2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இன்று பதவியேற்கிறார் ட்ரம்ப்: இலங்கைக்கும் அழைப்பு

Gavitha   / 2017 ஜனவரி 20 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், இன்று பதவியேற்கவுள்ளார். அந்நாட்டின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமாவின் 8 ஆண்டுகளைத் தொடர்ந்தே, புதிய ஜனாதிபதியாக இவர் பதவியேற்கவுள்ளார்.  

நவம்பர் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளின்டனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதான போட்டியாளர்களாக இருந்தனர்.

ஹிலாரிக்கே இலகுவான வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டாலும், ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி வெற்றிகிடைத்தது.  

ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் 48.2 சதவீத (65,844,954) வாக்குகளை ஹிலாரியும் 46.1 சதவீத (62,979,879) வாக்குகளை ட்ரம்ப்பும் பெற்ற போதிலும், ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்காளர் பிரதிநிதிகளில் பெற வேண்டிய 270 பிரதிநிதிகளுக்குப் பதிலாக 304 பிரதிநிதிகளை ட்ரம்ப்பும் 227 பிரதிநிதிகளை ஹிலாரியும் பெற்றுக் கொண்டனர்.  

பதவியேற்று நிகழ்வு, இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வொஷிங்டனில் அமைந்துள்ள கப்பிட்டொல் கட்டடத்திலேயே பதவியேற்பு இடம்பெறவுள்ள நிலையில், அங்கு புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், விலகிச் செல்லும் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் ஜனாதிபதிகள், உயர்நிலை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுன்னர். திறந்த வெளியிலேயே இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.  

பாதுகாப்பு ஏற்பாடுகளை, ஐ.அமெரிக்காவின் சுமார் 50 முகவராண்மைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ளன. சுமார் 28,000 பாதுகாப்புப் பிரிவினர், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.  

இந்தப் பதவியேற்பில், சுமார் 700,000 தொடக்கம் 900,000 பேர் வரை பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2008ஆம் ஆண்டில் பராக் ஒபாமாவின் பதவியேற்பில் கலந்துகொண்டவர்களில் பாதியளவு ஆகும். தவிர, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த குறைந்தது 50 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், செனட்டர்கள் ஆகியோர், இந்நிகழ்வைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.  

இந்நிகழ்வுக்கான பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, கலந்துகொள்பவர்களுக்கு அலைபேசிகள், கமெராக்கள், பணப்பைகள் ஆகியவற்றைத் தவிர, வேறு பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அனுமதி இருக்காது என்று அறிவிக்கப்படுகிறது.  

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சார்பில் ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .