2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

இலங்கையில் தேனிலவு ; தேனிலவில் விரிசல் ; இருவரும் சடலங்களாக மீட்பு

Janu   / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தேனி​ல​வை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிய ஜோடி, தங்கள் உயிரை வெவ்வேறு இடங்களில் மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு மற்றும் வரதட்சணை கொடுமையால் பெங்களூருவில் இளம்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது கணவரும் நாக்பூரில் தன்னுயி​ரை மாய்த்துக்கொண்ட  கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூருவில் தொடங்கிய ஒரு குடும்பத் தகராறு, இரண்டு மாநிலங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகளால் இரண்டு உயிர்களைப் பறித்து, ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் மிக விமர்சையாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் தேனிலவுக்காக இலங்கை சென்றிருந்தனர். அங்கு தங்கியிருந்தபோது, அந்தப் பெண்ணின் பழைய காதல் விவகாரம் குறித்து கணவருக்குத் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே டிசம்பர் 21-ம் திகதி அவர்கள் பெங்களூரு திரும்பினர். வீடு திரும்பிய பிறகும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை இடைவிடாது அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. குடும்ப கௌரவம் கருதி அந்தப் பெண் விவாகரத்து செய்ய விரும்பாமல் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டுள்ளார். ஆனால், மன உளைச்சல் தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். .

இந்தச் செய்தி பரவியதும், பெண்ணின் உறவினர்கள் கணவர் வீட்டின் முன் திரண்டு போராட்டம் நடத்தினர். பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தினர். பெண்ணின் மரணம் தொடர்பாகப் பொலிஸார்  வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அந்த இளைஞர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்குத் தப்பிச் சென்றார். அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, வெள்ளிக்கிழமை அன்று அவரும் தற்கொலை செய்து கொண்டார். அதே நேரத்தில், அவரது தாயாரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பெண்ணின் தாய் இது குறித்துக் கூறுகையில், "அவர்கள் செய்த தவற்றை உணர்ந்துவிட்டார்கள். என் மகள் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள். அவள் இல்லாமல் அவரால் வாழ முடியாது என்பதை உணர்ந்து அவரும் இந்த முடிவை எடுத்துள்ளார்" என கண்ணீருடன் தெரிவித்தார். அடுத்தடுத்து நடந்த இந்த  மரணங்கள் குறித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலப் பொலிஸார் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிறிய தகராறு மற்றும் குடும்பப் பிரச்சனை இவ்வளவு பெரிய உயிர் இழப்புகளுக்கு இட்டுச் சென்றிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X