Simrith / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்காது இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
மேலும், எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வரியில்லா வாகன அனுமதிகளும் ரத்து செய்யப்படும்.
கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச பங்களாக்களை என்ன செய்வது என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என பாராளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
"தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சருக்கும் இந்த வீடுகளை நாங்கள் ஒதுக்க மாட்டோம்," என்று அவர் கூறினார்.
வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களுக்குப் பதிலாக, பிரிவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விலை குறைந்த வாகனங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
"எம்.பி.க்களுக்கு வரியில்லா வாகன அனுமதியை நாங்கள் வழங்க மாட்டோம். அவர்களுக்கு செலவு குறைந்த, எரிபொருள் சிக்கனமான வாகனங்கள் வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.
கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பண ஆதாயங்களுக்காக வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அதிக தொகைக்கு பிறருக்கு அனுமதிகள் மாற்றப்பட்டன.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய பலன்களை இந்த முறை முதல் ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட 344 சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அல்லது அதை மீண்டும் வேறு வகையில் உபயோகப்படுத்தவும் அரசாங்கம் எத்தனிக்கிறது.
இவற்றில் சில வாகனங்களை ஏலம் விடுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமைச்சரவை பத்திரத்தை சமர்பிப்பார் என அவர் கூறினார்.
"குறிப்பிட்ட சொகுசு வாகனங்களில் வி8 வாகனங்களும் உள்ளடங்குகின்றன " என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .