2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

சம்பூர் மனித எலும்பு எச்சங்கள்: 6 ஆம் திகதி விசேட கூட்டம்

Editorial   / 2025 ஜூலை 30 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

சம்பூர் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 6 ந் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று மூதூர் நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (30) தீர்மானித்துள்ளது.

இக்கூட்டத்தில் தொல்பொருள் திணைக்களம்,தடயவியல் பிரிவினர்,சட்ட வைத்திய அதிகாரி,புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம், குற்றவியல் பிரிவினர், தேசிய நிலக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர்,பொலிஸ் திணைக்களம் என்பனவற்றின் அலுவலர்கள் நீதிவான் திருமதி.தஸ்னீம் பெளசான் தலைமையில் ஒன்று கூடி ஆராய்வது என்றும்,அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும்   தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தரப்புகளுக்கான அழைப்பை சம்பூர் பொலிஸார் அனுப்ப வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மூதூர் நீதிமன்றம் கடந்த  25 ஆம் திகதி வழங்கிய உத்தரவுக்கு அமைய   சட்டவைத்திய அதிகாரி, நீதிமன்றுக்கு புதன்கிழமை (30)  அறிக்கையை முன்வைத்தார்.

 கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்பு எச்சங்கள் மிகவும் பழமையானது என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.அதேவேளை தொல்பொருள் திணைக்களத்தினர் முன்வைத்த அறிக்கையின்படி இவ்விடத்தில் முன்னர் இடுகாடு ஏதாவது இருந்துள்ளதா? என்பதை துல்லியமாக கூற முடியாது உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தீர்மானம் ஒன்றிற்கு வருவதாயின் இந்த அகழ்வுடன தொடர்புடைய சகல தரப்புகளுடனும் இணைந்து கலந்துரையாட வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுப்பது என்று நீதிமன்று தீர்மானித்தது.

சம்பூர் பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் பிரிவினர் ஜூலை 19 ஆம்  திகதி அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன வெளிவந்தன. இதனை அடுத்து மூதூர் நீதிமன்ற உத்தரவின்படி அகழ்வு வேலைகள் இடைநிறுத்தப்பட்டன.அதனை அடுத்து 25 ந் திகதி இடத்தை பார்வையிட்ட நீதிவான் புதன்கிழமை (30) வரை அகழ்வை இடைநிறுத்த உத்தரவிட்டிருந்தார்.அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் பிரிவினர் அகழ்வை தொடர்வதா,இல்லையா? என்பதை தீர்மானிக்க நீதிமன்றுக்கு அறிக்கை தர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .