2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அமரசிங்கவை அரவணைத்து அடுத்த தேர்தலில் குதிப்பேன்

George   / 2015 நவம்பர் 06 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு சகல கிராமங்களையும் உள்ளடக்கி புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வேலைத்திட்டம், இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் உள்ள 10 அரசியல் கட்சிகள் மற்றும் வெளியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியில் போட்டியிட, பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, 'முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விடுதலை வழங்கி அவர்களுக்கு குடியுரிமை வழங்கிய அரசாங்கம், குடிவரவு- குடியகல்வுச் சட்டத்தை மீறியதாக குற்றஞ்சாட்டி அவரை கைதுசெய்து நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றது' என அவர் கூறினார்.

இவர் 1988 மற்றும் 1989 ஆண்டு காலத்தில் நிலவிய அச்சுறுத்தல் காரணமாகவே நாட்டை விட்டுச்சென்றதாகவும், அவரை இந்நாட்டில் அரசியலில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் கைதிகள் விடுதலை

'இதேவேளை, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை தீபாவளிக்கு பின்னர் விடுதலை செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒரு பக்கம்,  முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளை பலவித குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தினந்தோறும், வாரந்தோரும் அழைத்து, அவர்களுக்கு மன ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து, இந்த நாட்டைப் பிரிக்க பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒரு தரப்பினருக்கு, விடுதலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறு குற்றச்சாட்டுகளில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள 40 பேர் முதற்கட்டமாக விடுவிக்கப்படவுள்ளதுடன் மற்றையவர்கள், இரண்டாம் கட்டமாக நீதிமன்றமன்றத்தின் ஊடாக விடுதலை செய்யப்படுவார்கள் என நீதியமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், போலி கையெழுத்து பத்திரத்தை தயார் செய்ததாகக்கூறி , ஜக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைதானவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கின்றது.

அவர்களை விடுதலை செய்யவேண்டும் என யார் கேட்டது? தமிழ் டயஸ்போரா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளின் பேரிலேயே இவர்களை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X