வாறான ஆளுமைகளின் பெயர்களையே பெரும்பாலும் குறிப்பிட்டும் இருந்தன.

ஆனால், கடந்த சில வருடங்களாக தேசியப் பட்டியலின் நிலைமை எவ்வாறு மாறிப் போயிருக்கின்றது என்பதற்கு நாமெல்லோரும் கண்ணால் கண்ட சாட்சிகளே. சிறுபான்மை அரசியலில் எம்.ரி.ஹசனலி மற்றும்

எம்.ஏ.சுமந்திரன் போன்றோரும் பெரும்பான்மை அரசியலில் ஓரிருவரும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு சென்றமையால் நியமன எம்.பி. முறைமையின் கௌரவம் கொஞ்சம் பாதுகாக்கப்பட்டது என்றாலும், பொதுவாக நோக்குகின்ற போது ஊழல் பெருச்சாலிகளும் போதைப் பொருள் கடத்தல் காரர்களும் தேர்தலில் தோல்வியுற்றவர்களும் குற்றவாளிகளும் நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கான பின்கதவாகவே தேசியப் பட்டியல் கூடுதலாக பயன்படுத்தப்பட்டது எனலாம்.

ஆகவே, தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படும் பிரதிநிதிகள் தொடர்பாக இறுக்கமான நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

விஷேடமாக, கடத்தற்காரர்களும் போதைப் பொருள் வியாபாரிகளும் மக்களால் நிராகரிக்கப்பட்டோரும் அதனூடாக நாடாளுமன்றத்துக்கு வந்து விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்போக்கு சக்திகள் குரல் கொடுத்து வருகின்றன.  இவ்வாறான நிலையில், தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கின்ற ஒரு காலப்பகுதியிலேயே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார். அதற்கமைய – 'தேர்தலுக்காக கட்சிகளின் சார்பில் சமர்ப்பிக்கப்படும் தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத நபர்களுக்கும், அத் தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கும் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. பதவி வழங்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ள ஆணையாளர், 'அவ்வாறு நியமிக்கப்படுவதை தடுப்பதற்கு இம்முறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், பெரும்பான்மை கட்சியுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இரு தேசியப் பட்டியல்கள் தருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதியளித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்திருக்கின்றது. இதற்கான உத்தேச தேசியப் பட்டியலில் அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையை சேர்ந்த ஒருவரை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளடக்கவில்லை. இது அப்பிரதேசத்தில் பெரும் சலசலப்பை தோற்றுவித்தது. பல தேர்தல்களில் தேசியப் பட்டியல் தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டு கைவிரிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மு.கா. ஒரு வேட்பாளரை நியமித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த ஊர் மக்களிடையே காணப்பட்டது.

எம்.பி. ஒருவரை தருவதற்கு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு உண்மையாக விருப்பமிருந்திருந்தால் அவ்வூரைச் சேர்ந்த யாரையேனும் தேசியப் பட்டியலிலாவது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று இன்னுமொரு கருத்தும் நிலவியது.

அட்டாளைச்சேனைக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கொடுக்க வேண்டும் என்பது உண்மைதான். என்றாலும் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் செயலாளரை தவிர, வேறு எந்த ஊரைச் சேர்ந்த யாரை முன்மொழிந்தாலும் மற்றைய பிரதேச மக்கள் அதிருப்தி அடையக்கூடும். உதாரணமாக அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் வழங்கினால், சாய்ந்தமருது மக்கள் எமக்கு தரவில்லையே என்பார்கள்.

இப்படி நிறைய உள்முரண்பாடுகள் ஏற்படும் என்று தலைவர் கருதியிருக்கலாம். ஆனால், அட்டாளைச்சேனைக்கு எம்.பி. வழங்கப்படவே வேண்டும் என்பதற்கான நியாயப்படுத்தலை ஏனைய பிரதேசவாசிகளுக்கு முன்வைக்கும் ஆளுமை தலைவரிடம் இல்லை என்ற முடிவுக்கும் சிலர் வந்திருக்கிருக்கின்றார்கள்.

ஆனால், மு.கா.வுக்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டது. எவ்வாறெனின், ஹக்கீமின் பழைய தோழனும் தற்கால அரசியல் எதிராளியுமான தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக, அதே ஊரைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவரைத் தேசியப் பட்டியில் போட்டிருக்கிறார். இவ்வாறு அதாவுல்லா முன்மொழிந்ததில் ஓரிரு உள்நோக்கங்கள் இருக்கலாம் என்றாலும், இந்த நடவடிக்கையால் முஸ்லிம் காங்கிரஸ். தர்மசங்கடத்துக்குள் சிக்கியது என்றே சொல்ல வேண்டும். மு.கா.வின் கோட்டையான அட்டாளைச்சேனையில், மக்கள் ஒரு தேசியப் பட்டியலுக்காக கட்சிமாறி வாக்களித்து விடுவார்களோ என்ற எண்ணம் மு.கா. தலைவருக்கு ஏற்பட்டிருக்கும் என்றால் மிகையில்லை.  இதனையடுத்தே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்று தலைவர் ஹக்கீம் வாக்குறுதியளித்துள்ளார். அவ்வூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டும் இந்த வாக்குறுதியை அவர் வழங்கியிருக்கின்றார். இது நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் பற்றிய வாதப்-பிரதிவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், மு.கா.வின் இவ் அறிவிப்பு, ஆதரவாளர்களிடையே சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

மு.கா.வின் இந்த அறிவிப்பை மாற்று முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சட்டப்படி அவ்வாறு செய்ய இயலாது என்று அவர்கள் வாதிடுகின்றனர். இல்லை இல்லை அவ்வாறு செய்ய முடியும், இதற்கு முன்னர் பலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஒரு தரப்பு பிரதிவாதம் செய்கின்றது. இவ்வாறான நிலைமையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் தேசியப் பட்டியல் முறைமை முறைகேடாக கையாளப்பட்டதை கருத்திற்கொண்டும் வேறுபல முக்கிய காரணங்களின் அடிப்படையிலுமே ஆணையாளர் இந்த அறிவிப்பை விடுத்திருப்பார். ஆயினும், மு.கா. தலைவர்- அட்டாளைச்சேனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி இதனால் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கின்றது என்று சொல்லலாம்.

சட்டமும் அதன் விதிமுறைகளும் மிக இறுக்கமானவை என்பதைப் போலவே, அதில் ஓட்டைகளும் சின்னச் சின்ன மயக்கங்களும் இருக்கின்றன. தேசியப் பட்டியல் பற்றியும் அவ்வாறான ஒரு குழப்பமே மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் தேசியப் பட்டியல் மூலம் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இராஜினாமாச் செய்த போது அன்றேல் வேறு காரணங்களால் அப்பதவியை அவர்கள் இழக்கும் போது, அதற்குப் பகரமாக தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிட்டிராத, போட்டியிடாத நபர்களும் தேசியப் பட்டியல் எம்.பி.யாகும் வரப்பிரசாதத்தைப் பெற்றிருக்கின்றார்கள். இது பல தடவை நடந்திருக்கின்றது. அதேமாதிரி, ஓரிரு சந்தர்ப்பங்களில் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடாத நபர்கள் நேரடியாக தேசியப் பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ§ம் அவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னர் மேற்கொண்டிருக்கின்றது.

இந்த அடிப்படையில் நோக்குகின்றவர்கள், தேசியப் பட்டியலில் யாரை வேண்டுமென்றாலும் கட்சியால் நியமிக்க முடியும் என்றும் அதற்கான ஏற்பாடு சட்டத்தில் உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஜனாதிபதி சட்டத்தரணியான மு.கா. தலைவர், சட்டம் பற்றி அறிந்திராமலா இவ்வாறான வாக்குறுதியை வழங்கியிருப்பார்? என்று ஒரு தரப்பு சொல்கின்றது. அப்படியென்றால்... தேர்தல்கள் ஆணையாளர் சட்டம் தெரியாத முட்டாளா? என்ற கேள்வியை மறுதரப்பு முன்வைக்கின்றது. சட்டத்தை கற்றறிந்தோர், இது பற்றிய புத்தகங்களை இப்போதுதான் மீண்டுமொருமுறை புரட்டத் தொடங்கியிருக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .