2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் சிறையில் இருந்த போலாந்து நாட்டவர் தமிழகத்தில் கைது

Freelancer   / 2022 ஜூலை 26 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இந்தியா - தமிழகத்துக்கு சென்ற போலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் இலங்கையில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து , தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. 

தமிழகம், வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் நேற்று முன்தினம் (24) படகொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த படகு, காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்ய கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுழியோடிகள் பாவிக்கும் காலணி, படகுக்கு காற்று நிரப்பும் பம், ஜெக்கெட், சுழியோடிகள் கடலினுள் பாவிக்கும் கண்ணாடிகள், 18கும் மேற்பட்ட தண்ணீர் போத்தல்கள் மற்றும் மிதக்கும் பைகள் என சில பொருட்களும் படகுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 

இலங்கையில் இருந்தே இந்த படகின் மூலம் தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம் என தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் கொண்டு, கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் க்யூ பிரிவினர் என பல்வேறுபட்ட தரப்பினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அப்பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவி, ட்ரான் கமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன் போது , வேதாரண்யம் பகுதிக்கு அருகில் உள்ள ஆறுகாட்டு பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் போலாந்து நாட்டை சேந்தவர் எனத் தெரியவந்ததை அடுத்து, இலங்கையில் இருந்து கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்தினுள் ஊடுருவினார் என குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X