2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகள் தொடர்பில் சர்வ கட்சி குழு அமைப்போம்: மனோ

Thipaan   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், சர்வ கட்சிகள் அடங்கிய ஒரு குழுவை அமைப்போம் என்ற யோசனையை நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை அடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட கூட்டமைப்பு பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சருமான மனோ கணேசன்  நேற்று மாலை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். 

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,  

புதிய ஆண்டுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் எஞ்சியுள்ள பிரிவினர் விடுதலை பெறாதவர்களாகவே நுழைய போகின்றார்கள். கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கணிசமானோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதை மறைக்க முடியாது. ஆனால், இன்னமும் மீதமாயுள்ள மிக கணிசமானோரை விடுவிக்க நாம் புதிய முயற்சியில் இறங்க வேண்டும்.

இதுவரையில் ஒரு தமிழ் பிரச்சினையாக இருந்த இந்த விவகாரம் இனி ஒரு தேசிய பிரச்சினையாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட வேண்டும். எனக்கு தெரிய நடைபெறும் இந்த சகவாழ்வு யுகத்தில் நமது கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலான சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களும், எம்பிக்களும், முஸ்லிம்  கட்சி தலைவர்களும், எம்பிக்களும் உடன்பாடு காட்டியுள்ளார்கள். இவர்களில் பலரிடம் நான் ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் பேசியுள்ளேன்.

மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரை தவிர ஏனையோர் இதுபற்றி பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. கைதிகள் விடுவிக்கப்படுவதன் மூலம் தமது பாதுகாப்புக்கு  அச்சுறுத்தல் ஏற்படும் என ராஜபக்ஷ சகோதரர்கள் இருவரும் எடுத்து பேசி வருகிறார்கள். சிங்கள மக்களை தூண்டி விட்டு வருகிறார்கள். இதுவே நமது அரசாங்கம் இந்த விடயத்தில் தயக்கம் காட்டுவதற்கு காரணம் என நான் புரிந்துக்கொண்டுள்ளேன்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்த போது இதுபற்றி உரையாடினேன்.  கைதிகள் விடுவிக்கப்படுவதன் மூலம் எவரினாவது பாதுகாப்புக்கு  அச்சுறுத்தல் ஏற்படுமானால் அது மஹிந்த, கோட்டாபய  ஆகிய இருவரை விட யுத்தத்தை முன்னின்று நடத்திய தனக்கு தான் ஏற்பட வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார்.

இது மஹிந்தவின் பூச்சாண்டி என்றும், அவர்கள் நினைத்தப்படி நாட்டை இனி வழி நடத்த முடியாது என்றும், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் என்னிடம் சொன்னார்.

ஐ.தே.க, ஸ்ரீல.சு.க, ஜே.வி.பி மற்றும் மஹிந்த அணியை சார்ந்த வாசுதேவ நாணயக்கார, கம்யூனிஸ்ட், சமசமாஜ கட்சிகள், மற்றும் பாரம்பரியமாக இந்த விவகாரத்தில் முன்னின்று செயற்படும் நவசமாஜகட்சி, ஐக்கிய சமவுடமை கட்சி, முன்னிலை சோஷலிச கட்சி உட்பட கைதிகள் விடுதலை தொடர்பான சமூக அமைப்புகள் ஆகியவற்றின் நிலைப்பாடுகளை மனதில் கொண்டு இந்த பிரச்சினையை ஒரு தமிழ் பிரச்சினையாக மாத்திரம்  கொள்ளாமல், ஒரு தேசிய பிரச்சினையாக கொண்டு நடத்த வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

இதை தமிழ் கட்சிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு தமிழ் பிரச்சினையாக மாத்திரம் நாம் அணுகுவோமானால், நாம் தொடர்ந்து தமிழ் அரசியல் செய்யலாம். ஆனால், தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

எனது நிலைப்பாட்டை நான் கூட்டமைப்பு பேச்சாளர் எம்பி சுமந்திரனிடம் கூறினேன். அவர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் தனது தலைவரிடமும், கூட்டு கட்சிகளிடமும் பேசி எனக்கு அறிவிக்க வேண்டுகிறேன். அவ்வாறானால், இது தொடர்பான ஒரு சர்வகட்சி கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து ஏற்பாடு செய்யலாம். தேசிய சகவாழ்வுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் நான் இதுபற்றிய முன்னெடுப்புகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X