Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முருகவேல் சண்முகன்
ஒரு நாடு, இரண்டு தேசம் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இருக்கும் தமிழ்த் தேசிய முன்னணியை வைத்து அரசியல் செய்வது இன்றைய நிலையில் பொருத்தமானதும் பாதுகாப்பானதுமாக எங்களுக்குத் தெரியவில்லை. அவர்களும் அந்தச் சிந்தனையில் இருக்கவில்லை. கஜேந்திரகுமார், தனது முயற்சியிலே வெற்றி பெற்றால் எங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும் அவர்களுக்கு உண்டு என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் அக்கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான என்.வித்தியாதரன் தெரிவித்தார். தமிழ்மிரருக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியிலேயே அவர் மேற்படி குறிப்பிட்டார். குறித்த பேட்டியின் முழு விவரம் வருமாறு:
கே: உங்களது சடுதியான அரசியல் பிரவேசத்துக்கான காரணம்?
இது சடுதியானது அல்ல. போராளிகளை ஒன்றிணைத்து செயற்படுவது குறித்து ஒரு வருடத்துக்கு முன்பே தேசிய, யாழ். பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டிருந்தோம். ஜனாதிபதித் தேர்தலின் போது, குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக வெளிப்படையான செயற்பாடுகளை தவிர்த்திருந்தோம். அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த போது சம்பந்தன் ஐயா, 'நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது, நீங்கள் என்னோடு பேசுகையில் நான் அதை எதிர்த்தேனா, இல்லையே... நானும் அதை நல்ல நடவடிக்கை என்று கூறியிருந்தேனே' என்று தெரிவித்திருந்தார். எனவே, சடுதியான அரசியற் பிரவேசம் என்று சொல்லுவதற்கில்லை. இது உரிய காலத்தில், உரியமுறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.
கே: மேற்படி ஒருவருட காலப்பகுதியானது உங்களை மக்களிடையே கொண்டு செல்லப்போதுமானதா?
மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய புதிய தேவை இல்லை. போராளிகள் மக்களுடன்தான் இருந்தார்கள், மக்களோடுதான் இருக்கின்றார்கள். புதிதாக மக்களிடையே அரசியற்கட்சியாக வந்திருக்கின்றார்கள் என்ற விடயத்தைச் சொல்லவேண்டியிருக்கின்றது. தவிர இது ஒரு புதிய ஆரம்பம், புதிய விடயம் இல்லை. மக்களோடு மக்களாக இருந்தவர்கள் யுத்தத்தின் காரணமாக அவர்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தன. அவர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்கள் வெளியில் வந்துள்ள நிலையில் அவர்களின் பணி ஆரம்பமாயிருக்கின்றது. புதிய கட்சியாக வந்திருக்கின்றதென்பது அதனுடைய வடிவம்தான். புதிதாக இருக்கலாமே தவிர அவர்கள் மக்களோடு இருந்தவர்கள். ஆகவே, மக்களிடம் புதிதாக எடுத்துச் செல்வதற்கு நீண்ட காலம் தேவை. நீண்ட விடயம் என்று புதிய கட்சியாகப் பார்க்க வேண்டாம்.
கே: புதிய கட்சியாகப் பார்க்கவில்லை. ஆனால், அரசியற்களம் வேறு, போராட்டக்களம் வேறு. அரசியற்களம் என்று சென்று, உடனடியாக குறிப்பிட்ட குறுகிய காலப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கும் அளவு மக்கள் ஊடாட்டம் போதுமானதாக உள்ளதா?
உங்களுடைய கேள்வி ஒரு வித்தியாசமான கேள்விதான். போராட்டக்களம் வேறு, அரசியற் களம் வேறு என்றுதான் அவர்கள் போராடிய காலத்திலும் அரசியல் நடத்தினார்கள். அவர்களது அரசியற் கருவிகள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தது. அவர்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டமையால், அந்த அரசியற் கருவியை அவர்கள் பயன்படுத்துகின்ற, நேரடியாக கையாளுகின்ற நிலைமை இல்லாமல் போனது உண்மைதான். ஆனாலும், தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஒரு போதிய கால அவகாசம் காணாதென்பது, திடீர்த் தேர்தல்தான். நீண்ட காலமாக இருக்கின்ற கட்சிகளுக்கு இத்தகைய தேர்தலை எதிர்கொள்வது இலகுவாக இருந்திருக்கும். அரசியல் ரீதியாக போராட்டத்தில் ஒரு புதிய பாதைக்குள் வந்த போராளிகளுக்கு, இது குறுகியதென்றாலும் நான் நினைக்கின்றேன் அவர்களது செயற்பாடு மக்களைச் சந்திப்பதற்கு இந்தக் கால அவகாசத்துக்குள்ளேயே தங்களுடைய தொடர்பாடல்களினால், மக்கள் மனதில் அவர்களுக்குரிய இடத்தைத் தக்கவைத்து வெளிப்படுத்துவார்கள்.
கே: ஜனநாயக போராளிகள் கட்சி, முன்னாள் போராளிகளென்ற 12,000 வரையான எண்ணிக்கையான அனைவரையும் உள்வாங்கி அவர்களின் பிரதிபலிப்பாக செயற்படுகின்றதா? அல்லது குறிப்பிட்ட சில நபர்களின் கூட்டாக செயற்படுகின்றதா?
அது உங்களுடைய அர்த்தத்தைப் பொறுத்தது. இங்கே பல தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன. பல கட்சிகளின் பெயரிலே அந்தக்காலங்களில் எல்லாம் பல்லாயிரம் போராளிகள் இருந்தார்கள். இப்போது அவை டசின் கணக்கான ஆட்களை வைத்துக்கொண்டு கட்சிகளின் பெயரிலே வேறேதோ செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி யாரும் பேசுவதாக இல்லை. நான் முன்னாள் போராளிகள் இயக்கம் பலவற்றை பற்றிச் சொல்லுகிறேன். அவர்கள் எத்தனையாயிரம் பேரோடு இயங்கின. இன்று எத்தனையாயிரம் பேர் அவர்களில் அங்கத்தவர்களாகவும் போராளிகளாகவும் இருக்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும். ஆனால், இந்தப் போராளிகளைப் பொறுத்தவரை இது ஓர் ஆரம்பம்தான். 12,000 போராளிகளும் உடனடியாக வரக்கூடிய வழமையான நிலைமை இல்லை. முதலிலேயே இரண்டு போராளிகள் ஓர் இடத்திற் கூடியிருந்து அரசியல் செய்யலாம் என்ற விடயத்தை வெளிக்கொண்டு வருவது ஒரு முக்கியமான விடயம். யுத்தத்துக்கு பின்னர். அதைச் செய்யவேண்டிய அரசியற் தரப்புக்கள் அவர்களை வைத்து அரசியல் செய்ததே தவிர, அதைச் செய்யவில்லை. இப்போது
நூற்றுக்கணக்கிலே போராளிகள் ஒன்றிணைந்து வீடுவீடாக செல்கின்றார்கள். ஓர் இடத்தில் கூடியிருந்து அரசியல் பேசுகின்றார்கள். அதுவும் சிறைகளுக்குள்ளே வாடி, வதங்கி, மிக நெருக்கடியான கால கட்டத்தை எதிர்கொண்ட போராளிகள் ஒன்றிணையக்கூடிய சூழல் இருக்கின்றது. கல்யாண வீடு, செத்தவீட்டில் கூட அவர்கள் ஒன்றிணைந்து பேசலாம் என்ற நிலை இருக்கவில்லை என்ற மாயத்தோற்றம் இருந்தது. அதை உடைத்திருக்கிறோம். பல நூற்றுக்கணக்கில் திரண்டிருக்கிறார்கள். போராளிகளுக்கு உடனடியாக அரசியல் வேளைகளில் ஈடுபடுவதற்கு நெருக்கடி இருக்கின்றது. வாழ்வாதாரச் சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுடைய சிக்கல்களிருந்து அவர்கள் வெளிப்பட்டு அரசியல் செய்வதற்கான பாதை திறந்திருக்கின்றது. இது அவர்களுடைய அமைப்பு. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தேர்தலையொட்டிய பிரசாரம் அவர்களை பெரியளவில் இணைக்கப் பண்ணியிருக்கின்றது. இது ஒரு பெரிய விஸ்வரூப நிகழ்வுக்கான ஆரம்பம் என்று நினைக்கின்றேன்.
கே: உங்களிடம் கேட்டது 12,000 போராளிகளோடும் கலந்தாலோசித்த முடிவா என்று?
12,000 போராளிகளை இணைப்பதுக்கு நான், ஓர் இராணுவப் பிரதிநிதியாக இருக்க வேண்டும். நாங்கள் பகிரங்க அழைப்பு விட்டிருக்கின்றோம். பல
நூற்றுக்கணக்கில் போராளிகள் திரண்டு வருகின்றார்கள். அவர்கள் பிராந்திய ரீதியாக இணைகின்றார்கள். அவர்களுடைய கட்டமைப்பு ரீதியான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. போராளிகள் மாத்திரமல்ல போராளிகளினுடைய ஆதரவாளர்கள், போராளிகள் குடும்பங்கள், விடுதலைப் புலிகளோடு ஆதரவாக நின்ற எங்களைப் போன்ற பலதரப்பினர் இருக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் இணைத்து, கட்டமைப்பு ரீதியாக வருவார்கள். ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றால் நாட்டிலுள்ள 2 கோடி மக்களால் அங்கிகரிக்கப்பட்டவர் என்று பொருள் அல்ல, பெரும்பான்மையினரால் அங்கிகரிக்கப்பட்டிருக்கலாம். அது போன்றுதான் இதுவும். தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தில் முக்கியமான பங்குதாரர்கள் போராளிகள்தான். அவர்களைப் புறந்தள்ளி அரசியல் செய்யவேண்டுமென்று அவசியமில்லை. அவர்களைப் புறக்கணிக்க வேண்டிய அரசாங்கமே அவர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கியிருக்கின்றது.
கே: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட இடம் வழங்கப்படாமையை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி முன்வைக்கப்படும் படு மோசமான விமர்சனங்கள் பற்றி?
என்ன மோசமான குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறோம்?
கே: உங்கள் ஊடகப் பேச்சாளர் துளசி,
ரிஷாட் பதியுதீனை விட மோசமானவர்கள் தான் கூட்டமைப்பு என்று கூறியது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களே விடுதலைப் புலிகள்தான். அவர்களைச் சரியான திசையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. தேர்தலின் பின்னர், நாங்கள் வென்றதன் பின் அதைச் செய்வோம். கூட்டமைப்பை வழிநடத்துகின்ற பொறுப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? எவ்வாறு வழிநடத்துவது தொடர்பான தந்திரோபாயங்கள் எம்மிடத்தே உள்ளன. எங்கள் தேர்தல் பிரசாரக் களத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். எங்களுக்கு போராளிகள் அதிகம் உள்ள இடம் வன்னி. போராளிகள் அதிகமாக இருக்கிறார்கள் கிழக்கில். ஆனால், நாங்கள் அங்கெல்லாம் தேர்தலில் குதிக்கவில்லை. காரணமிருக்கின்றது. நாங்கள், தமிழர்களுடைய ஐக்கிய தேசிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு பங்கம் வரக்கூடாதென்று கவனத்திலெடுக்கின்றோம் என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவ்வளவு கரிசனையோடு இருக்கின்றோம் என்பதற்கு சான்று. தனிநபர்கள் தமது ஆயுட்கால கதிரையை தக்கவைத்துக்கொள்வதற்காக கூட்டமைப்பைக் கருவியாக வைத்துக்கொண்டு தவறாக வழிநடத்தப்படுகின்றதே என்பதுதான் எமது குற்றச்சாட்டு, ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்று அல்ல.
கே: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு தேர்தலில் இடம் வழங்க மறுத்திருந்த நிலையில், இன்னொரு தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நாடாதது ஏன்?
அவர்களது கொள்கை நிலைப்பாடு சம்பந்தமாக நாங்கள் எந்த இடத்திலும் விமர்சிக்கவில்லை. ஆனால், நாங்கள் இப்போது முன்னெடுக்கின்ற அரசியல் பணியைச் செய்பவர்கள் முன்னாள் போராளிகள். அவர்களுடைய அரசியல் எல்லைகள், வீச்சங்கள் பற்றி இன்றைய நிலையிலே எங்களுக்குள் ஒரு முடிவு இருக்கின்றது. அவர்கள் சாகத் துணிந்தவர்கள், தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வந்தவர்கள். ஆனாலும் ஒரு நாடு, இரண்டு தேசம் என்ற கொள்கை நிலைப்பாட்டிலே அவர்களை வைத்து அரசியல் செய்வது இன்றைய நிலையில் பொருத்தமானதும் பாதுகாப்பானதுமாக எங்களுக்குத் தெரியவில்லை. அவர்களும் அந்தச் சிந்தனையில் இருக்கவில்லை. கஜேந்திரகுமார், தனது முயற்சியிலே வெற்றி பெற்றால் எங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும் உண்டு.
கே: ஊடகங்களின் பிரதிபலிப்பும் எந்தளவில் உள்ளது?
ஊடகங்கள் சம்பந்தமாக எங்களுக்கு சில மனக்கவலை இருக்கின்றது. யாரை வைத்து ஊடகங்கள் வணிகம் பண்ணினவோ, அவர்களைக் கைவிட்டுவிட்டு, அவர்கள் அரசியல் வணிகம் நடத்துகின்றார்கள் என்ற கவலை எமக்குண்டு. ஆனாலும் இதைத் தாண்டி மக்களைச் சென்றடையக்கூடிய வழியை நாங்கள் முன்னெடுப்போம்.
கே: ஊடகங்களின் இவ்வாறான பிரதிபலிப்பானது உங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது?
நிச்சயமாக ஊடகங்களைத் தாண்டி செல்லுவது ஒரு நெருக்கடியான விடயமாக இருந்தாலும் கூட, எங்களுடைய பார்வையை மக்களுக்கு எடுத்துச் செல்வோம். மேலும், விளம்பரங்களை வளைத்துப் போடுவதற்கான நிதிப்பலத்துடன் நாங்கள் வரவில்லை.
கே: இளைஞர்களினுடைய வரவேற்பு?
இது அவர்களுக்கு புரிகின்றது. கடந்த காலம் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இளைஞர்களால் பெரிதும் வரவேற்கப்படும் அமைப்பாக போராளிகள் கட்சி இயங்கும் என்ற நம்பிக்கை என்னுடைய அனுபவத்தில் உண்டு.
கே: கட்சியை ஆரம்பிக்கமுன் சுவிட்ஸர்லாந்து, நோர்வேயில் நடந்த கூட்டங்கள் பற்றிய மர்மம் என்ன?
நான் வெளிநாடு சென்றது என்னுடைய புத்தக வெளியீட்டுக்காக. அங்கு புதிய கட்சி பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே நான் பதிலளித்தேன்.
கே: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பெயரிலேயே முன்னாள் போராளிகளைக் கூட்டி, கட்சி ஆரம்பித்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டுப் பற்றி?
இது மட்டுமல்ல, ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இயங்கும் புலனாய்வுத்துறையின் வழிகாட்டலில் இயங்குகின்றோம் என்ற குற்றச்சாட்டை சம்பந்தன் ஐயாவும் வைத்திருந்தார். இவையனைத்தும் எவ்வித ஆதரமுமில்லாமல் முன்வைக்கப்படும் அபத்தமான குற்றச்சாட்டு.
கே: எதிர்வரும் தேர்தலில் உங்களின் வெற்றிவாய்ப்பு?
நாங்கள் வெற்றிவாய்ப்பை மாத்திரம் நம்பி களத்தில் இறங்கவில்லை. மக்களிடையே போராளிகள் என்ற உரிமை இருக்கின்றது. மக்களிடையே போராளிகள் மீது இருக்கின்ற அபிமானத்தையும் உண்மைத் தன்மையையும் விளங்கப்படுத்தக்கூடியவாறு மக்களிடையே சென்றடைந்து உண்மையை சொல்லுவோமேயானால், யாழ். மாவட்டத்தில் அதிக ஆசனங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால், அதற்குரிய வசதி வாய்ப்புகள் இல்லாது இருக்கின்றது. தேர்தலில் வெல்வது, தோற்பதைத் தாண்டி 50 போராளிகள் ஓரிடத்தில் கதைக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம். இதுவே தேர்தலைத் தாண்டிய மிகப்பெரிய வெற்றி என்று நினைக்கிறேன்.
கே: நாடாளுமன்றத் தேர்தலின் பின் எதிர்காலத் திட்டங்கள்?
நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்தி கட்டுறுதியாக்க வேண்டும். மேலும், தென்னிலங்கையிலும் எங்கள்மீது நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கி, மக்களினுடைய உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு, நீண்டநோக்கிலே குறைந்தபட்சம் மூன்று தசாப்தங்களுக்காவது ஓர் இணக்கமான நிலை வரக்கூடிய தீர்வை நோக்கிய நகர்வை விட்டுக்கொடுப்போம். அதேநேரம், பேரம் பேசும் சக்தியுடனும் முன்னெடுக்கவேண்டும்.
கே: நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சி தோல்வியடையுமாயின், விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்கின்றார்கள் என்ற பரப்புரை எல்லா மட்டங்களிலும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில்?
இதற்காக தமிழர்கள் எல்லோரும் எங்களை வெல்லவைத்து, தங்கள் கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.
கே: தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக ஜனநாய போராளிகள் கட்சி எவ்வாறான தீர்வை முன்வைக்கின்றது?
இது நல்லதொரு கேள்வி. நாம் இது தொடர்பாக ஏற்கெனவே விவாதித்துள்ளோம். இது தொடர்பாக சரியான வார்த்தை, வடிவங்களில் வெளியாகவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது பற்றிக் குறிப்பிடவுள்ளோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
7 hours ago
7 hours ago