2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போனோர் விவகாரம்: 'ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்'

George   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை அரசின் மோசடி நாடகத்துக்கு துணைபோகாமல், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடைபெறுவதற்கும், காணாமல் போனவர்கள் குறித்துத்தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'உலகின் பல நாடுகளில் பேரினவாத அரசுகளாலும், அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் படுகொலைகள் நடைபெற்ற காலங்களில் காணாமல் போனவர்கள் கதி என்ன? இரகசிய சிறைகளில் சித்திரவதை செய்யப்படுகின்றார்களா? அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உற்றார் உறவினர்களும், பாதிக்கப்பட்ட இன மக்களும் எழுப்பிய ஓலக்குரல் மனித உரிமை ஆர்வலர்களின் மனசாட்சியைத் தட்டியதால், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசு சாரா அமைப்புகளால்  அறிவிக்கப்பட்டதுதான் ஓகஸ்ட் 30 'காணாமல் போனோர் நாள்'.

இனப்படுகொலைக்கும், இன அழிப்புக் கொடுமைக்கும் உள்ளாகிய பகுதிகளில் காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய வேண்டியது, மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்பு ஆகும்.

அதுபோலவே செஞ்சிலுவைச் சங்கமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 189 நாடுகளில் இயங்குகின்ற  அவர்கள்தான், செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்கு உள்ளேயும் சென்று தகவல்களைச் சேகரித்துத் தருகின்றார்கள். அதற்கு உரிய அனுமதியை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வழங்கி இருக்கின்றது.

1992 டிசெம்பர் 18 ஆம் நாள் ஐ.நா. மன்றத்தின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் 47ஃ133 இன்படி, காணாமல் போனவர்கள் குறித்து உண்மையைக் கண்டறியவும், அவர்களைப் பாதுகாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மனித உரிமைகளை அழித்து, சிறைச்சாலைகளில் இரகசியமாக அடைத்து வைக்கின்ற கொடுமை 30 நாடுகளில் நடைபெற்று வருவதாக, ஐ.நா. மன்றம் தகவல் சேகரித்து உள்ளது.

2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள், பிலிப்பைன்ஸ் நாட்டில், அரசாங்கத்தின் உளவுத்துறை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் குறித்து நீதி கேட்டுப் போராட்டம் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி, காணாமல் போனோருக்கான அனைத்துலகக் கூட்டு அமைப்பு நீதிகேட்டுப் போராடியது.

2009 ஏப்ரல் மே திங்களில் இலங்கை அரசு நடத்திய தமிழ் இன அழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தாத அப்பாவித் தமிழர்கள், தாய்மார்கள், முதியோர்கள், குழந்தைகள் உட்பட ஒன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையை, ஐ.நா. பொதுச் செயலாளர் அமைத்த மர்சுகி தருஸ்மன் தலைமையிலான மூவர் குழு, ஆதார சாட்சியங்களோடு அறிக்கையாகத் தந்தது.

கவிஞர்கள் படைப்பாளிகள் கலைஞர்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் காணவில்லை. அவர்கள் கொல்லப்பட்டார்களா? வதை முகாம்களில் சித்திரவதைக்கு ஆளாகி உள்ளனரா? உண்மை வெளிவர வேண்டும்; இரகசியச் சிறைகளில் இருப்போர் விடுதலையாக வேண்டும் என்று தொடர்ந்து தமிழ் இனக் கொலைக்கு நீதி கேட்கும் நாம் கோரி வருகின்றோம்'

காணாமல் போனவர்கள் கதி என்ன என்பதை அறியும் வகையிலும், அனைத்துலக அமைப்புகளான ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு,  இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் மூலம் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கொழும்புக்குச் செல்கிறார். முன்னர் இவர் அங்கே சென்றபோது என்ன ஏமாற்று வேலைகளைச் செய்தார்களோ, அதைத்தான் இப்போதும் செய்யப் போகின்றார்கள்.

இலங்கை அரசின் மோசடி நாடகத்துக்கு துணைபோகாமல், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடைபெறுவதற்கும், காணாமல் போனவர்கள் குறித்துத்தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்ற வகையில் பான் கி மூன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்' என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X