2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சாலாவ முகாம் வெடிப்புகள் இன்னும் நீடிக்கும்

Thipaan   / 2016 ஜூன் 07 , பி.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் உள்ள களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தை இராணுவத்தால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு அவ்வப்போது வெடிப்புக்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலைமையானது இன்னும சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07), ஒன்றிணைந்த எதிரணியின்

எம்.பியான தினேஷ் குணவர்தன, கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ தொடர்பில், நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக எழுந்த தினேஷ் குணவர்தன எம்.பி, கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ, வெடிப்புச்சம்பவம் அதன் பின்னரான தொடர்ச்சியான அனர்த்தம் இராணுவப் பலத்தின் வீழ்ச்சியாகும்.

பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற வெடிப்புகளால் கிளம்பிய துகள்கள், ரவைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவி வீடுகளை பதம்பார்த்தன.

விஷேடமான ஆயுதங்கள், மேலெழுந்து பல கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள அவிசாவளை, ஹங்வெல்ல மற்றும் பூகொட பகுதிகளில் விழுந்தமை பெரும் பயங்கரமானது.

சாலாவ கேந்திர இராணுவ மையம், தீப்பிடித்து எரிந்தமை தொடர்பில் விசாரித்து, அதனைப் பிரசித்திப்படுத்த வேண்டும். பாதுகாப்பு வலயத்தின் செயற்பாடு முக்கியமானது. நட்ட மட்டுமன்றி, பாதுகாப்பு நட்டமும் முக்கியமானது என்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இக்கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சாலாவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரிப்பதற்கு முப்படைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான பொலிஸ் தரப்பு ஒத்துழைப்புகளை வழங்க பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தி அதன் பின்னர் அறிவிப்பது என்று திங்கட்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது.

இதற்கு முன்னரும் இலங்கையில் இவ்வாறான சம்பவமொன்று 2010ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதில் வெளிநாட்டுப் பிரஜையொருவரும் உயிரிழந்தார். ஆயுத களஞ்சியப்படுத்ததுக்கு கொங்ரீட் பங்கர் (பதுங்கு குழிமுறை) பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான கட்டமைப்புகளை ஏற்படுத்தி மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளுக்கு ஆயுத களஞ்சியசாலைகள் மாற்றப்பட வேண்டும்.

வெலிசறையில் இவ்வாறான கொங்ரீட் பங்கர் கூட்டமைப்புடன் ஆயுதக் களஞ்சியசாலை இருக்கின்ற போதிலும், அதுவும் மக்கள் நடமாட்டம் இருக்கும் சூழலியே அமைந்திருக்கின்றது.

தற்போதைய நிலைமையில் 09 கிராம சேவகர் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராம சேவகர் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் வீடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள வீதிகள் நாளை முதல் (இன்று) திறக்கப்படும். சாலாவ முகாமிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் வசித்தவர்கள், தங்களுடைய வீடுகளை இன்று சென்று பார்ப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வீடுகள், சொத்துக்களை பாதுகாக்க விசேட பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் இராணுவ தலைமையகத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவு, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் ஆகியன முன்னெடுக்கின்றன.

இந்தச் சம்பவத்தை சிலர், இனவாதத்தைத் தூண்டப் பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் அதனைக் கண்டேன். அவ்வாறு செய்யாது அனர்த்த்திலிருந்து பாதுகாப்பதற்குக் கைகோர்ப்போம் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .