2021 மே 08, சனிக்கிழமை

சி.சி.டிக்குச் சொந்தமானதுதான் அந்த வெள்ளை வான்

Thipaan   / 2017 ஜூலை 25 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்துப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்குக் கொண்டுவரப்பட்ட வெள்ளை வான், கொழும்பு குற்றப் பிரிவினுடையது (சி.சி.டி) என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்கு, நேற்று (24) கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (24) அனுமதித்தார். 

சுகாதார அமைச்சுக்குள்அத்துமீறி நுழைந்து 870, 227 ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்யவதற்காக, கொழும்பு குற்றப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

 கொழும்பு 7 இலுள்ள தொழில்வாண்மையாளர் சங்கங்களின் அமைப்பின் (ஓ.பி.ஏ) கேட்போர் கூடத்தில், ரயன் ஜயலத், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துகிறார் என, தமக்குத் தகவல் கிடைத்ததாகவும் சந்திப்பு இடம்பெற்ற பின்னர், அவரைக் கைதுசெய்வதற்கு, கொழும்பு குற்றப் பிரிவினர் சிவில் உடையில் சென்று காத்திருந்ததாகவும் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்தில் அறிவித்தார். 

சந்திப்பு முடிவடைந்தவுடன், அவரைக் கைதுசெய்ய முயன்றபோது, சீருடையில் வரவில்லை என்றும் வெள்ளை வானில் வந்துள்ளதாகவும் கூறி, மாணவர்கள் தடுத்ததாகவும், பின்னர், கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி சீருடையில் வந்தபோதும், அவரைக் கைதுசெய்ய விடவில்லை என்றும் குறிப்பிட்டார். 

கொண்டு வரப்பட்ட வெள்ளை வான், கொழும்பு குற்றப் பிரிவினுடையது என்று கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி கூறியபோதும் அவர்கள், அதைக் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.   அரச அதிகாரிகளின் கடமையை செய்யவிடாது தடுத்தமை மற்றும் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் அவரைக் கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்குமாறும், குற்றப் பிரிவால் கோரப்பட்டது. 

சம்பவதினத்தன்று, ஆறு ஊடக நிறுவனங்களால் வீடியோ பதிவுசெய்யப்பட்டதாகவும், அதன் செப்பனிடப்படாத அசல் பிரதியைப் பெறுவதற்கு அனுமதிக்குமாறும் கோரப்பட்டது. 

ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைக் கைதுசெய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், அசல் பிரதிகளை பெறுவதற்கும் அனுமதி வழங்கியதுடன், வழக்கை ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X