2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு

Simrith   / 2024 டிசெம்பர் 18 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு மாற்றும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த அரசாங்கம் இந்த அலுவலகங்களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டதுடன், இதன் மூலம் அவற்றின் தற்போதைய கட்டிடங்கள் கொழும்பு பாரம்பரிய கட்டிடங்களாக சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்யப்படுவதற்காக எத்தனிக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த திட்டம் தற்போதைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் மாதி​வெலவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் புதிய ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தது. இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ஆட்சியில் அதனை மீள்பரிசீலனை செய்து அதை முன்னெடுத்து செல்ல முடிவெடுக்கும் வரை சந்திரிக்காவுக்குப் பின் வந்த அரசாங்கங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நன்கு அறிந்த ஒரு தரப்பு, குறித்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு பறவைகள் பூங்காவிற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இதேபோன்ற சில திட்டங்களை புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளதுடன், நுவரெலியாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாவிற்கு பயன்படுத்துவதற்கான திட்டமும் இதில் ஒன்றாகும்.

அதனை தபால் திணைக்களத்தின் பிரத்தியேக பாவனைக்காக தக்கவைக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், புதிய அரசாங்கம், அரச பங்களாக்களை அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாக ஒதுக்காமல் பொருளாதார பயன்பாட்டிற்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X