Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 18 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது நாட்டின் அனைத்து இன மக்களையும் 'இலங்கையர்கள்' என மதிக்கின்ற எண்ணக்கரு, முப்படையினருக்கு அவசியமாகுமென, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின வரவு – செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“எமது நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் எட்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயத் தன்மைகள் முழுமையாகவே அகற்றப்படாதிருக்கின்ற சமூகச் சூழலையே காணக்கூடியதாக இருப்பதாக வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வந்து செல்கின்றவர்கள் குறிப்பிட்டு வருவது வழக்கமாக இருக்கின்றது.
“எனவே, இத்தகைய நிலைமைகள் அகற்றப்பட்டு, முழுமையான இயல்பு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
“அந்த வகையில், நான் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளவாறு, எமது பகுதிகளில் காணப்படுகின்ற யுத்தச் சுவடுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டியதுடன், அப்பகுதிகளில் முழுமையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
“தேசிய நல்லிணக்கத்துக்குள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமை போன்ற முக்கிய கட்டமைப்புகள் உள்ளடக்கப்பட்டு, அது, நேர்மையான செயல்வடிவங்களைக் கொள்கின்றபோது, எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பி, ஐக்கியமானதும், சமாதானதுமான நாட்டுக்குள் நிலைபேறான - நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியைச் சாத்தியமாக்க முடியும்.
“எனவே, தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டுமாயின், காணாமற்போனோர் சென்ற வழி, சென்றடைந்த இடம் என்பன கண்டறியப்பட்டு அதன் உண்மைகள் அவர்கள்தம் உறவுகளுக்கு அறியப்படுத்துதல் முக்கியமானது. இதில் காட்டப்படுகின்ற தாமதங்கள் எமது நாட்டின் முன்னேற்றத்துக்கான பாதகமாகும் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.
“அத்துடன், சமாதானமானதும், சுபீட்சமானதுமான நாட்டை மீளக் கட்டியமைப்பதற்கும், கடந்தகால துயரங்கள் மீள ஏற்படாத வகையில் தவிர்த்துக் கொள்வதற்குமாக எமது நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைப்பதற்கான இதயசுத்தியுடனான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
“அடுத்தாக, படையினரால் கையகப்படுத்திய தமது சொந்த காணி, நிலங்களை மீளக் கையேற்பதற்காக எமது மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
“அந்த வகையில் பார்க்கின்றபோது, சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வடக்கு மகாணத்தில் மாத்திரம் படையினரின் வசம் இருப்பதாகவே தெரிய வருகின்றது. ஆனால், சுமார் 30 ஆயிரத்துக்கும் குறைந்த அளவிலான ஏக்கர் நிலப்பரப்பே படையினர் வசம் இருப்பதாக சில தகவல்கள் அரச சார்பு நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
“அரச மற்றும் தனியார் காணிகள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டே இந்த கணக்கினை அவர்கள் காட்டுகின்றனர். இவர்கள் இங்கு காட்டுகின்ற அரச காணிகள் பிரதேச செயலாளர்களின் ஆளுகைக்கு உட்பட்டவையாகும். இது தவிர, வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் போன்றவற்றையும் படையினர் கையகப்படுத்திக் கொண்டுள்ளனர்.
“எனவே, இந்தக் காணிகளை உடன் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளே எமது மக்களுக்கான எதிர்கால சுபீட்சத்துக்கான ஒரு வழியாகும்.
“அடுத்தாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்ற ஒரு விடயமாகவுள்ள போதிலும், உரிய தரப்பினர் அது தொடர்பில் அக்கறை காட்டாது, தட்டிக்கழித்து வருகின்ற நிலைமைகளின் மத்தியில், யாரிடம் போய் முறையிடுவது என்ற கேள்வியே எமது மக்கள் மத்தியில் எஞ்சியிருக்கின்றது.
“இந்த நாட்டில் கடந்த காலகட்டத்திலே எமது மக்கள் இரண்டு வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தனர். ஒன்று வன்முறை சார்ந்த பிரச்சினையாகும். அது இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. அடுத்தது, அன்றாட, அடிப்படை மற்றும் அரசியல் உரிமைப் பிரச்சினையாகும். இது இன்றும் தொடர்கின்றது.
“எனவே, எதிர்வருகின்ற காலத்தையாவது நிலை மாற்றுக் காலமாக, உரிய முறையில் பயன்படுத்தி, எமது மக்களை அனைத்து வறுமைகளிலிருந்தும் கரைசேர்க்குமாறு, இந்தச் சபையினூடாக அனைவரிடமும் - மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், முற்போக்குவாதிகள், புத்திஜீவிகள், பொது மக்கள் என அனைவரிடமும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
“அத்துடன், எமது நாட்டில் அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்துக்கும் ஏற்ப, தேசிய பாதுகாப்பின் பூகோள அவசியம் கருதி படையினரும், சட்டம் ஒழுங்கினை நிலைப்படுத்த பொலிஸாரும் நிலை கொள்ளச் செய்யப்படுதல் வேண்டும்.
“அத்தகையதொரு நிலைப்பாடே எமது மக்கள் மத்தியில் 'நாம் இலங்கையர்கள்' என்ற மனப்பான்மையை வளர்ப்பதற்கு ஏதுவாகும். இந்த மனப்பான்மையானது முப்படைகளிடத்தேயும், பொலிஸாரிடத்தேயும் ஏற்படுதல் அவசியமாகும்.
“எமது நாட்டின் அனைத்து இன மக்களையும் 'இலங்கையர்கள்' என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியமாகும். நீண்டகால யுத்தமானது முப்படைகள் மத்தியில் இந்த எண்ணக்கருவை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்திருக்கலாம்.
“எனவே, அரசியல் தலைமைத்துவமானது இந்த எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதுடன், இந்த எண்ணக்கருவை முப்படைகளுக்கும் வழங்கி, அதனை தீவிரமாக மேலோங்கச் செய்வதற்கு முன்வர வேண்டும்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
11 May 2025
11 May 2025