Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
“ஒன்றிணைந்த எதிரணியில் இணைந்துள்ள நான், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளேன்” என்று தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் நிமல் லான்ஸா, “கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டமையே, நான் பதவி விலகுவதற்கான பிரதான காரணமாகும்” என்றார்.
பிரதியமைச்சர் பதவியைத் துறந்தமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கை உள்ளிட்ட விடயங்களைத் தெளிவுப்படுத்தி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு, நீர்கொழும்பு கோல் டி சேன்டட் ஹொட்டலில் நேற்று (28) இடம்பெற்றது.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்துவதாகவும், ஊழலை ஒழிப்பதாகவும், திருட்டுகளை இல்லாமற் செய்வதாகவும், நல்லாட்சி அமைப்பதாகவும் கூறியே, இந்த அரசாங்கம் ஆட்சியமைத்தது. எனினும், அதற்கு எதிர்மாறாகவே, சகல விடயங்களும் இன்று நடைபெறுகின்றன.
“ஆகையால், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக, ஒன்றிணைந்த எதிரணியில் இணைந்து, நாடாளுமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவேன். அதற்காக, பதவி, வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரங்களைத் துறந்து, அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை நாட்டுக்குக் காண்பிக்க வேண்டும்.
“அதற்காகவே, பிரதியமைச்சர் பதவியிலிருந்து விலகினேன். மக்களுடன் இணைந்து மக்களுக்குச் சேவை செய்வதற்காகப் போராடவுள்ளேன்.
“நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இணை அமைப்பாளர்களில் ஒருவராக பொருத்தமற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அருட்தந்தை ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் மூன்று மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர், இணை அமைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தேன். பிரதியமைச்சர் பதவியிலிருந்து நான் விலகியமைக்கான பிரதான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
“பிரதியமைச்சர் பதவியிலிருந்து, நான் விலகுவதற்கான காரணங்களை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளேன். அந்த நியமனத்துக்கு, கத்தோலிக்க மதத் தலைவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்பதையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்” என்றார்.
மேலும், “என்னைப்போன்று எந்த ஓர் அரசியல்வாதியும் மக்களுக்கு உதவி செய்தவர்கள் இருக்கமாட்டார்கள். இதுபோன்று அதிக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நான் விலகவில்லை. பிரதியமைச்சர் பதவியிலிருந்தே விலகியுள்ளேன். ஒன்றிணைந்த எதிரணியில் இணைந்துள்ளேன். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிக்கப் போராடவுள்ளோம்” என்று அவர் அறைகூவல் விடுத்தார். மேலும், நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில், நாங்கள் வெற்றிபெறுவோம் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago