2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அழைப்பு

J.A. George   / 2021 ஜனவரி 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் மக்கள் குடியரசு உயர் ஸ்தானிகர் தாரிக் முகம்மத் ஆரிபுல் இஸ்லாம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

இந்த நிகழ்வு, நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், பங்களாதேஷ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் அடையாளம் காணப்பட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தனது எதிர்பார்ப்பாகும் என்று கூறியுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள நாடுகள் என்ற வகையில் சமுத்திர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்போது, 2018 ஆம் ஆண்டிலிருந்து எந்தவொரு இலங்கை அரச தலைவரும் பங்களாதேஷுக்கு விஜயம் செய்யவில்லை என குறிப்பிட்ட ஆரிபுல் இஸ்லாம், தனது நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு முன்னர் விடுத்திருந்த அழைப்பை நினைவு கூர்ந்தார்.

அரச தலைவர்கள் மட்டத்திலான உறவுகளின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, தற்போதைய கடினமான காலம் முடிவடைந்ததும் அது பற்றி கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .