Editorial / 2026 ஜனவரி 02 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக மீனவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து வங்கக் கடலில் மீன்பிடிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை நடவடிக்கையால் பெரிதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகின்றன. அந்த வகையில் காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக ஏராளமான படகுகளில் புறப்பட்டு சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் வகையில் படிப்படியாக நகர்ந்த வண்ணம் இருந்த சூழலில், திடீரென இலங்கை கடற்படை வந்து சேர்ந்தது.
அப்போது படகுகளை சூழ்ந்து கொண்டு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர். இதையடுத்து சுற்றி வளைக்கப்பட்ட படகுகளில் இருந்த 11 மீனவர்களை கைது செய்தனர். அவர்களை தங்கள் படகுகளில் ஏற்றிக் கொண்ட இலங்கை கடற்படை அந்நாட்டு துறைமுகத்திற்கு அழைத்து சென்றது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் பல நூற்றாண்டுகளாக வங்கக்கடலிலும், பாக் நீரிணைப் பகுதியிலும் மீன்பிடித்து வருகின்றனர். இந்த சூழலில் கச்சத்தீவை தாரை வார்க்கும் வகையில் 70களில் இந்தியா – இலங்கை இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இங்கிருந்து தான் பிரச்சினை தொடங்கியதாக கூறப்படுகிறது. கச்சத்தீவு ஒட்டிய பகுதிக்கு சென்றால் எல்லை தாண்டி வந்துவிட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இடையில் இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. அப்போது இலங்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் தமிழக மீனவர்களுக்கு சிக்கல் ஏற்படவில்லை. இதனால் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் பெரிதாக பிரச்சினையின்றி மீன் பிடித்து வந்தனர். ஆனால் 2009ல் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தததும் சிக்கல் ஆரம்பித்தது. அந்நாட்டு அரசு தங்கள் கடல் எல்லையை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .