2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இமாச்சலில் கனமழை: 51 பேர் உயிரிழப்பு; 22 பேர் மாயம்

Editorial   / 2025 ஜூலை 03 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்துவரும் நிலையில் இதுவரை பேர் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரைக் காணவில்லை.

இமாச்சலில் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக பெய்துவரும் பருவ மழையால் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலபிரதேச வருவாய் துறையின் கீழ் இயங்கி வரும் மாநில அவசர உதவி மையம் (எஸ்இஓசி) ஒட்டுமொத்த சேத மதிப்பீட்டு அறிக்கையை புதன்கிழமை (02) வெளியிட்டுள்ளது.

இதன்படி இமாச்சலின் 12 மாவட்டங்களில் கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 1 வரை வெள்ளம், நீரில் மூழ்குதல், நிலச்சரிவு, மின்னல் தாக்குதல், சாலை விபத்துகள் உள்ளிட்ட பேரிடர்களில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரை காணவில்லை. 103 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 84 கால்நடைகள் இறந்துள்ளன.

 

கனமழை தொடர்பான சம்பவங்களில் தனியார் சொத்துகள் மற்றும் பொது உட்கட்டமைப்புகளும் சேதம் அடைந்துள்ளன. மேலும் கனமழைக்கு 204 வீடுகள், 84 கடைகள், பசு கொட்டகைகள் மற்றும் தொழிலாளர் குடிசைகள் சேதம் அடைந்துள்ளன.

தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.88.03 லட்சம் ஆகவும் பொது உட்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் ரூ.283.39 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித் துறை, ஜல் சக்தி மற்றும் மின் துறை கட்டமைப்புகள் அதிக சேதம் அடைந்துள்ளன.

எஸ்இஓசி-யின் மாதவாரியான சேத அறிக்கையின்படி இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கனமழை தொடர்பான சம்பவங்களில் 132 பேர் உயிரிழந்துள்ளனர், 270 பேர் காயமடைந்துள்ளனர். 830 கால்நடைகள் இறந்துள்ளன.

இந்நிலையில் இமாச்சலின் சிம்லா, மண்டி, குல்லு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (01)  இரவு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவிலும் கனமழை பெய்தது. பேரிடர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .