2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

ஜெயிக்கப்போவது யாரு?

Janu   / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் கடந்த மாதம் மார்ச் 15-ஆம் திகதி சட்டமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9-ஆம் திகதி கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே நாளில், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 152 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இரண்டாம் கட்டமாக, 142 தொகுதிகளுக்கு   ஏப்ரல் 29 வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குமான வாக்கு எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக மே 4-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நிச்சயமற்ற நிலை தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதைக் கணித்துக் கூற முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. மற்றும் நா.த.க. ஆகியவற்றுக்கிடையே நான்கு முனைப் போட்டி நிலவினாலும், ஆட்சி அரியணையில் ஏறப்போவது யார் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. ஆனாலும், ஆளுங்கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் புதிய வரவான த.வெ.க. ஆகிய கட்சிகள் "நாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம்" என்று நம்பிக்கையுடன் கூறிவருகின்றன.

தி.மு.க-வின் நம்பிக்கை 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. எப்படித் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததோ, அதேபோல் 2021 மற்றும் 2026 தேர்தல்களில் தாங்கள் தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் எனத் தி.மு.க. நம்புகிறது. 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குச் செம்பரம்பாக்கம் ஏரியை உரிய நேரத்தில் திறந்துவிடாததே காரணம் என அன்றைய அ.தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது. எனினும், அடுத்த ஓராண்டில் நடைபெற்ற தேர்தலில் அது எதிரொலிக்கவில்லை; மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது அணி வாக்குகளைப் பிரித்ததால் அ.தி.மு.க-வின் வெற்றி எளிதானது எனக் கூறப்படுகிறது. அதேபோன்ற நிலையே இந்த முறையும் நடக்கும் எனத் தி.மு.க. கருதுகிறது. அதாவது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் வாக்குகள் தங்களுக்குச் சாதகமாக அமையும் என அக்கட்சி நம்புகிறது.

அ.தி.மு.க-வின் கணிப்பு 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி தங்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது போல, இந்தத் தேர்தலிலும் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக அ.தி.மு.க. கூறுகிறது. தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதே, இம்முறை பதிவாகியுள்ள 85.15 சதவீத வரலாற்றுச் சாதனை வாக்குகளுக்குக் காரணம் என அ.தி.மு.க. சுட்டிக்காட்டுகிறது.

த.வெ.க-வின் எதிர்பார்ப்பு தேர்தல் களத்திற்குப் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகமோ, 1967 மற்றும் 1977-ஆம் ஆண்டுகளில் நிலவிய அரசியல் அலைகளைப் போல இம்முறையும் ஒரு மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கிறது. 1967-இல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததையும், 1977-இல் தி.மு.க. ஆட்சியை முறியடித்து அ.தி.மு.க. அரியணை ஏறியதையும் போல, 2026-இல் த.வெ.க. ஆட்சியைக் கைப்பற்றும் என்று அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.

வெல்லப்போவது யார்? தற்போது தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளுமே வெற்றிப் பட்டியலில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பதவியேற்பு விழா குறித்த திட்டமிடல்களைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. எது எப்படியோ, மே 4-ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் போது, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது உறுதியாகிவிடும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .