2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை மீது கழுகுப் பார்வை

George   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கோபிகிருஷ்ணா

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணையின் அறிக்கையை, நாளைய தினம் (புதன்கிழமை) கையளிக்கவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 30ஆவது அமர்வினைத் தொடக்கி உரையாற்றிய போதே, அல் ஹுஸைன் இவ்வாறு தெரிவித்தார்.

துருக்கிக் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுவனான அலன் அல் குர்டியின் மரணம் தொடர்பான உணர்வுமிக்க வார்த்தைகளுடன் இவ்வுரையை ஆரம்பித்த ஹுஸைன், பல்வேறு நாடுகள் தொடர்பாக தனது அவதானங்களைப் பதிவு செய்தார்.

இலங்கை தொடர்பாக இறுதிக்கட்டத்தில் உரையாற்றிய அவர், 'ஆறு வருடங்களுக்கு முன்னர், இலங்கையின் சிவில் யுத்தத்தின் இறுதி மாதங்களில், பாரதூரமான யுத்தக்குற்ற மீறல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை நாம் எதிர்கொண்டோம். அந்நாட்டின் நல்லிணக்கத்துக்கு அவசியமான படியாக, பொறுப்புக் கூறலின் தேவை தொடர்பாக சபையானது தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வந்தது' எனத் தெரிவித்தார்.

'மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுவதற்காக மார்ச் 2014 இல் பணிப்புரை வழங்கப்பட்ட முழுமையான விசாரணையின் அறிக்கையை, புதன்கிழமையன்று நான் வெளியிடவுள்ளேன். அதில் எனது பரிந்துரைகளையும் உள்ளடக்கியுள்ளேன்' எனக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், 'அதன் தீர்மானங்கள், மிகவும் பாரதூரமான இயல்பிலானவை' எனவும் தெரிவித்தார்.

ஜனவரி 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தெரிவாகியதன் பின்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளிப்படுத்தப்பட்டுள்ள

தூரநோக்கை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ், புதிய அரசாங்கத்தினது அர்ப்பணிப்புகளையும் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். எனினும், இந்த வரவேற்பு, இலங்கை அரசாங்கத்தின் மீதான நெகிழ்வுப் போக்கு அல்ல என்பதை அவர் உடனடியாகவே வெளிப்படுத்தினார்.

'ஆனால், முடிவுகளைத் தரக்கூடிய, கடந்தகாலத் தோல்விகளைக் கடந்து நிச்சயமாக முன்னோக்கிச் செல்கின்ற, மீள இடம்பெறாமலிருப்பதை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஆழமான நிறுவனரீதியான மாற்றங்கள் ஆகியவற்றை வழங்;குகின்ற பொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை உறுதிப்படுத்துவதற்கு, இலங்கையர்களுக்கு - அத்தோடு சபையின் நம்பகத் தன்மை - சபையானது கடப்பட்டுள்ளது' என்றார்.

இந்த உரையின் போது, சிரிய முரண்பாடு, சீனா, ரஷ்யா, மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சூடான், தென் சூடான், சோமாலியா, மாலி, எரித்திரியா, புருண்டி, ஈரான், மியான்மார், மாலைதீவுகள், மலேஷியா, அவுஸ்திரேலியா, நேபாளம், வெனிசுவேலா, டொமினிக்கன் குடியரசு, ஐக்கிய அமெரிக்கா, உக்ரேன், மோல்டோவா குடியரசு, பல்கேரியா, பிரான்ஸ், குவாட்டமாலா, ஹொன்டூரஸ், ஈக்குவடோர், மெக்ஸிக்கோ, பிரேஸில், ஈராக், யேமன், லிபியா, இஸ்ரேல் - பலஸ்தீன எல்லை, மொரோக்கோ, மேற்கு சஹாரா, வட கொரியா ஆகிய நாடுகளில் நிலவும் மனித உரிமைகள் மீறல்கள், சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X