2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சித்தாந்த ரீதியாக புலிகளை அழிக்கப் பாடுபடுகின்றோம்

Thipaan   / 2016 ஜனவரி 20 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

'யுத்த ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை, சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசாங்கம் பாடுபடுகிறது' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத யுத்தம், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று, யுத்தக்களத்தில்  தோற்கடிக்கப்பட்டது. எனினும், இந்நாட்டில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான அவர்களது சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மாற்றுதிறனாளிகளாக இருக்கின்ற இராணுவ வீரர்களுக்காக, அத்திடிய மிஹிந்து செத் மெதுரவில் 15 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை இராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'புதிய பொறுப்பினை கையிலெடுத்துள்ள அரசாங்கம், அப்பொறுப்பினை உரியவாறு நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்வேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பினை வலுவிழக்கச் செய்து, இராணுவ வீரர்களைப் பலவீனமடையச் செய்வதற்கு அரசாங்கம், நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின்போது குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்களின் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முற்றுமுழுதாகவே நிராகரிக்கின்றது.

தேசியப் பாதுகாப்புக்கான  தனது பொறுப்பினை புதிய அரசாங்கம் ஒருபோதும்  புறந்தள்ளுவதற்கோ தாமதப்படுத்துவதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனை முன்னரிலும் பார்க்க மிகவும் வலுவான முறையில் நடைமுறைப்படுத்துவது தனது நோக்கமாக உள்ளதென குறிப்பிட்டார்.

நாட்டுக்கு வெளியே உள்ள விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள், காணும் ஈழக்கனவை உடைத்தெறிவதற்கு சர்வதேசத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களும் இலங்கைக்கு இன்று கிடைத்துள்ளன.

தாய்நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுக்கும், நாட்டுக்கு வெளியில் இருந்து செயற்படும் சகலவிதமான செயற்பாடுகளையும் இல்லாதொழிப்பதற்கு புதிய அரசாங்கம் பாடுபடுகின்றது என்றார்.

யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் சில சம்பவங்கள் காரணமாக, இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சந்தர்ப்பங்கள், தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றை, பெரும்பாலான உலக நாடுகள் நிறுத்தியுள்ளதுடன், தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபின் அந்நாட்டு அரச தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவ்வாய்ப்புக்கள் மீண்டும் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X