2021 மே 13, வியாழக்கிழமை

’கத்தோலிக்கர்களும் நேர்மையான முஸ்லிம்களும் முட்டாள்கள் அல்லர்’

Editorial   / 2021 மார்ச் 05 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மூலம், கத்தோலிக்கர்கள் - முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கப் பார்த்தவர்கள், இன்று முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய, கத்தோலிக்கர்களின் இடங்களை ஒதுக்கியுள்ளனர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, இதன் மூலம் கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றார்.

ஆனால்,  கத்தோலிக்கர்கள் முட்டாள்கள் இல்லை; நேர்மையான முஸ்லிம்களும் முட்டாள்கள் அல்லர் எனத் தெரிவித்த அவர், தீவிரவாதக் குழுக்களை உருவாக்குவதில் இந்த அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என்றார்.


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், சஹ்ரான் 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஏப்ரல் வரை பயணித்த இடங்கள், சந்தித்தவர்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலமாகத் திருப்தியடையாத முடியாது. வழிநடத்தியவர் நித்திரையில் இருக்கிறார். ஏனெனில் வழிநடத்தப்பட்டவர்கள் நித்திரையில் இருக்கின்றனர் என்றார்.

'இந்தத் தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்கள் குறித்து, சிறு குழந்தை கூட அறியும். ஆனால், இது யாருடைய தேவைக்காக நடத்தப்பட்டது? இதை வழிநடத்தியவர் யார் என்பதே பிரச்சினை' என்றார்.

விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட யுத்தம், இலங்கையில் தனிநாட்டைக் கோரியதாக அமைந்தது ஆனால், இந்தத் தாக்குதல் ஒப்பந்த அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.  இந்த ஒப்பந்தத்துக்கு யார் ஒத்தாசை புரிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனவே, இந்தத் தாக்குதலை வழிநடத்தியவர்கள் யார் என்பதற்கான பதில் குறித்து, 'இரட்டை நாக்குக் கொள்கை' கொண்ட மனிதரிடம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்பதாலேயே அனைவரும் ஒன்று சேர்ந்து, கூட்டுப் பிரார்த்தனை செய்து, இதன் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தருமாறு மன்றாடி வணங்குவதற்காக, ஞாயிற்றுக்கிழமை, கறுப்பு நிற ஆடையுடன் தேவாலயங்களுக்குச் செல்லுமாறு கர்தினால் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .