Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
'தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பதுடன் அவர்களின் அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேசியம் என்ற விடயத்துக்குள் அடிப்படைத் தேவைகள், பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்தும் அடங்குகின்றன. அனைத்தையும் சமாந்தரமாகக் கொண்டு செல்ல வேண்டும். இதனையே விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் வலியுறுத்தியுள்ளார். நான் கட்சி சார்ந்த பிரசாரத்தையே செய்கிறேன். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்குகள் கிடைக்குமா என்பதுக்கு அப்பால், அங்கஜனுக்கு வாக்குக் கிடைக்கும்' என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கூறினார்.
தமிழ்மிரருக்கு வழங்கிய சிறப்பு செவ்வியின் போதே அங்கஜன் இதனைக் குறிப்பிட்டார். அங்கஜனுடனான நேர்காணல் வருமாறு...
கே: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளில் உள்ளது என நினைக்கின்றீர்களா?
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பும் நேரடியாக ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நேரடியான பிரதிநிதியாக என்னைத் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி அனுமதித்துள்ளார். இது தொடர்பில் எவ்வித சந்தேகங்களும்கொள்ளத் தேவையில்லை.
கே: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ஷவை வைத்து பிரசாரம் செய்யும் அதே நேரத்தில், நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வைத்து பிரசாரம் செய்கின்றீர்கள். ஆனால், ஜனாதிபதியோ இந்தத் தேர்தலில் நடுநிலைமை வகிப்பதாக கூறியுள்ளார். இது எவ்வாறு சாத்தியமாகின்றது?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வைத்து நான் பிரசாரம் செய்யவில்லை. அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் எந்தவொரு இடத்துக்கும் செல்வதில்லையெனக் கூறினாலும், யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்து எனக்கு ஆதரவு தெரிவித்துச் சென்றுள்ளார். இந்நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளால் தான் வென்றேன் என்பதை அவர் மறுக்கவில்லை. அதற்கு விசுவாசமாக செயற்படவேண்டும் என்ற வகையில் அவரின் நேரடிப் பிரதிநிதியாக என்னை நியமித்து, தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு என் மூலம் நன்மை செய்வதை ஜனாதிபதி நோக்காகக் கொண்டுள்ளார்.
கே: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தற்போது வடக்கில் ஆதரவுள்ளதாக நினைக்கின்றீர்களா? எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு இருக்கின்றதா? வாக்குகள் கிடைக்குமா? என்பவற்றுக்கு அப்பால், அங்கஜனுக்கு வாக்குக் கிடைக்கும். சமூகத்துடன் ஒன்றிணைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நான் செயற்படுவதால் எனக்கு வாக்குகள் கிடைக்கும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நம்புகின்றேன்.
கே: கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தீர்கள். ஆனால், தற்போது அவர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்காமல் உள்ளீர்களே?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமைத்துவம் வகித்திருந்தார். அந்நிலையில் அவருக்கு நாங்கள் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். ஆனால், தற்போது மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவப் பதவிக்கு வந்துள்ளார். மக்களுடன் இணைந்து செயற்படுகின்றேன் என்ற அடிப்படையில், என்னை ஜனாதிபதி தெரிவு செய்துள்ளார். கட்சி சார்ந்த பிரசாரத்தையே நான் செய்கின்றேன்.
கே: தேசியம் தொடர்பான கட்சிகள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?
தமிழ் மக்களுக்காக தேசியத்தை ஒருவர் தான் கதைக்க வேண்டும் என்ற ஏகோபித்த உரிமை இன்னமும் ஒருவருக்கும் கொடுக்கவில்லை. அனைத்துத் தமிழர்களுக்கும் அந்த உரிமை உண்டு. தேசியம் பற்றி கதைப்பதற்கான உரிமை எனக்குண்டு. அடிப்படை அபிலாஷைகள் தான் தேசியம் எனப்படுகின்றது. உதாரணமாக பட்டதாரியொருவரின் தேசியம் வேலைவாய்ப்பாகவுள்ளது.
ஒன்றை இழந்து ஒன்றை ஏற்பதற்குத் தயாரில்லையென தேசியக் கட்சிகள் கதைக்கின்றன. இது சரியான முன்னெடுப்புக்களை ஏற்படுத்தாது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கூட, தீர்வுக்கு முன்னர் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தேசியம் கிடைத்தால் தான் மற்றவற்றைப் பெற்றுக்கொள்ளுவோம் என்று கூறுவது பிழை. அனைத்தையும் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
கே: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் முன்னர் கூட்டாகவிருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தற்போது உங்களுக்கு இணக்கப்பாடுகள் இருக்கின்றனவா? அவர்கள் தேர்தலில் ஆசனம் பெற்று, தென்னிலங்கையில் எந்தக் கட்சி வெற்றிபெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியும். அவ்வாறான நிலை உங்களுக்கு காணப்படவில்லை. இது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
நான் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி ஆவேன். தென்னிலங்கையில் எந்தக் கட்சி வென்றாலும் நான் ஓர் அமைச்சர் ஆவேன். ஐக்கிய தேசியக் கட்சி வென்றால் தேசிய அரசாங்கம் ஜனாதிபதியால் ஏற்படுத்தப்படும். மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வென்றால் தனியான நாடாளுமன்றம் உருவாகும். இரண்டையும் ஜனாதிபதியே செயற்படுத்தவுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 7 மாதங்கள் ஆகின்ற நிலையில், அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப்படாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரை நாடாளுமன்றத் தேர்தலில் பின்னர் சேர்த்துக் கொள்வார்கள் என்பது தொடர்பில் என்ன உறுதிப்பாடு உள்ளது?
கே: தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கவுள்ளீர்கள்? தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் எவ்வித எல்லைகளை நிர்ணயித்துள்ளீர்கள்?
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு நோக்கிச் செல்லும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து குரல் கொடுக்க நான் தயார். அதற்கு நான் ஜனாதிபதியுடன் இருக்க வேண்டும். அதற்கான ஆணையையே மக்களிடம் கேட்கின்றேன். அவ்வாறு ஆணை கிடைத்தால் வெளியில் இருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கும் விடயங்களை, நான் அமைச்சராக இருந்து ஜனாதிபதியிடம் கேட்க முடியும். தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இதனால் உள்ளிருந்து என்னால் கதைக்க முடியும்.
கே: வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்பது முக்கியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமது அரசியல் தீர்வு, தமது தேசியம் என்பவற்றுக்கு ஆதரவு தெரிவித்தே வாக்களிக்கின்றனர். இது தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன?
இது தொடர்பில் மாற்றுக் கருத்து இல்லை. நானும் அதைத் தான் கதைக்கின்றேன். நானும் மக்களின் அபிலாஷைகள் பற்றித்தான் பேசுகின்றேன். அரசியல் செய்பவர்களைவிட சேவை செய்பவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும். கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கு 9 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது 7 ஆசனங்களே உள்ளன. இதற்கு காரணம் சனத்தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும். இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இவர்களுக்கான வேலைவாய்ப்பை 9 ஆசனங்களுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்படுத்தத் தவறிவிட்டனர். வெளிநாடு சென்றவர்கள் இங்கிருந்தால் 9 ஆசனங்களும் அப்படியே இருந்திருக்கும். ஆசனங்கள் குறைந்தமையால் நிதி ஒதுக்கீடும் குறைவடையவுள்ளது.
கே: முன்னைய அரசாங்கத்துடன் நீங்கள் இணைந்திருக்கும் போது, மீள்குடியேற்றம், காணாமற்போனோரை கண்டறிதல், அரசியல் கைதிகள் விடுதலைகள் தொடர்பில் முழுமையான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இதனைச் செயற்படுத்த முடியாமல் அழுத்தங்கள் எதுவும் பின்னணியாக இருந்தனவா?
முன்னைய அரசாங்கத்தில் நான் வெறும் கட்சி அமைப்பாளராக மாத்திரமே இருந்தேன். அப்போது எனக்குப் பலம் இல்லை. இருந்தும் இந்த விடயங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியுடன் பேசினேன். ஆனால், எனக்கு அதைச் செயற்படுத்தும் அளவுக்கு பலமோ அதிகாரமோ இல்லை. தற்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு வருகை தந்த போது, நான் கேட்பது அமைச்சர்கள் கேட்பது போல இருக்கின்றது என்றும், அமைச்சராக வந்து கேட்கும்படியும் கூறியிருந்தார். எனக்கான மக்கள் ஆணையை ஜனாதிபதியும் எதிர்பார்க்கின்றார்.
கே: ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு, சமஷ்டி, 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் - இதில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு சரியானதாக நீங்கள் எதிர்பார்ப்பது எதனை?
இவைகள் அனைத்தும் அரசியல் கட்சிகள் சார்ந்த அபிலாஷைகளாகவே காணப்படுகின்றன. மக்களே இவற்றைக் கேட்கவேண்டும். தமக்குத் தேவையான தீர்வை மக்களே கொண்டு வரவேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
கே: தமிழ் மக்களின் அரசியல் நடவடிக்கை எந்த அடிப்படையில் இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?
இதுவரை காலமும் பேசி-பேசி செய்த அரசியல் இனிமேல் செல்லுபடியாகாது. எதிர்காலத்தில் செயற்பாட்டு அரசியல் தான் இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்பதில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மக்கள் விரும்புவது மாற்றத்தையே. செயற்பாட்டு அரசியலே எதிர்காலத்தில் செல்லுபடியாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
7 hours ago
7 hours ago