Freelancer / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று (20) நடைபெற்ற தமிழ் - சிங்கள புத்தாண்டு விசேட நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக் ஷ, தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தது ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்புடனேயே என்றும் ஆனால் இன்று அந்தப் பொய் வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் மீறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, அரசாங்கம் நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தியை முடக்கிவிட்டு, நாட்டில் டீசல் மாஃபியாவிற்கு வழிவகுத்துள்ளதாகச் சாடிய அவர், இதன் மூலம் மக்கள் மீது அநியாயமான மின்கட்டணச் சுமையும் வரிச்சுமையும் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதியில் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளதை தணிக்கை அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாகவும், இதனை மறைக்க அரசாங்கம் அதிகாரிகளைப் பலிகடா ஆக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இம்முறை மே தினக் கொண்டாட்டங்கள் குறித்துப் பேசிய நாமல் ராஜபக் ஷ, மே தினமானது வெசாக் போயா தினத்துடன் ஒத்துப்போவதால், அதனை ஒரு மத ரீதியான தினமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுஷ்டிக்கும் எனக் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களுக்கு ஆசி வேண்டி நாடெங்கிலும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும், வழமையான மே தினப் பேரணிகள் இம்முறை இடம்பெறாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய நாமல் ராஜபக்ஷ, உண்மையான குற்றவாளிகளை மறைத்துவிட்டு அரசியல் மேடைகளில் கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலத்தில் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெறும் அரசியல் நாடகங்கள் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கூறிய அவர், கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்துவதற்கான கிராமிய மட்டத்திலான மறுசீரமைப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என உறுதியளித்தார்.
உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும், இந்த நிர்வாகத் தோல்விகளால் மக்கள் படும் துன்பங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்திக் கூறினார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .