2025 மே 17, சனிக்கிழமை

அரசியல் (அ)நாகரிகம்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

என்ன மாதிரியான அரசியல் கலாசாரத்துக்குள் சிறுபான்மை சமூகம், விஷேடமாக முஸ்லிம்கள் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்றனர்? என்பது, நாகரிகமாக அரசியலை அணுகுகின்ற சமூக சிந்தனையாளர்கள் அனைவரினது மனதிலும் எழுந்துள்ள பொதுவான வினாவாகும்.

அரசியல்வாதிகளிடமும் நாகரிகமில்லை அவர்களுக்குப் போஸ்டர் ஒட்டுகின்ற, அவர்களுக்காக எதிர்க் கட்சிக்காரனின் வாகனத்துக்கு கல்லெறிகின்ற தொண்டர்களின் நடத்தையிலும் நாகரிகத்தைக் காணக்கிடைப்பதில்லை. ஒருங்கிணைப்பாளர்கள், அமைப்பாளர்கள், மத்தியகுழு உறுப்பினர்களைப் பற்றி பெருமையாகச் சொல்வதற்கும் ஒன்றும் கிடையாது.

பல வருடங்களுக்கு முன்பு, விடுதலைப் புலிகள் எமது மக்களைக் கொல்கின்றார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இனவாதிகள் தம்மைத் தாக்குகின்றார்கள் என்று புகார் சொன்ன முஸ்லிம் சமூகம், இன்று - அரசியல் ரீதியாக தமக்குள்ளேயே பல்வேறு அடிப்படைகளில் பரஸ்பரம் அடித்துக் கொள்வதையும், சண்டை பிடிப்பதையும், வஞ்சகம் தீர்ப்பதையும் காணும் போது, என்னவோ போலிருக்கின்றது.

எந்த முஸ்லிம் கட்சியும் இலங்கை முஸ்லிம்களின் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தில் இப்போது இல்லை. அவ்வாறான அந்தஸ்தை அடைந்து கொள்வது - கட்சி தாவுவது போல, மேடைகளில் பேசுவது போல, அறிக்கை விடுவது போல இலகுவான காரியமும் இல்லை. 15 வருடங்களுக்கு முன்னதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிட்டத்தட்ட அந்த அந்தஸ்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது எனலாம். இருப்பினும் அதன் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ர‡ப், விமான விபத்தில் பலியானதையடுத்து மெதுமெதுவாக அந்தத் தோற்றப்பாடு மாற்றமடைந்து வந்திருப்பது போலவே தெரிகின்றது.

தலைவர் அஷ்ர‡ப் உயிரோடு இருந்த போது, அவரது நெருங்கிய சிநேகிதனும் அக்கட்சியின் ஸ்தாபகப் பொதுச் செயலாளருமாக மட்டுமன்றி இலங்கை முஸ்லிம் அரசியலில் தவிர்க்க முடியாத கூறாகவும் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் இருந்தார்.

 

ஆனால், அப்பேற்பட்ட சேகு இஸ்ஸதீன் பிரிந்து வந்து முஸ்லிம் கட்சியை ஆரம்பித்த போது கூட முஸ்லிம் காங்கிரஸ் ஆட்டம் காணவில்லை. 'மு.கா. என்ற பெரு விருட்சத்தை தன்னால் கூட அசைத்துப் பார்க்க முடிந்ததே தவிர வீழ்த்த முடியவில்லை' என்று சேகு கூட பின்னர் ஒரு மேடையில் குறிப்பிட்டிருந்தார்.  ஏனென்றால், அஷ்ர‡ப் என்ற ஆளுமை அக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தமை கட்சிக்கு அசுர பலத்தைக் கொடுத்திருந்தது.

ஆனால், அவர் மரணித்த பிற்பாடு - ஆரம்பத்தில் இணைத் தலைமைகளும் பின்னர் தனித் தலைமையும் மு.கா.வை வழிநடாத்தத் தொடங்கிய பிற்பாடு, நிலைமைகள் முற்றாக மாறிப் போயின. தலைமையுடன் அதிருப்தி அடைந்ததாகக் கூறிக் கொண்டு கட்சியை விட்டுக் கட்டம் கட்டமாக வெளியேறிய உறுப்பினர்களில் கணிசமானோருக்கு தலைமைப் பதவி மீதும் அமைச்சுப் பதவி மீதும் தணியாத ஆசை உருவாகி விட்டது.

ஆதலால் ஆளுக்கொரு 'காங்கிரஸை' ஆரம்பித்தார்கள். போதாக் குறைக்கு அஷ்ர‡ப் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த நுஆ கட்சியை அவரது துணைவியார் பேரியல் அஷ்ர‡ப் பொறுப்பெடுத்தார். சிலர் தேசியக் கட்சிகளுடன் உறவு கொண்டாடினார்கள். இவர்கள் எல்லோருமே பெரும்பான்மை சிங்கள கட்சிகளை அன்றி, தம்மை வளர்;த்த கட்சிக்கு எதிராக செயற்படுவதையே தமது அரசியல் எனக் கருதினர் என்றால் அது மிகையில்லை.

இத்தனை எதிராளிகளை எதிர்த்து களமாடுவது மு.கா. தலைமைக்கு சிக்கலானது என்றால் கூட, முக்கியமான சிலர் கட்சியை விட்டு வெளியேறியதால் 'அப்பாடா... ஒரு தலையிடி முடிந்தது' என்ற நிலையில் ஹக்கீம் இருந்தார். ஆனால், இவ்வாறு வெளியேறியவர்கள் அக்காலத்தில் சேகு இஸ்ஸதீனை விட சிறியவர்களாக கணிக்கப்பட்டாலும் கூட அவர்கள் வெளியேறியது மு.கா.வின் செயற்பாட்டுத் தளத்தில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், முன்னாள் அமைச்சர்களான அமீர்அலி, நஜீப் ஏ.மஜீட், ஹிஸ்புல்லா என்ற எல்லோரும் மு.கா.வின் வாக்குகளில் ஒரு பகுதியை உடைத்தெடுத்து தமக்கிடையே பங்கிட்டுக் கொட்டார்களா? என்பது விவாதத்துக்குரியது.

என்றாலும், மு.கா. தலைமை உட்பட இவர்கள் எல்லோரும் சேர்ந்து இன்று முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஐந்தாக, ஆறாக கூறு போட்டிருக்கின்றார்கள் என்பது வாதங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த உத்திதான் அவர்களை இன்றுவரையும் அரசியல்வாதியாக நிலைக்க வைத்திருக்கின்றது.

இவ்வாறு தனித்தனி அரசியல் கட்சிகளாக பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எத்தனையோ விடயங்களைச் சாதித்து விட்டதாக பட்டியலிட்டுக் கூறுகின்றனர். உண்மைதான் - சில கட்டடங்கள், தொழில் வழங்கல்கள், சில அபிவிருத்திகள், சில சேவைகளுடன் எத்தனையோ கட்சித் தாவல்கள், குழி பறிப்புகளை வெற்றிகரமாக மேற்கொண்டு விட்டார்கள்தான்.

ஆனால், இன்னும் அரசியல் நாகரிகத்தை அவர்கள் தமக்கிடையே வளர்க்கவில்லை. அவர்களுக்கே அரசியல் நாகரிகம் தெரியவில்லை என்றால் அவர்களது கட்சித் தொண்டர்களும் கூலிக்கு மாரடிக்கும் குண்டர்களிடமும் அதை எதிர்பார்க்க முடியாது.

பிற முஸ்லிம் கட்சியின் வேட்பாளரின் கூட்டத்துக்கு கூழ்முட்டை வீசுதல், அந்தக் கட்சித் தலைவர் போகின்ற வாகனத்துக்குக் கல்லெறிதல், ஒரு கட்சித் தலைவரை தம்முடைய ஊருக்குள் வர விடாது தடுத்தல், ஏனைய கட்சிக் கூட்டத்துக்கு மக்களை போகவிடாது தடுத்தல், மாற்றுக் கட்சி ஆதரவாளர்களின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் என எத்தனையோ அநாகரிகச் செயற்பாடுகள் தேர்தல் காலத்தில் கட்டவிழ்த்து விடப்படுவதை காண்கின்றோம்.

ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்றாலும் அவர் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருடைய எல்லாச் செயற்பாடுகளும் பிழையானவை என்பதும் எடுத்த எடுப்பில் அவரை 'கள்வன்' என விமர்சிப்பதும், அதுபோல தேர்தல் மேடைகளில் எதிராளிகளை கழுவி ஊற்றுவதுமே இந்த அநாகரிகத்தின் தொடக்கப் புள்ளி.

முஸ்லிம் அரசியல்வாதிகள் எத்தனையோ விடயங்களில் முன்னேறி இருக்கின்றார்கள். அவர்களுடைய பதவியும், செல்வமும் பொருளாதார வசதியும் முன்னேற்றம் கண்டிருக்கின்றது. தலைவர் அஷ்ர‡ப் பயணம் செய்த கறுப்புநிற 2 ஸ்ரீ ஹில்மன் காரில், அவரது சிஷ்யர்கள் என்று கூறிக்கொள்ளும் எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் இன்று உலா வருவதில்லை. மாறாக ஹெலிகொப்டரில் சென்று வாக்குக் கேட்குமளவுக்கு நிலைமைகள் முன்னேற்றமடைந்திருக்கின்றன.

எனவே, அவர்களால் போஷிக்கப்படும் அரசியல் கலாசாரமும் நாகரிகம் நிறைந்ததாக மாறியிருக்க வேண்டும். ஆனால், இன்று வரைக்கும் அது இறங்குமுகமாகவே இருப்பது கவலைக்குரியது.

இது முஸ்லிம் அரசியலின் தொட்டிற் பழக்கம் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான் -  அஷ்ர‡புக்கு முன்னரான அரசியல்வாதிகளின் காலத்திலேயே இதனையொத்த அரசியல் செயற்பாடுகள் நாடெங்கும் இருந்திருக்கின்றன என்பதை வரலாறு சொல்லித் தருகின்றது. மறைந்த தலைவருக்கும் சேகு இஸ்ஸதீனுக்கும் இடையில் கூட இவ்வாறான ஒரு பிற்போக்கு அரசியல் இருந்திருக்கின்றது. ஆனால், அது மிகவும் குறுகலானது.

பெரும்பாலும் சேகுவின் சொந்த ஊருக்குள் அது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், அந்த மாமனிதரின் பாசறையில் வளர்ந்ததாகச் சொல்லிப் பெருமைப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள்- அவரிடமிருந்த எந்த நல்ல முன்மாதிரிகளையும் கடைப்பிடிக்காமல் இவ்வாறான சில பலவீனங்களைக் கடைப்பிடித்து தமது ஆதரவாளர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனரா என்ற சந்தேகம் இங்கு நியாயமாக எழுகின்றது.

அதாவுல்லாவின் ஊருக்குள் ரவூப் ஹக்கீம் செல்ல முடியாதிருப்பதும் முஸ்லிம்

காங்கிரஸின் கோட்டைக்குள் அதாவுல்லா சென்றால் கல்லெறிவதும், ரிஷாட் பதியுதீனின் வாகனத்துக்கு மு.கா.ஆதரவாளர்கள் கல்லெறித் தாக்குதல் நடாத்துவதும்,

ரிஷாட்டின் ஆதரவாளர்கள் ஹக்கீமைப் பேசவிடாது கூட்டத்தைக் குழப்ப முற்படுவதும் இன்று வரைக்கும் - அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது. யதார்த்தமாக நோக்கினால், பல அரசியல்வாதிகள் தமது எதிராளிகள் குறித்து வசைபாடுவார்களே தவிர அவர்களது கூட்டத்தைக் குழப்புமாறு அல்லது வாகனத் தொடரணிக்கு கல் வீசுமாறு உத்தரவிடுவதோ, அல்லது குண்டர் கூட்டத்தை ஏவி விடுவதோ கிடையாது.

ஆனால், அவர்களுடைய மேடைப் பேச்சுக்களே குண்டர்களுக்கு உசுப்பேற்றி விடுகின்றது என்பதை மறுக்க முடியாது.

பல வருடங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் நடைபெற்ற மறைந்த மு,கா. தலைவர் அஷ்ர‡பின் கூட்டத்தை சேகு இஸ்ஸதீனின் ஆதரவாளர்கள் குழப்ப முற்பட்டதால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, இறப்பர் குண்டுகளால் படையினர் துப்பாக்கிச் சூடு நடாத்தினர். அதற்குப் பின்னர் ஒருபோது, அரசியல் பின்புலமொன்றில் பள்ளிவாசலுக்குள் ஒன்றுகூடிய மக்கள் மீது உள்ளூர் அரசியல்வாதியின் ஒப்புதலுடன் பாதுகாப்புத் தரப்பினர் பள்ளிக்குள் கண்ணீர்புகைக் குண்டு வீசியதுடன் பலரைக் கைது செய்தமை போன்ற வெட்ககரமான பல நிக ழ்வுகளும் இடம்பெற்றிருக்கின்றன.

அந்தளவுக்கு மிக மோசமான சம்பவங்கள் அதற்குப் பிறகு இடம்பெற்றது குறைவு என்று கூறலாம் எனினும், கல்லெறிவதும் கூட்டத்தைக் குழப்புவதும் குழு மோதலுமாக ஒருவித அரசியல் நாகரிகமற்ற தன்மை நமது சமூகத்திடையே மேலோங்கிக் காணப்படுகின்றது. உதாரணமாக சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்துக்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக சென்றிருந்த மு.கா. தலைவரைப் பேசவிடாது கூக்குரலிடப்பட்டது. மேடைக்குக் கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. கூட்டம் நடந்த இடம் ஒரு களேபர சூழலாக ஆகிப்போனது. இவ்வாறான சம்பவம் ஒன்றே இடம்பெறவில்லை என்று சிலர் மூடி மறைக்க முயன்றாலும் கூட்டம் குழப்பப்பட்டதும் பலர் தாக்கப்பட்டதும் உண்மையே.

அதன் பின்னர் சம்மாந்துறையில் இடம்பெற்ற மு.கா. கூட்டத்தை ரிஷாட்டின் ஆதரவாளர்கள் குழப்ப முற்பட்டிருக்கின்றார்கள்.

அதேபோல் இரு வாரங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த ரிசாட் பதியுதீனின் வாகனம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் ஹக்கீமின் வாகனத்துக்கும் இப்பகுதியில் வைத்து பாறாங்கல் வீச்சு இடம்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் சங்கமமாகியுள்ள அதாவுல்லாவின் அரசியல் செயற்பாடு குறுகலடைந்திருப்பதால் இம்முறை அவர் கல்வீச்சுக்கு இலக்காகவில்லை. ஆயினும் சில வருடங்களுக்கு முன்னர் சாய்ந்தமருது பிரதேசத்தின் ஊடாக அதாவுல்லாவின் பேரணி சென்று கொண்டிருந்த போது மாற்று முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த கும்பல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு, ஓட ஓட விரட்டியது.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட கூட்டத்துக்கு கல்லெறிந்த சமூகமும் நம்முடையதே. ஒரு குறித்த கட்சி ஆதரவாளன் இன்னுமொரு கட்சி தலைவர் மீது, உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்துவது அவர்களுடைய நாகரிகமற்ற பழக்க வழக்கமாகும். அதேபோலவே தாக்குதலுக்கு உள்ளாகும் தரப்பினரின் கடந்த கால நாகரிகமற்ற செயற்பாடுகளும் இதற்கு காரணமாகி விடுகின்றன.

எதிர்க்கட்சிக்காரனின் வாகனத்துக்கு அல்லது கூட்டத்துக்குக் கல்லெறிதல் என்பது ஒன்றும் பெரிய சாதனையோ சந்தோசப்படும் விஷயமோ அல்ல. உண்மையில் இதை எண்ணி ஆதரவாளர்களும் அவர்களது அரசியல் தலைமைகளும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மேற்கத்தேய நாகரிகம் பற்றிப் பேசுகின்ற நமது அரசியல்வாதிகள், வளர்முக நாடுகளின் ஒரே தேர்தல் மேடைகளில் எல்லா வேட்பாளர்களும் ஏறி எவ்வளவு நாகரிகமாக உரையாற்றி விட்டு, ஆர்ப்பாட்டமில்லாமல் இறங்கிச் செல்கின்றார்கள் என்பதைப் பார்த்து தமது பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

உண்மையான ஒரு கட்சி ஆதரவாளன் என்பவன் எல்லாக் கட்சியின் பிரசாரக் கூட்டங்களுக்கும் சென்று அங்கு பேசப்படும் விடயங்களை நாகரிகமாகக் கேட்டுவிட்டு திரும்பி வருகின்றவனே. அதேபோல் ஒரு நாகரிகமான அரசியல்வாதி என்பவர், தம்முடைய ஆதரவாளர்களை கிச்கிச்சு மூட்டுபவரல்ல. மாறாக -  எதிர்க்கட்சிக் காரனையும் கவரும் விதத்தில் நாகரிகமாக நடந்து கொள்கின்றவரே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .