Freelancer / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சுகாதார சேவை வலையமைப்பை ஒரு வினைத்திறனான மற்றும் மக்கள் சார்ந்த அமைப்பாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் வருகை தந்துள்ள உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர் குழுவிற்கும், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (20) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்த நிபுணர் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, நாட்டில் முதன்மை சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் "ஆரோக்கிய சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள்" திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, நாடு முழுவதும் ஆயிரம் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை நிறுவுவதற்கான திட்டம் மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகளை கணினி மயமாக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் நிபுணர்களுக்கு விளக்கினார். இந்த மையங்களை நிறுவுவதன் மூலம் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து கிராமப்புற மக்களுக்கு தரமான மற்றும் உடனடியான சுகாதார சேவைகளை வழங்குவதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த மையங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் முதியோர் பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் போன்ற சேவைகளின் விரிவாக்கம் குறித்தும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இலங்கை அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கி வரும் அதிகபட்ச சுகாதார சேவைகளை நிபுணர் குழு பாராட்டியுள்ளது.
, சுகாதார சேவைகளை டிஜிட்டல்மயமாக்குவதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்காக உலக சுகாதார அமைப்பு வழங்கக்கூடிய தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவு குறித்து ஆராய்ந்தது. இந்த ஆய்வுப் பயணத்தின் முதற்கட்டம் பேராசிரியர் டி. சுந்தரராமளின் பங்கேற்புடன் 2025 நவம்பரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன், தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்டத்தின் களப்பயணங்கள் மூலம் நாட்டின் சுகாதார அமைப்பின் ஒவ்வொரு அம்சமும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இறுதிப் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் ஜப்பான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச சுகாதார நிபுணர்கள் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிபுணர் குழு எதிர்வரும் 24 ஆம் தேதி வரை இலங்கையில் தங்கியிருந்து தமது ஆய்வுகளைத் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .