2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

’கடுப்பாகியுள்ள மக்கள் வெடிக்கத் தொடங்குவர்’ ரணில் எச்சரிக்கை

Nirosh   / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றார்.

விவசாயிகள் செய்தவறியாது தவிக்கின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கு உடனடியான தீர்வு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். 

கொரோனா  தொற்றுக்கு உலக நாடுகள் அனைத்தும் முகம் கொடுத்திருந்தாலும்  2020 மற்றும் 2021 ஆண்டுகளில் பல நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தை காட்டியுள்ளதால், நாமும் இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் என வலியுறுத்தினார். 

எனவே, அரசாங்கத்துக்கு கடமையொன்று உள்ளது உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது. அல்லது இதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்று தீர்வொன்றை முன்வைப்பதற்கு.ஆனால்  இரண்டும் நடக்கவில்லை. இதனால் மக்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

இந்த நாட்டில் உணவு தட்டுபாடு ஒன்று ஏற்படவுள்ளதாக பலரும் எச்சரிக்கின்றனர்.  கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய தமிழ்- சிங்கள புத்தாண்டு காலத்தில் நாட்டில் உணவுத் தட்டுபாடு ஏற்படும். ஏனெனில்,நாட்டின் பல பிரதேசங்களில் பெரும்போக அறுவடை ஏனைய பெரும்போக அறுவடைகளை விட 60 சதவீதமே இம்முறை கிடைத்துள்ளது.   

இந்த நிலை ஏற்பட்டால் முகம் கொடுக்க கூடிய அரசியல் பின்னணி குறித்து யோசிக்க வேண்டும் என தெரிவித்த அவர், கடுப்பாகியுள்ள மக்கள் வெடிக்கத் தொடங்குவர். அவ்வாறு அவர்களின் கோபம் வெடிக்கும் போது, அது அரசாங்கத்தையும் பாராளுமன்றத்தையும் பாதிக்கும் என்றார்.

எனவே,  நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின்  அதனைத் தடுப்பது அவசியம். தற்போது அரசாங்கம் கடனுக்கு எரிபொருள்  மற்றும் உணவுப்பொருள்களை கொள்வனவு செய்ய இந்தியாவுடன் கலந்துரையாடலை முன்னெடுக்கின்றது. அந்த கலந்துரையாடலை உடனடியாக நிறைவு செய்யவும் என்றார்.அதேப்போல் இதற்காக இந்தியாவுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்களையும் நிறைவுசெய்யுங்கள் என்றார். 

எரிபொருள், உணவுப்  பொருள்களை  கடனுக்கு கொள்வனவு செய்வதால் வெளிநாட்டு கையிருப்பு  பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. எனினும்  தற்போதைய  பிரச்சினைக்கு இது தற்காலிக தீர்வாக அமையும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .