2026 மே 14, வியாழக்கிழமை

dd

“இன, மத, சாதி ரீதியான அமைச்சரவை அல்ல”

Simrith   / 2024 நவம்பர் 26 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மைய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில், கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

"நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சு அதிகாரங்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்," என்று அவர் கூறினார்.  

மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர் போன்ற பதவிகளை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார்.  

குறிப்பிட்ட இனங்கள், மதங்கள் அல்லது சாதிகள் அன்றி ஒட்டுமொத்த இலங்கை தேசத்துக்கும் சேவை செய்வதிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம் என அமைச்சர் ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.  

தற்போதைய நிலைமையை இனம் அல்லது மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று அவர் முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். 

ஒன்றிணைந்த இலங்கை தேசம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிய அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த அணுகுமுறையானது பிரச்சினைகளை மிகவும் திறம்பட கையாள்வதற்கு எமக்கு இடமளிக்கும்" என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .