Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்தமருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திலீபன் தயாளினி (54) , தனது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர வைக்கும் பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமறைவாக இருந்த சந்தேக நபரையும் அவரது மனைவியையும் (விரிவுரையாளரின் மகள்) கைது செய்ய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் 'QR' குறியீடு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
விரிவுரையாளரின் 19 வயதுடைய மகள், 21 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்துள்ளார். எனினும், மருமகனின் நடத்தையில் அதிருப்தியடைந்த விரிவுரையாளர், மகளுக்கு ஆலோசனை வழங்கி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், மனைவியின் வீட்டுக்குச் செல்ல வேண்டாமென நீதிமன்றம் சந்தேக நபருக்குக் கட்டளையிட்டிருந்தது. இவ்வாறான சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விரிவுரையாளரையும் அவரது மகளையும் காணவில்லை என விரிவுரையாளரின் மகன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாண்டியன்தாழ்விலுள்ள அவர்களது வீட்டைப் பொலிஸார் சோதனையிட்டபோது, வீட்டின் ஓடுகள் கழற்றப்பட்டு கயிறு மூலம் உள்ளே நுழைந்ததற்கான ஆதாரங்களும், வெட்டப்பட்ட தலைமுடிகளும் கண்டெடுக்கப்பட்டன.
சந்தேக நபரைத் தேடி வந்த பொலிஸாருக்கு, அவர் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் (ATM) இயந்திரத்தில் பணம் எடுத்தமை முதற்கட்ட ஆதாரமாகச் சிக்கியது. அதனைத் தொடர்ந்து, திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக அவர் பயன்படுத்திய 'QR' குறியீடு மூலம் அவரது இருப்பிடம் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் திருகோணமலையில் வைத்து சந்தேக நபரையும் விரிவுரையாளரின் மகளையும் கைது செய்தனர்.
ஆரம்பத்தில் விரிவுரையாளர் பற்றித் தகவல் கூற மறுத்த இருவரும், பொலிஸாரின் தீவிர விசாரணையின் போது உண்மையை ஒப்புக்கொண்டனர். "எனது கணவர், அம்மாவைக் கழுத்து நெரித்துக் கொலை செய்தார்" என மகள் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தாயின் நகைகளைத் திருகோணமலையில் அடகு வைத்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மகளின் வழிகாட்டலின்படி, யாழ்ப்பாணம் - தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் வீசப்பட்டிருந்த விரிவுரையாளரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டனர். சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டதோடு, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா மற்றும் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். தற்போது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இக்கொடூரச் சம்பவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வர பொலிஸாருடன் இணைந்து விரிவுரையாளரின் மகனும் மேற்கொண்ட அதீத முயற்சி இப்புலனாய்வில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
5 minute ago
12 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
52 minute ago