2026 மே 09, சனிக்கிழமை

ஒப்படைத்த சடலங்களை தூக்கிச்சென்ற அதிகாரிகள்

Niroshini   / 2021 மே 10 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜித்லால் சாந்தஉதய, ரொமேஸ் மதுஷங்க

இருவேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர், உயிரிழந்ததும் அவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின்னர், வீடுகளுக்கு வந்த சுகாதாரப் பிரிவினரால் சடலங்கள் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவங்கள் இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருவிட்டயைச் சேர்ந்த பெண்ணொருவர், உயிரிந்தார்.  அவரது சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, ஒரு சில மணித்தியாலங்களில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் வேறொரு நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டு, சாதாரண வார்டில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் முன்னரே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம்- நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.  சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், இறந்தவருக்கு கொரோனா தொற்று, பின்னர் உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவரது உறவினர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த யாழ். சுகாதார அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

4ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், 7ஆம் திகதி உயிரிழந்துள்ளார். எனினும், இந்தச் சடலம் உறவினர்களிடம் கையளிப்பதற்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

எனினும், அதன் ​அறிக்கையானது சடலத்தை அடக்கம் செய்யும் இறுதி நேரத்திலேயே கிடைத்துள்ளது. இதனையடுத்து கொரோனா சட்டத்திட்டங்களின் கீழ் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டுமென அதிகாரிகள் அறிவித்ததையடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பின்னர் சடலம் கொரோனா விதிமுறைகளின் கீழ் அடக்கம் செய்யப்பட்டதுடன், இந்த மரணச் சடங்கில் கலந்துகொண்ட 30க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .